உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக கோயம்புத் தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் இடைத்தேர்தலுக்காக அறிவிக்கை வெளியிடுவதில் தேர்தல் ஆணைய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர்களுக்கு விதிமுறைகளின்படி அளிக்க வேண்டிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை. இதனால் தேர்தலில் போட்டியிட விரும்பிய பலருக்கு போதிய வாய்ப்பு தரப்படவில்லை என்று அவர் தனது மனுவில் கூறியி ருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தேர்தல் அறிவிக்கை வெளியானபின் விடுமுறை நாட்கள் இல்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்ய 7 வேலை நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும். எனினும் தற்போதைய உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியான பிறகு விநாயகர் சதுர்த்தி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் ஆகிய 3 பொது விடுமுறை நாட்களையும் சேர்த்து 7 நாட்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய போதிய நாட்கள் அவகாசம் தரப்பட்டால்தான் அதிக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியும். ஆகவே, தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, புதிதாக அறிவிக்கை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, இந்த வாதங்களை மறுத்தார்.

தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு 7-வது நாள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக இருக்க வேண்டும். அந்த கடைசி நாள் விடுமுறை நாளாக இருந்தால் அதற்கும் அடுத்த நாள் கடைசி நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே தேர்தல் விதியாகும்.

மனுதாரர் தரப்பில் கூறுவது போல மனு தாக்கல் செய்ய 7 வேலை நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது சரியல்ல என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணைய தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE