மிசா பாண்டியன் மீண்டும் திமுகவில் சேர்ப்பு

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த அழகிரி ஆதரவாளர் மிசா பாண்டியன் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளரும் முன்னாள் திமுக மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் மிசா பாண்டியன். மதுரை முன்னாள் துணை மேயரான இவர், கடந்த பல ஆண்டுகளாக அழகிரியின் தீவிர விசுவாசியாக இருந்தார். கட்சியில் இருந்து அழகிரி நீக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுத்தார். திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தபோதிலும், அழகிரியின் பக்கமே இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்தபோது, மிசா பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை நேரில் சந்தித்து வரவேற்பளித்தார். இது மதுரை திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிசா பாண்டியன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினை சந்திக்க சென்னைக்கு வந்தார். திமுக தலைமை அலுவலகத்தில் விளக்கக் கடிதம் கொடுத்துவிட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, மிசா பாண்டியன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த மிசா எம்.பாண்டியன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சிப் பணியாற்ற அனுமதிக்குமாறு திமுக தலைவர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) முதல் கட்சி உறுப்பினராக செயல்பட மிசா பாண்டியன் அனுமதிக்கப்பட்டுள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE