வாழ்க்கைப் போராட்டத்தை மாற்றும் விளையாட்டு!- வழிகாட்டும் கோவை மென்பொறியாளர்

By ஆர்.கிருஷ்ணகுமார்

வாழ்க்கை என்ற போராட்டக் களத்தில், உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், நம்பிக்கை என்னும் நாற்காலி துணையுடன் லட்சியத்தை நோக்கிப் பயணிக்க உதவுகிறார் கோவை இளைஞர். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய கூடைப்பந்துப் போட்டியில் பலரையும் பங்கேற்க உதவும் இவர், கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு அகாடமி அமைப்பதே தனது லட்சியம் என்கிறார்.

மாற்றுத் திறனாளிகளைப் பார்த்தால் நிச்சயம் நம் எல்லோருக்கும் பரிதாபம் தோன்றும். சிலருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமும் உருவாகும். அதை சிலர் செயல்படுத்தவும் செய்வார்கள். இதையெல்லாம் தாண்டி, மாற்றுத் திறனாளிகளை விளையாட்டுத் துறைக்கு அழைத்து வந்து, அவர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்கிறார் கோவையைச் சேர்ந்த குணசேகரன்(32).

பிரபல சாப்ட்ஃபேர் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியும் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, தேடிச் சென்றோம்.  "என்  சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள கணபதிபாளையம். ஆனாலும், படிச்சதெல்லாம் ஈரோடு, சேலத்தில்தான். பி.இ. சிவில் இன்ஜினீயரிங் படிச்ச நான், கொஞ்ச நாள் மட்டும் சிவில் இன்ஜினீயரிங் துறையில் வேலை செஞ்சேன். அப்புறம் 2011-ல்  சிடிஎஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.  அப்பா இல்லாத குறை தெரியாமல் வளர்த்த அம்மா அருணாதேவி, பிறருக்கு உதவக் கற்றுக்கொடுத்தாங்க.

2015-ல் தேனியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில், அவங்களுக்கு உதவ தன்னார்வலராக போனேன்.  500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், அவங்களோடகுறையை மறந்து, மகிழ்ச்சியுடன் விளையாடினாங்க. இது, எனக்குள்ள  மாற்றத்தை ஏற்படுத்தியது. இதேபோல, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தன்னார்வலராகப் போனேன்.  மாற்றுத் திறனாளிகளுக்கான வீல்சேர் கூடைப்பந்துப் போட்டி சென்னையில் நடந்தப்ப, அங்கேயும் போனேன்.

அப்பத்தான், கோவையில் மாற்றுத் திறனாளிகளிடம் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தி, அவங்க வாழ்க்கையில மாற்றத்த ஏற்படுத்தணும். அவங்கள சாதிக்கச் செய்யணுமுன்னு உறுதியெடுத்தேன். 2017 ஆகஸ்ட் 17-ம் தேதி சிற்றுளி-ங்கற பெயர்ல அறக்கட்டளையை பதிவு செஞ்சேன். வாகராயம்பாளையம் அனுக்கிரஹா மாற்றுத் திறனாளிகள் இல்லத்துக்குப் போய், அவங்க மத்தியில் சின்ன விளையாட்டுப் போட்டிங்கள நடத்தினேன்.

2018 பிப்ரவரி 24-ம் தேதி முதல்முறையாக சக்கர நாற்காலி கூடைப்பந்து விழிப்புணர்வு முகாமை, டெக்லத்தான் விளையாட்டு மைதானத்தில் நடத்தினோம். இதுல, கங்கா மருத்துவமனையோட மறுவாழ்வு மையத்திலிருந்து மாற்றுத் திறனாளிகள கூட்டிவந்து, பங்கேற்க செஞ்சோம். 28 பேர் கலந்துகொண்ட இந்த முகாம்ல, 17 பேர் கூடைப்பந்து விளையாட முன்வந்தாங்க.

அவங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயிற்சி கொடுத்தோம். அப்பத்தான், சர்வதேச கூடைப்பந்து  நடுவர் ராஜன் சாரோட அறிமுகம் கிடச்சது. மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி கொடுக்க அவர் முன்வந்தார். அவரோட, கோச் பத்மநாபனும் பயிற்சி கொடுத்துக்கிட்டு வர்ரார்.

இதுல, எங்களுக்குப் பிரச்சினையாக இருந்தது ஸ்போர்ட்ஸ் வீல்சேர்தான். அதனோட குறைந்தபட்ச விலையே ரூ.32 ஆயிரம். சர்வதேச அளவுல விளையாடறவங்களோட வீல்சேர் ரூ.2.25 லட்சம் இருக்கும். கிரிக்கெட் மாதிரி விளையாட்டா இருந்தா, ஸ்பான்சர் செய்ய நிறைய பேர் இருப்பாங்க. மாற்றுத் திறனாளிகளுக்கான வீல்சேர் போட்டிக்கு பெரிய ஆதரவு ஒன்னுமில்ல. பிரபலமும் கிடையாது. இருந்தாலும் விடாம முயற்சி செஞ்சோம்.

கொஞ்ச நாளைக்கு அப்புறம், தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து சங்க நிர்வாகிங்க எங்களப் பத்திக் கேள்விப்பட்டு, பயிற்சி தந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக எங்க டீம் நல்லா விளையாட ஆரம்பிச்சது.

2018 ஆகஸ்ட் மாதம் சென்னையில நடந்த மாநில அளவிலான வீல்சேர் கூடைப்பந்துப் போட்டியில், கோவையிலிருந்து முதல்முறையாக ஒரு டீம் கலந்துக்கிச்சு. அது எங்க டீம்தான். அந்தப் போட்டியில ஜெயிக்கலன்னாலும், எங்க டீமை சேர்ந்த கீர்த்திகா, தேன்மொழி ஆகியோர் மகளிர் பிரிவுக்கும், மணிகண்டன் ஆடவர் பிரிவுக்கும் ஸ்டேட் டீம்ல செலெக்ட் ஆனாங்க.

ஈரோட்டுல நடந்த தேசிய அளவிலான வீல்சேர் கூடைப்பந்துப் போட்டியில விளையாண்ட தமிழக அணியில,  கீர்த்திகா, தேன்மொழி, மணிகண்டன் ஆகியோரும் ஆடினாங்க. ரெண்டு பிரிவுலேயும் தமிழ்நாடு டீம் ஃபைனல் வரைக்கும் போச்சு. ஆரம்பத்துல எங்களுக்கு 2 ஸ்போர்ட்ஸ் வீல்சேர் தான் இருந்துச்சு. மரைன் இன்ஜினீயரான பாலாஜிங்கறவரு 4 வீல்சேர் வாங்கிக் கொடுத்தாரு. இப்ப எங்ககிட்ட 9 வீல்சேர் இருக்கு. குறைஞ்சது 20 வீல்சேர் இருந்தா, எல்லோரும் ப்ராக்டீஸ் செய்ய முடியும்.

இப்ப எங்க டீம்  கங்கா மறுவாழ்வு மையத்தோட கூடைப்பந்து மைதானத்துல பயிற்சி எடுக்கறாங்க. நடக்கறதுல பாதிப்பு இருக்கறவங்க, சாதிக்கணுமுன்னு நெனச்சா எங்கள தொடர்புகொள்ளுங்க. உங்க  வாழ்க்கையே மாறும். சிடிஎஸ்-ல எங்கூட வேலை செய்யுற ப்ரீத்தி, ஆனந்த், சசி எல்லோரும், எங்க டீம் பயிற்சி எடுக்க  தன்னார்வலரா உதவி செய்யறாங்க.

பாரா ஸ்போர்ட்ஸ் அகாடமி

மாற்றுத் திறனாளிகள் விளையாட, பல வசதிகளோட விளையாட்டு மைதானம் வேணும். ஆனா, அதுமாதிரி எங்கயும் இருக்கறதுல்ல. அதனால், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு அகாடமி  (பாரா ஸ்போர்ட்ஸ் அகாடமி)  தொடங்கி, எல்லோருக்கும் நல்லா பயிற்சி கொடுக்கணும்கறதுதான் என்னோட லட்சியம். 10 சதவீதம் பேர் தாங்க  இயற்கையா மாற்றுத் திறனாளியாக இருக்காங்க. மீதி எல்லோரும் விபத்து, நோய்னாலதான் மாற்றுத் திறனாளியாக மாறுறாங்க. இது அவங்க தப்பு இல்லீங்க. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அவங்கள வெளியில கூட்டிவந்து, சாதிக்கச் செய்யணுங்க. இந்தக் கனவு நிறைவேறத்தான் போராடிக்கிட்டிருக்கிறேன்" என்றார் நம்பிக்கையுடன்.

மனநிறைவு தந்த பயிற்சி

கூடைப்பந்துப் பயிற்சியாளரும், சர்வதேச நடுவருமான ராஜன் வெள்ளியங்கிரிநாதன் கூறும்போது, "ஹைதராபாத்தில் நடைபெற்ற வீல்சேர் கூடைப்பந்து பயிற்சியாளர்களுக்கான முகாமில் பங்கேற்றேன். சர்வதேச வீல்சேர் கூடைப்பந்து தொழில்நுட்பக் கமிட்டி தலைவர் நார்பட், பயிற்சி அளித்தார். சிற்றுளி அறக்கட்டளை மூலம் 4 பெண்கள், 12 ஆண்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கிறேன். மிகுந்த ஆர்வமாக அவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டு கற்றுக் கொடுத்து, அவர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்வது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது" என்றார் பெருமிதத்துடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்