தமிழகத்துக்கு 12 ஸ்மார்ட் நகரங்கள், 2-வது கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

‘‘தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மேம்படுத்த வேண்டும். ரூ.36,100 கோடியில் 2-வது கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவேண்டும்’’ என்று மத்திய அரசிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி விவாதம் நடந்தது. அப்போது, மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றை சிறப்பாகச் செயல்படுத்தி, நாட்டுக்கே முன்மாதிரியாகத் தமிழகம் விளங்கி வருவதாக வெங்கய்ய நாயுடு பாராட்டினார்.

அவரிடம் முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் சவ்வூடு பரவல் அடிப்படையில் 2 குடிநீர்த் திட்டங்களுக்கு (ரூ.1,372 கோடி மற்றும் ரூ.4,071 கோடி) மத்திய அரசு 80 சதவீத நிதி உதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, கோவை, சென்னை, நெல்லை, ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க உதவி புரியவேண்டும்.

தமிழகத்தில் குடிநீர் விநியோகம், மழைநீர் வடிகால், மேம்பாலங்கள், திடக்கழிவு மேலாண்மை போன்ற திட்டங்களுக்காக ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அனுப்பப்பட்டுள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திருவொற்றியூர் மெட்ரோ ரயில்

ரூ.3,770 கோடியில் மெட்ரோ ரயில் முதல் கட்டத் திட்டத்தை, திருவொற்றியூர், விம்கோ நகர் வரை நீட்டிக்க விரைவாக ஒப்புதல் தரவேண்டும். சென்னையில் ரூ.36,100 கோடியில் 3 தடங்களுடன் கூடிய மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்தை அமல்படுத்தவும் மத்திய அரசு ஒத்துழைப்புத் தரவேண்டும்.

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பாரம்பரியம் மிக்க நகரங்களின் மேம்பாட்டுத் திட்டத்தில் ஸ்ரீரங்கத்தையும் சேர்க்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

தவிர மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் பல்வேறு திட்டங்களை துரிதப்படுத்தக் கோரியும் கடிதம் கொடுத்தார். அதன் விவரம்:

* ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மற்றும் சென்னை மெகா சிட்டி திட்டத்தை ரூ.1,360 கோடியில் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு மத்திய அரசின் நிதியுதவி வேண்டும்.

* ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்க வேண்டும். ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற புதுப்பிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ.206 கோடி நிதியை அளிக்க வேண்டும். சென்னைக்கு 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவேண்டும்.

* தமிழகத்தில் ரூ.11,434 கோடியில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் 50 சதவீத நிதியுதவியை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

* வீட்டு வசதித் திட்டங்களில் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்க வேண்டியிருப்பதை மாற்றி, அத்திட்டத்துக்கான நெறிமுறைகளை திருத்த வேண்டும்,

மேற்கண்ட கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இத்தகவல், அரசு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE