தமிழகத்தில் 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

மக்கள் தொகையும், நிலப்பரப்பும் அதிகமுள்ள மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகியவற்றை தலைநகரங்களாகக்கொண்ட புதிய மாவட்டங்களை உருவாக்க வலியுறுத்தி பாமக பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அதை ஏற்கும் வகையில் கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக்கொண்ட புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதனால், விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு எல்லையிலுள்ள சின்ன சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க 100 கிலோ மீட்டருக்கும் கூடுதலான தொலைவு பயணம் செய்ய வேண்டிய சுமை குறையும். அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை தனியாகப் பிரித்து திண்டிவனத்தை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அந்தக் கோரிக்கையையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

7,217 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட விழுப்புரம் மாவட்டம் தான் நிலப்பரப்பில் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். அங்கு 11 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதன் மக்கள் தொகை 34.58 லட்சம் ஆகும். வேலூர் மாவட்டத்தில் அதைவிட அதிகமாக 39.36 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அங்கு 13 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. வேலூர் மாவட்டத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு செல்ல 220 கி.மீ. பயணிக்க வேண்டும்.

மாவட்டத்தின் எந்த எல்லையிலிருந்து வேலூருக்குச் செல்வதாக இருந்தாலும் குறைந்தது 100 கி.மீ. கடக்க வேண்டும். இது நிர்வாக வசதிக்கு எவ்வகையிலும் ஏற்றதல்ல. அதனால்,  வேலூர் மாவட்டத்தையும் மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தைப் பிரித்து வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாகக் கொண்ட மூன்று புதிய மாவட்டங்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக எனது தலைமையில் ஏராளமான போராட்டங்களை பாமக நிறைவேற்றியுள்ளது.

ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகியவையும் 5,000 சதுர கி.மீ.க்கு அதிக பரப்பளவு கொண்ட பெரிய மாவட்டங்கள் ஆகும். ஒரு மாவட்டம் இந்த அளவுக்கு பரந்து விரிந்து கிடப்பது அதன் வளர்ச்சிக்கு வழி வகுக்காது.

'சிறியது தான் அழகு' என்ற தத்துவத்தின்படி பெரிய மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் தொடக்கத்தில் 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அவை மொத்தம் 31 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் புதிய மாவட்டங்களின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டுள்ளதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் மக்கள் தொகை மிக அதிகம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தை விட 106 நாடுகளும், திருவள்ளூர் மாவட்டத்தை விட 103 நாடுகளும், வேலூர் மாவட்டத்தைவிட 101 நாடுகளும் சிறியவை ஆகும். நாடுகளை விட மாவட்டங்கள் பெரியதாக இருக்க வேண்டுமா? என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.

எனவே, நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களை மறுவரையறை செய்து 12 லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும். இதற்காக 'தமிழ்நாடு மாவட்டங்கள் மறுவரையறை ஆணையத்தை' தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்" என, ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்