டிக் டாக், இன்ஸ்டாகிராம், மியூசிக்கலி போன்ற செயலிகள் பலரது நேரத்தை ஆக்கிரமித்துள்ளன. குடும்பப் பெண்கள், நடுத்தர வயதைக் கடந்தவர்கள் சினிமா பாடலுக்கு வாயசைத்தும், நடனம் ஆடியும் காணொலியை வெளியிடுகின்றனர். இதேபோன்று வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸாகப் பதிவு செய்யும் நபர்களும் உள்ளனர்.
சிலர் டிக் டாக், மியூசிக்கலி ஆப் போன்றவற்றை டவுன்லோடு செய்து அதையே முழுநேரமும் பார்த்து பொழுதைக் கழிக்கின்றனர். டிக் டாக், வாட்ஸ் அப்களில் ஸ்டேட்டஸ் பதிபவர்கள், செல்ஃபி அதிகம் எடுப்பவர்கள், காணொலி பதிவிடுபவர்கள் ஆகியோரின் மனநிலை என்ன வகை என்பது குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் ஓர் உளவியல் ரீதியான அலசல் இதோ.
இது குறித்து உளவியல் நிபுணர் இளையராஜாவிடம் பேசினோம்.
டிக் டாக்கில் தங்களை வீடியோவாக எடுத்துப் பதிவிடுவதும், குடும்பப் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடிப் பதிவு போடுவது, போலீஸ் அதிகாரியே பாடலுக்கு வாயசைத்து வீடியோ பதிவிடுவது இது என்ன வகையான மனநிலை?
அதைப்பற்றிச் சொல்வதற்கு முன் என்னிடம் வந்த ஒரு க்ளைண்ட் பற்றி சொல்லிவிடுகிறேன். சென்னையைச் சேர்ந்த அந்த மாணவி சற்று துறுதுறுப்பானவர். நன்றாகப் படிக்கக்கூடியவர்.
அவரை நாமக்கல்லில் ஹாஸ்டலில் சேர்த்தனர். தன் தனிமையைப் போக்க அவர் குரூப் ஒன்று உருவாக்கி டிக்டாக் செயலியில் (tictacapp) கவனம் செலுத்த ஆரம்பித்து காணொலிகளாகப் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்.
இதில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது. இதைத்தான் நாம் உளவியலில் கவன ஈர்ப்பு செயல்கள் என்கிறோம் (attention seeking behaviour). கிடைத்த வரவேற்பால் இந்த டிக் டாக் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார் மாணவி. அவர் திரும்பத் திரும்ப அதில் ஈடுபட்டு அந்த மாணவிக்கு என்று மிகப்பெரிய ரோல், ஆயிரக்கணக்கான நண்பர்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.
நாமக்கல்லைச் சேர்ந்த அந்த மாணவி சென்னைக்குத் திரும்பியபோதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. டிக் டாக் மூலமாக ஏகப்பட்ட தொடர்புகள், ஏகப்பட்ட தொல்லைகள் வர ஆரம்பித்தன.
அவர்கள் குடும்பம் மிகவும் பக்தியான குடும்பம். அந்த மாணவிக்கு ஒரு சகோதரி இருக்கிறார், அவர் இந்த மாணவியின் டிக் டாக் செயலியின் மேல் ஈர்ப்பும், அதில் உள்ள மாணவியின் வீடியோக்களையும் பார்த்து மிகவும் பயந்து போனார்.
இதைச் சரி செய்ய அந்த பெண்ணின் சகோதரி டிக் டாக் அக்கவுண்ட்டை லாக் செய்துள்ளார். ஆனால் அவர் லாக் செய்யச் செய்ய அந்த மாணவி புதிது புதிதாக அக்கவுண்ட் ஓபன் பண்ண ஆரம்பித்து விட்டார். டிக் டாக் செயலியில்அந்த மாணவியின் அதீத ஈடுபாடு காரணமாக அவருடைய கல்வியே கெட்டுப்போனது. 11-ம் வகுப்பில்அவருடைய செயல்திறன் முற்றிலுமாக குறைந்துவிட்டது.
பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண் எடுத்த அந்தப் பெண் 11-ம் வகுப்பில் முழுவதுமாக இந்த டிக் டாக் மோகத்தில் மூழ்கியதால் அவருடைய மதிப்பெண்கள் முற்றிலுமாகக் குறைந்துபோனது. இதற்கு முதல் காரணம் ஒரு விதமான ஈர்ப்பு . மாணவியின் பதிவுக்கு வரும் லைக்குகள் அவர்களை ஈர்த்து அதிகமான வீடியோக்களைப் பதிவு செய்ய வைக்கிறது.
இதற்கு பின்னால் உளவியல் ரீதியான பாதிப்பு உள்ளதா?
இது உளவியல் பாதிப்புக்குள் வராது. முக்கியமாக இளம்பருவத்தினர்தான் இதுபோன்ற விஷயங்களில் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் இதில் வயதானவர்களும் ஏன் இதில் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்தால் இந்த இளம் பருவத்தினர் பதிவுசெய்யும் வீடியோக்களைப் பார்க்க பார்க்க ஏன் நாமும் செய்யக்கூடாதுஎன்ற ஒரு விஷயம் தான் நடுத்தர வயதினரையும் ஈடுபட ஊக்குவிக்கிறது.
சமீபத்தில் டிக் டாக்கில் காணொலி பதிவு செய்த போலீஸ்அதிகாரியாக இருக்கட்டும், தேர்தல் அதிகாரியாக இருக்கட்டும்,திருமணமான பெண்கள் ஆகட்டும் எல்லாவிதமான நபர்களும் ஈடுபடுவதற்குக் காரணமாக இந்த ஈர்ப்புதான் அமைகிறது.
இதில் பிரச்சினை எங்கு உருவாகும்?
இதுபோன்ற ஈர்ப்பில் அதன் பின்விளைவு அறியாமல் ஈடுபடுபவர்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை. இவையெல்லாம் என்ன பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடப் போகிறது என்று அவர்கள் அதை அலட்சியமாக நினைத்துக் கொண்டிருக்கலாம். தாம் போடும் வீடியோக்கள் தம்முடைய தனிப்பட்ட பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், ஒருவேளை ஷேர் என்று பதிவு செய்து விட்டால் உலகம் முழுவதும் அந்த வீடியோக்கள் நொடிப்பொழுதில் சென்றுவிடும்.
தனிப்பட்ட நபரின் வாழ்க்கையில் இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
இதில் ஆர்வம் காட்டுகிறவர்களின் பெரும்பாலான நேரத்தை இது எடுத்துக்கொள்ளும். மாணவர்களை அவர்களுடைய படிப்பு உள்ளிட்ட மொத்த விஷயங்களையும் பாதிக்கும். வேலை செய்பவராக இருந்தால் அவர்களுடைய வேலை சம்பந்தமான விஷயங்களை கடுமையாக பாதிக்கும். அவர்களுடைய திறமையையும், செயல் திறனையும் குறைத்துவிடும்.
இதற்கு தீர்வுதான் என்ன?
இதற்கு ஒரே தீர்வு தான் உண்டு. அது சுய ஒழுக்கம். எப்போது இந்த வகையான ஈடுபாடு நம்முடைய நற்பெயரைக் கெடுக்கிறதோ, நம்முடைய திறமைக்கு இது தடையாக இருக்கிறது, நம்முடைய வேலைத் தன்மையை கெடுக்கிறது, செயல்பாடு குறைகிறது என்று எப்போது நாம் கருதுகிறோமோ? அப்பொழுதே உடனடியாக அதை நிறுத்திவிட வேண்டும். அப்போதே அந்த மொபைல் ஆப்பை நீக்கம் (uninstall) செய்து விட்டால் நல்லது.
இதை எளிதாகச் செய்துவிட்டு தொடராமல் இருக்க முடியுமா?
கொஞ்ச நாளைக்கு எதையோ இழந்தது போல் இருக்கும். அதற்குப் பின் போகப்போக நாம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம். ஆனால், இது ஒன்றே நிரந்தரத் தீர்வு. இல்லையென்றால் இதுபோன்ற விவகாரங்களில் பெண்கள் ஈடுபடும்பொழுது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அது பாதிக்கும். ஆண்களாக இருக்கும்போது அவர்களுடைய வேலை மற்ற விஷயங்களைப் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஹீரோயிஸ மன நிலை உண்டு. அதை வெளிப்படுத்த வாய்ப்பில்லாதவர்கள் இப்படி டிக் டாக்கில் காணொலியை வெளியிடுகிறார்களா?
ஒரு வீடியோவை நான் பார்க்கிறேன் என்றால் முதலில் நான் ஈர்க்கப்படுவேன். ஒரு சினிமாவைப் பார்த்து சாலையில் ஹீரோ போல் சண்டை போடுவதாக இருக்கட்டும், சினிமாவைப் பார்த்து நம்முடைய தலைமுடியை திருத்திக் கொள்வதாக இருக்கட்டும் அதை ஒரு மாடலிங் என்று சொல்வோம். சினிமாவைப் பார்த்து நாம் செய்வது போன்று டிக் டாக் அதிகமாகப் பிரபலமாக மாறும்போது அதற்கென்று ரசிகர்கள் வர ஆரம்பித்து விட்டனர். இந்த ஒரு வீடியோ லிங்க் இவ்வளவு அழகாக இருக்கிறது இதை நாம் ஏன் வேறு மாதிரி இப்படிப் போடக்கூடாது என்று ஒவ்வொருவரும் முயற்சிக்கிறார்கள்.
அதனுடைய அதிகப்படியான பிரபலமடையும் தன்மை, அதிக வரவேற்பு காரணமாக நிறைய பேரை ஈர்த்து, அதை அவர்கள் செய்கிறார்கள். அதனால்தான் நீங்கள் குறிப்பிட்டது போன்று திருமணமான நடுத்தர வயதுடைய பெண்கள், வயதானவர்கள், ஏன்.. பேரன் பேத்தி எடுத்தவர்கள் கூட இதைப் பார்த்து பார்த்து ஈர்க்கப்பட்டு அதை ஒரு முன் மாதிரியாக எடுத்து சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது என்று வீடியோக்கள் பதிவு செய்கின்றனர்.
இதில் ஆபாசக் காணொலியும் பதிவு செய்யப்படுகிறதே?
ஆமாம். இதில் ஆபாசமாகப் பதிவு செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இது தனிப்பட்ட முறையில் நாம் மட்டுமே பார்க்கக்கூடிய ஒன்று என்று நினைத்துப் பதிவு செய்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அது ஷேர் ஆகும்போது உலகம் முழுவதும் அது பரவிவிடுகிறது. இதுபோன்ற வீடியோக்களைச் சேகரித்து அதை யூடியூபில் பதிவு செய்வதற்கென்றே ஆட்கள் உருவாகியுள்ளனர்.
கும்பலாக ஒன்று சேர்ந்து இசைக்கு ஆடுவது, குத்தாட்டம் போடும்போது நம்மை அறியாமல் இணைந்து ஆடுவது போன்றவொரு மனநிலையா இது?
அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. விழாக்களில், நிகழ்ச்சிகளில் கும்பலாக ஆடுவதும், சாவுக்கு கூத்தாடுவதும் நம்முடைய நரம்பியல் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட ஒன்று. குறிப்பிட்ட அந்த கொட்டு மேளம் நம்மை ஆட்டுவிக்கிறது எனலாம். டிக் டாக் குணத்திற்கும் அதற்கும் முற்றிலுமாக வேறுபாடு உண்டு. இதை எதிர்மறை ரோல் மாடல் என்று சொல்கிறோம். நிறைய பேரை இப்படிப் பார்க்கும் பொழுது நாமும் அதேபோல் செய்து பார்க்கவேண்டும் என்ற உந்துதல் செயல்பாடுதான் இது. மற்றபடி இதற்கும் உளவியல் ரீதியான செயல்பாட்டுக்கும் சம்பந்தமில்லை.
இந்த மோகத்திலிருந்து எப்படி விடுபடுவது?
இதை நாம் நினைத்தவுடன் நிறுத்திவிடலாம். நமது அந்தரங்கப் பாதுகாப்பு தான் முக்கிய விஷயம். எப்போது நமது அந்தரங்கப் பாதுகாப்புக்குப் பிரச்சினை ஏற்படுகிறது என்று தெரிய வருகிறதோ, அப்போதே அதை உடனடியாக நிறுத்தி விடலாம். நான் ஆரம்பத்திலேயே சொன்ன மாணவி கேஸ் ஹிஸ்டரிதான் அதற்கு ஒரு உதாரணம்.
சிலர் டிக் டாக்கை டவுன்லோடு செய்து பார்ப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுறார்களே?
டிக் டாக்கைப் பார்த்து நேரத்தைச் செலவிடுவது, மியூசிக்கலி ஆப்பை, ஃபேஸ்புக்கைப் பார்த்து நேரத்தைச் செலவிடுவது, வாட்ஸ் அப்பில் நேரத்தைச் செலவிடுவது இவையெல்லாம் ஒருவகை அடிக்ஷன் எனலாம். நாம் அதிகப்படியான நேரத்தை ஒரு விஷயத்தில் செலவிடுகிறோம் என்றாலே உளவியல் ரீதியாக நாம் அதில் அடிமைப்பட்டுவிட்டோம் என்பதுதான் அதன் அர்த்தம்.
அப்படியானால் தொழில் ரீதியாக பலர் வலைதளத்தில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் அவர்களும் அவ்வகையா?
வியாபார ரீதியாக இன்டர்நெட்டை உபயோகப்படுத்துகிறார்கள் என்றால் அது இதில் வராது. ஆனால் அதைத் தவிர பொழுதுபோக்காக அதில் தமது நேரத்தை செலவிடும்போது, அதாவது நமக்கு ஒரு வேலை இருக்கும் அதையெல்லாம் விட்டுவிட்டு அதிலேயே ஈடுபடுவது ஒருவகையான அடிமைப்படுதல் ஆகும்.
ஒன்றரை மணி நேரம் நீங்கள் வெட்டியாக ஒரு செயலியிலோ, முகநூலிலோ இருக்கிறீர்கள் என்றால் சந்தேகமே இல்லை நீங்கள் அடிக்ட் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
வாட்ஸ் அப்பில் ஒவ்வொருவரும் அவரவர் மனநிலையில் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்.. இது என்னவகை மனநிலை?
வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுபவர்கள் ஒரு குறிப்பிட்டமனநிலையில் இருக்கிறார்கள். அதாவது இளம்பருவத்தினர் காதல் பாடல்கள், சோகப் பாடல்கள் போன்றவற்றைப் போடுகிறார்கள். சிலர் சாகசக் காட்சிகள் மட்டுமே போடுகிறார்கள்.இப்படிப் பல வகைகளில் உள்ளனர். ஸ்டேட்டஸ் என்பது அவரவர் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
நாம் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர், நம் மனதில் உள்ள அனைத்து விஷயங்களையும் நம்மைச் சுற்றியுள்ள நெருக்கமானவர்களிடம், குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்வோம். அது அப்படியே போய்விடும். வெளியே வராது. நான்கு சுவருக்குள் அடங்கிவிடும். அந்தக் கலாச்சாரமே இப்பொழுது போய்விட்டது. இப்போது பெற்றோர்கள் இருவரும் வேலை செய்கிறார்கள், கூட்டுக் குடும்பம் மாறி தனிக் குடும்ப நிலை ஆகிவிட்டது.
இவர்களுக்குள் பேசுவதற்கு, ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதற்கு யாருக்கும் நேரமில்லை. அதனால் அந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு சமீப காலங்களில் இந்த முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
அது மாதிரி பரிமாறப்படும் அவர்களது உணர்வுகளை அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ள யாராவது ஒருவர் வரவேற்கும்போது அல்லது லைக் கொடுக்கும்போது அல்லது பாராட்டும்போது அந்த விஷயம் அவர்களை ஈர்த்து, நம்மையும் கவனிப்பதற்கு ஆள் இருக்கிறது என்கிற மனநிலையை உருவாக்குகிறது.
நாம் பதிவு செய்வதைக் கேள்வி கேட்பதற்கு, அதைப் புகழ்வதற்கு அது பற்றி விவாதிப்பதற்கு ஆள் இருக்கிறது என்று நினைத்து தங்கள் பதிவைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் அன்புக்காக ஏங்குபவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுடைய கவனம் தங்கள்பால் திரும்ப வேண்டும் என்கிற விருப்பம் உடையவராக இருப்பார்கள்.
நீங்கள் சொல்கிற வகையைத் தாண்டி, தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள் போடுபவர்கள், அறிவுரை போடுபவர்கள் என பலர் உற்சாக மனநிலையில் உள்ளனரே?
வகைகள் உள்ளன. நானும் அதைத்தான் சொல்கிறேன். நீங்கள்சொல்லும் அனைத்தும் பாசிட்டிவான எண்ணங்கள். என்னுடைய எண்ணங்கள் பாசிட்டிவாக அல்லது நெகட்டிவாக இருக்கட்டும். ஆனால், அதை நான் பதிவு செய்யும் போது அதைப் பாராட்ட, வரவேற்க, கேள்விகேட்க ஆள் இருக்கும்போது திரும்பத் திரும்ப நான் பதிவு செய்கிறேன்.
நான் ஒரு சுற்றுலா தளத்திற்குச் செல்கிறேன். மகிழ்ச்சியான அந்த நிகழ்வைப் பதிவிடுகிறேன் என்றால் அதை மற்றவர்கள் ரசிக்கிறார்கள் எனும்போது அது என்னை ஈர்க்கிறது. அதே விஷயம் நான் சோகமாக இருக்கிறேன், என்னை வீட்டில் யாரும் பரிவாக கேட்க ஆளில்லை. அதை நான் பதிவு செய்கிறேன். அதற்கு ரியாக்ட் செய்ய, பரிவாகக் கேட்க ஆள் இருக்கிறார்கள் என்றால் நான் அதையும் பதிவு செய்வேன்.
இந்த இரண்டு வகைகளில், அதாவது நல்லதுக்கும் சரி, கெட்டதுக்கும் சரி ஸ்டேட்டஸ் போடும்போது மக்களால் ஈர்க்கப்பட்டு அதனால் தூண்டப்பட்டு திரும்பத் திரும்பப் பதிவு செய்வோம். தற்போது இது அரசியலிலும் வந்துவிட்டது. முன்பு அங்கு இருக்காது. பொதுவாழ்வில் இருக்கும் நபர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் தற்போது அங்கும் அது வந்து விட்டது.
ஸ்டேட்டஸ் போடுவது ஒரு வடிகால் என்கிறீர்களா?
ஆமாம், நிச்சயமாக. அது நல்ல விஷயத்துக்கும் சரி கெட்டவிஷயத்திலும் சரி மக்கள் அதை தற்போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவர் அடிக்கடி ஒரு எதிர்மறையான விஷயத்தை - அவரைப் பாதிக்கும் விஷயத்தை - பகிர்ந்து கொண்டு இருந்தால், மனஅழுத்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டால் அவர் தற்கொலை மனப்பான்மையில் இருக்கிறார். அவர் லேசாக அதை வெளிப்படுத்தும்போது சுற்றி இருப்பவர்கள் அதைக் கவனித்து அவருக்கு உதவுவது முக்கியம்.
நன்றாக இருந்த ஒருவர், திரும்பத் திரும்ப எதிர்மறைப் பதிவுகளைச் செய்யும் பொழுது அவர் தற்கொலை மனப்பான்மையின் முதல் படியில் இருப்பதற்கான ஒரு சமிக்ஞை கொடுக்கிறார் என்று அர்த்தம். அதை எல்லாம் நாம் கவனித்தோம் என்றால் நல்லது. குடும்பத்தில் பெரியவர்கள் கொஞ்சம் தங்களுடைய பிள்ளைகளின் ஸ்டேட்டஸ்களை கவனித்துப் பார்த்தால் அது அவர்களுடைய மனநிலையை அறிய உதவியாக இருக்கும். அதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
அப்படி யாராவது பிரச்சினையுடன் வந்துள்ளார்களா?
கும்மிடிப்பூண்டியில் ஒரு க்ளைண்ட் என்னிடம் வந்தார். அவர் ஒரு மாணவர். எப்போதுமே சோகமாக இருக்கின்ற படங்கள் பதிவிடுவார். வீட்டுக்கு ஒரே பையன். அப்பா கிடையாது. அவனுடைய தாயார்அவனுக்காக எல்லாச் செலவுகளையும் செய்வார். ஆனால் அவனை சிறுவிஷயத்தில் கூட தாயார் கண்டித்தது கிடையாது.
