அரசுப் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு: விபத்தா? தற்கொலையா என விசாரணை

By ந. சரவணன்

வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பிளஸ் 1 மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது விபத்தா அல்லது தற்கொலையா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கல்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கங்கை அமரன் (40). இவரது மனைவி தேவிகா (35). இவர்களது மகள் மகாலட்சுமி (16). இவர் ஆலங்காயம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளியில் அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் சிறப்பு வகுப்புகள் பகல் 12 மணிக்கு முடிவடைகிறது.

இதற்காக தினசரி ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பாடங்களை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறப்பு வகுப்புக்கு மாணவி மகாலட்சுமி இன்று (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு பள்ளிக்கு வந்தார். பள்ளியின் புதிய கட்டிடத்தில் பிளஸ் 1 மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

2-வது மாடியில் உள்ள வகுப்பறைக்குச் சென்ற மாணவி மகாலட்சுமி புத்தகப்பையை வைத்துவிட்டு வெளியே சென்றார். மாடி வராண்டாவில் நின்ற மாணவி சிறிது நேரத்தில் 3-வது மாடிக்குச் சென்றார். அங்கிருந்து திடீரென அவர் கீழே விழுந்ததார். அதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே மாணவி மகாலட்சுமி உயிரிழந்தார்.

இதைச் சற்றும் எதிர்பாராத சக மாணவிகள், ஆசிரியர்கள் மாணவியின் உடலை நோக்கி ஓடி வந்தனர். மாணவி உயிரிழந்ததைக் கண்டு அவர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, ஆலங்காயம் போலீஸார் மற்றும் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர். வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் முரளி, ஆலங்காயம் காவல் ஆய்வாளர் திருமால் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதற்குள் மாணவியின் பெற்றோர் அங்கு வந்து மகாலட்சுமி உடலைக் கண்டு கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக மாணவியின் உடலை மீட்ட போலீஸார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடுமுறை நாட்களில் கூட சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் மனமுடைந்த மாணவி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகக் கூறி பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிலர் வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். பிறகு எதுவாக இருந்தாலும், புகார் அளித்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்திய போலீஸார் மாணவியின் உடலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மகாலட்சுமி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து மற்ற மாணவிகளின் பெற்றோர் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்து மாணவிகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் கங்கை அமரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மாணவி தவறி விழுந்து உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? இல்லை, பெற்றோர் குற்றச்சாட்டின்படி ஆசிரியர்கள் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்