சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்ததாக புகார்: கடலூர் விவசாயிகள் நூதனப் போராட்டம்

By ந.முருகவேல்

கடலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கியை அவர்கள் பெயரிலேயே கடன் பெற்று அவர்களுக்கே வழங்கி சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூரைச் சேர்ந்த விவசாயி கவியரசு, ரூ.3 லட்சம் கடன் பெற்றிருப்பதாகவும், அந்தத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தவறினால் சட்டப்படி நடவடிக்கை நேரிடும் என ஸ்டேட் பாங்க் நிர்வாகத்திடமிருந்து வந்த நோட்டீஸைக் கண்ட கவியரசு, பதறியடித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, நான் கடனே பெறாத நிலையில் எனக்கு நோட்டீஸ் வந்திருக்கிறதே என ஆதங்கப்பட்டுள்ளார்.

அதற்கு நீங்கள் தானே கையெழுத்திட்டு கடன் பெற்றுள்ளீர்கள், உங்கள் அக்கவுன்ட்டில் தான் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை மறுத்த கவிரயரசு, தான் கடன் எதுவும் பெறவில்லை எனக் கூறியுள்ளார். அதைப் பொருட்படுத்தாத வங்கி நிர்வாகம் நீங்கள் பணத்தை திரும்பச் செலுத்தும் வழியைப் பாருங்கள் எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து கரும்பு ஆய்வாளரிடம் சென்று முறையிட்டுள்ளனர். அவரோ, நோட்டீஸை ஆலை நிர்வாகத்திடம் கொடுத்துவிடுங்கள், அவர்கள் திரும்பச் செலுத்திவிடுவார்கள் என்று கூறி 4 மாதங்கள் ஆகியும் இதுவரை கடன் தொகை செலுத்தப்படவில்லை எனவும், இதனால் நகைக் கடன் பெற முடியாமலும், ஏற்கெனவே நகை ஈட்டின் பேரில் பெற்றக் கடனுக்கு, அதற்குரிய தொகை செலுத்தியும் இதுவரை நகையையும் வங்கி நிர்வாகம் திரும்பச் செலுத்தாமல் உள்ளது என்றார் வேதனையுடன்.

அதைத் தொடர்ந்து விசாரித்த போது, கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். அவ்வாறு கரும்பு பயிரிடும் விவசாயிகளிடமிருந்து பெண்ணாடத்தைச் சேர்ந்த அம்பிகா மற்றும் எ.சித்தூரைச் சேர்ந்த ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கரும்பைக் கொள்முதல் செய்துவருகின்றன. கொள்முதல் செய்த கரும்புக்கு, முறையாக பணம் வழங்குதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளாக கொள்முதல் செய்த கரும்புக்கு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.40 கோடி நிலுவைத் தொகை வைத்திருப்பதோடு, ஒரு டன் கரும்புக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகை ரூ.200-ஐயும் ஓராண்டாக வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், விவசாயிகள் பெயரில் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.40 கோடி கடன்பெற்று, அவற்றை விவசாயிகளுக்கு திரும்பச் செலுத்தாததால், கருவேப்பிலங்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கிக் கிளை நிர்வாகம் தற்போது விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கியிருப்பதால், உடனடியாக கரும்புக்கு உண்டான நிலுவைத் தொகையையும், விவசாயிகள் பெயரில் பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்தக் கோரியும்,தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விருத்தாசலம் பாலக்கரையில் கடந்த 3 தினங்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் 3-ம் நாளான இன்று (புதன்கிழமை) இறந்த எலி மற்றும் பாம்புகளை வாயில் வைத்தவாறு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அய்யாக்கண்ணுவிடம் கேட்டபோது, ''விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், வங்கி மோசடியில் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. கொள்முதல் செய்த கரும்புக்கு உரிய பணத்தை வழங்காமல், அவர்கள் மீதே கடன் பெற்று, அதை திரும்பச் செலுத்தாமல், விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பும் வகையில் மோசடியில் ஈடுபட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் வாய்மூடி மவுனியாக உள்ளனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும்'' என்றார்.

காத்திருப்புப் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கும் விவசாயி சக்திவேல் கூறுகையில், "சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கரும்புகளை கசக்கிப் பிழிவதோடு, விவசாயிகளையும் கசக்கிப் பிழியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விவசாயிகளின் அறியாமையை மூலதனமாக்கிக் கொள்ளும் செயலில் ஈடுபட்டுள்ளது ஆலை நிர்வாகங்கள். கொள்முதல் செய்த கரும்புக்குண்டான பணத்தைக் கேட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் பெயரிலேயே கடனைப் பெற்று, அந்தத் தொகை தான் கரும்புப் பணம் எனக் கூறி ஏமாற்றியுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போவது தான் கவலையாக உள்ளது" என்றார்.

இதையடுத்து ஆரூரான் சர்க்கரை ஆலை பொதுமேலாளர் பழனிவேலுவிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, ''ஆலை நிர்வாகத்தின் காப்புறுதியுடன் விவசாயிகளின் வெட்டுக் கூலிக்காக ரூ.14 கோடி, விவசாயிகள் பெயரில் வங்கிக் கடன் பெற்றுள்ளோம். இது அகில இந்திய அளவில் நடைபெறும் வழக்கமான ஒன்று தான். தற்போது ஆலை நிர்வாகத்தின் நிதிச் சுமையால் குறிப்பிட்டக் காலத்திற்கு திரும்பச் செலுத்த முடியாததால், வங்கி, விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடனுக்கு நாங்களே பொறுப்பு என்பதால், இம்மாத இறுதிக்குள் வங்கிக்குச் சேர வேண்டிய தொகையை செலுத்திவிடுவோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்