ஒருநாள் பேருந்தில் ஓட்டுநர் சாதாரணமாகத் திட்டியுள்ளார் அதனால் அந்தச் சிறுவன் மிகவும் பாதிக்கப்பட்டு, என்னை யாரும் திட்டியதே இல்லை இவர் திட்டிவிட்டாரே என்று குழம்ப ஆரம்பித்து விட்டார். எதிர்மறைப் பதிவுகள் பதிய ஆரம்பித்துவிட்டார். யாரிடமும் வெளிப்படையாக அந்த மாணவன் பேசமாட்டான், இந்த வகையானவர்களை introvert என்று அழைப்போம்.
அதாவது யாரிடமும் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். ஆனால், போட்டோ வடிவில், எழுத்து வடிவில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். பின்னர் சைபர் எஃபெக்ட் (cyber effect) முறையில் அவரது நிலை அறிந்து சிகிச்சை அளித்தோம்.
எங்களிடம் வரும் க்ளைண்ட்களை அவர்களுடைய தன்மைகளை ஆராய அவர்களுடைய ஸ்டேட்டஸ் செக் செய்வோம். கூகுள் ஹிஸ்ட்ரியையும் ( google search history) ஆராய்வோம். அதிலேயே அவர்களுடைய பிரச்சினைகளைக் கண்டுபிடிப்போம். இதற்கு பெயர் சைபர் எஃபெக்ட் என்போம். இதன்மூலம் எளிதாக அவர்களுடைய மனநிலையைக் கண்டுபிடித்து விடலாம்.
காரணம் இன்று பெரும்பாலானவர்கள் தங்கள் மனநிலையை இதுபோன்று ஸ்டேட்டஸ் மெசேஜ் மூலம் வெளிப்படுத்துவதிலும், கூகுளில் தேடுதலிலும் வெளிப்படுத்துகிறார்கள். அதை ஆராயும்போது அவர்கள் மனநிலை எதை நோக்கிப் போகிறது என்று சுலபமாக கண்டுபிடிக்கலாம். ஹிப்னாடிசம் செய்து அறிவது போன்று இதை ஆராய்ந்தே தற்போது கண்டுபிடிக்கிறோம்.
சிலர் அதிகமாக செல்ஃபி எடுத்து அதை ஸ்டேட்டஸ் ஆகப் பதிவிடுகிறார்கள். இது என்ன மனநிலை?
இது வேறு வகை, இது மனதுக்கு வடிகால் என எடுக்க முடியாது. ஒரு பிரபலத்துடன் போட்டோ எடுத்தால் தனக்கு ஒரு பெருமை. நம்மைவிடப் பெரிய பதவியில் இருக்கும் நபருடன் போட்டோ எடுத்தால் ஒரு பெருமை. சாதனையாளர்களுடன் செல்ஃபி எடுத்தால்அது ஒரு பெருமைக்குரிய விஷயம் என நினைப்பதும் செல்ஃபி எடுப்பதும் ஒரு வகை.
ஆனால் தன்னைத்தானே திரும்பத் திரும்ப எடுத்துப் பதிவு செய்தாலோ, எடுத்துக்கொண்டிருந்தாளோ அதை கவன ஈர்ப்பு செயல் (attention seeking behavior) என்று சொல்வோம்.
அடிக்கடி செல்ஃபி எடுக்கும் மனநிலையை மாற்ற என்ன வழி?
அவர்கள் செல்ஃபி எடுத்து போட்டு ஒருநாள், ஒரு இடத்தில் கூட லைக் வரவில்லை என்றால் பிறகு அவர்கள் செல்ஃபி எடுக்க மாட்டார்கள் அல்லது எடுத்த செல்ஃபியை அதிகமாக மாற்றம் செய்து போடுவார்கள்.
செல்ஃபி எடுத்து போடும்போது வரவேற்பு கிடைக்கவில்லை என்றால் செல்ஃபி எடுப்பது குறைந்துவிடும். ஆனால் வரவேற்பு கிடைத்தால் அது அதிகரித்துக் கொண்டே செல்லும். இதை சந்தோஷமாக இருப்பவர்களும் செய்வார்கள். சோகமாக இருப்பவர்களும் செய்வார்கள்.
டிக் டாக் செயலியில் காணொலி பதிவு செய்வது, ஆபாசப் படங்களை எடுப்பவர்களுக்கு நாமே நம் காணொலியை அளிப்பது ஆபத்தாகாதா?
கண்டிப்பாக இதில் ஆபத்து இருக்கிறது. டிக் டாக்கில் காணொலிப் பதிவு செய்பவர்கள்அதை சினிமா உலகிற்குள் நுழையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி காணொலியை வெளியிடுகிறார்கள்.
அதேபோன்று, எக்ஸிபிசனிசம்( Exibitionism) என்று சொல்வோம்.. தன்னுடைய ஆடைகளை, அங்கங்களை மற்றவர்களுக்கு காண்பிப்பதன் மூலம் சந்தோஷமடைவது. இது ஒருவகையான மனநோய். அவ்வாறு பதிவிட்டு அதைப் பார்ப்பவர்கள் மூலம் வருகின்ற பாராட்டுகளை விரும்பி, மீண்டும் மீண்டும் பதிவுசெய்யக்கூடிய ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள்.
எந்தவிதக் காரணமும் இல்லாமல் நம்முடைய அங்கங்களைப் பொதுவெளியில் காண்பிக்க வேண்டும் என்று எண்ணுவதும் ஒருவகையான மனநோய் தான்.
இதுபோன்ற காணொலிகளைப் பதிவு செய்யும்போது அதை தவறான நபர்கள் மாற்றி அமைத்து ஆபாச வீடியோக்களாக மாற்றியமைக்க வாய்ப்பு உண்டல்லவா?
நிறைய உண்டு. நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி அந்த செட்டிங்கில் தனிப்பட்ட பகுதி என்பதை மீறி ஷேர் என தட்டிவிட்டால் உங்களுடைய காணொலி உலக அளவில் சென்று விடும். அது சிலபேருக்குத் தெரிவதில்லை. ஸ்மார்ட் போன் கையில் இருப்பதால் உடனடியாக காணொலியை எடுத்துப் பதிவிட்டு விடுகிறார்கள்.
திருநங்கைகள் இதில் அதிகம் பதிவிடுகிறார்கள். இதற்கு உளவியல் காரணம் எதுவும் உண்டா?
இதில் பாலின வித்தியாசம் எதுவுமில்லை. அவர்களுக்கும் இதே மனநிலைதான் பொருந்தும். அவர்களும் மற்றவர்கள்போல் ஈர்க்கப்பட்டுத்தான் பதிவிடுகிறார்கள்.
இதனால் என்ன பாதிப்பு வரும்?
இது பாதுகாப்பான நடைமுறை அல்ல. நீண்டகாலப் பாதிப்பாக இதைப் பார்த்தால் அது உளவியல் ரீதியாகவும் அனைவரையும் பாதிக்கும் விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
காரணம், நம்முடைய அதிகமான நேரத்தை டிக் டாக் போன்ற செயலிகளில் செலவிடுவதால் நம்முடைய வழக்கமான செயல்களில் இருந்து மாறுபடுகிறோம். தனிமைப்படுகிறோம் அது நம்முடைய வாழ்க்கை நிலையை பாதிக்கும். சட்டப்படியாக பார்க்கப் போனாலும் என்றாவது ஒருநாள் இதுவே நமக்கு ஒரு பிரச்சினையாக மாறிவிடுக்கூடும்.
பெண்களை இது எவ்வாறு பாதிக்கும்?
ஓர் இளம்பெண் சாதாரணமாகப் பதிவிடும் ஒரு காணொலி, அவரது திருமண வாழ்விலோ, அல்லது திருமணமே தடைபடக் கூடிய வாய்ப்புகூட ஏற்படும். இந்த பிரச்சினைகள் அதிகப்படும்போது மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முடிவை தேடும் நிலை கூட உருவாக நேரிடும். எனக்குத் தெரிந்தே நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. விளையாட்டாகத் தொடங்கும் இதுபோன்ற செயல்கள் எமனாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு.
இவ்வாறு உளவியல் நிபுணர் இளையராஜா பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago