8-வது தலைமுறையாய் தொடரும் நாகஸ்வர முழக்கம்: இசையால் இணைந்த ஆந்திர தம்பதியர்

By குள.சண்முகசுந்தரம்

ஷேக் மெகபூப் சுபஹானி - காலிஷாபீ மெகபூப் - இவர்கள் நாகஸ்வர இசை மேடைகளை கலக்கிக் கொண்டிருக்கும் கலைமாமணி தம்பதியர்.

பொதுவாக முஸ்லிம்களை நாகஸ்வர கலைஞர்களாக பார்ப்பது அரிது. ஆனால், ஆந்திராவைச் சேர்ந்த சுபஹானி குடும்பம் பரம்பரை பரம்பரையாக இந்தக் கலையை நேசிக்கிறது. அந்தக் குடும்பத்தின் பரம்பரை நாகஸ்வரம் எட்டாவது தலைமுறையாக சுபஹானியின் கையில் தவழ்கிறது.

ஷேக் மெகபூப் சுபஹானி கூறியதாவது:

‘‘எங்க அப்பா ஷேக் மீரா சாஹிப் நாகஸ்வர கச்சேரிகளுக்கு போகும் போது நானும் துணைக்கு வாசிக்கப் போவேன். அப்படித்தான் நான் நாகஸ்வரம் படிச்சேன். என்னோட அத்தை மகள்தான் காலிஷாபீ மெகபூப். இவங்க அப்பாவும் நாகஸ்வரக் கலைஞர்தான். தனக்குப் பின்னால் இந்தக் கலையை காக்க வேண்டும் என்பதற்காக தனது ஒரே மகளுக்கு நாகஸ்வரத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் எங்க மாமா.

ஆண்களே நாகஸ்வரம் வாசிப்பது ரொம்பச் சிரமம். ஆனால், காலிஷா ரொம்ப எளிதா வாசிப்பாங்க. அதுக்குக் காரணம் அவங்க ரத்தத்தோடு ஊறிப் போன நாகஸ்வர இசை ஞானம். இருவரும் சேர்ந்தே கச்சேரிகளுக்குப் போகலாம் என்பதாலேயே எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள்.

1978-ல் திருவையாறு தியாக பிரம்மோற்சவ விழாவுக்கு நானும் காலிஷாவும் போயிருந்தோம். அங்கே பெரிய பெரிய இசை மேதைகள் எல்லாம் வந்திருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் வாசிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அப்போது எங்கள் கையில் நாகஸ்வரம் இல்லை. அப்போது அங்கிருந்த ஷேக் சின்ன மவுலானா ஐயாதான் தனது நாகஸ்வரத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் எங்க தாத்தாவோட சிஷ்யர்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. அன்னைக்கு அத்தனை பெரிய மாமேதைகளுக்கு மத்தியில் அரை மணி நேரம் வாசித்தோம்.

அப்போதிருந்து எங்களுக்கு தமிழ்நாட்டுக்குள்ள கச்சேரிகள் நிறைய புக் ஆக ஆரம்பிச்சுது. அதனால, நாங்க ரெண்டு பேரும் 1983-ல் திருச்சி உறையூருக்கு வந்து தங்கிட்டோம். அங்கிருந்தபடியே மவுலானா ஐயா கிட்ட நாகஸ்வரம் படிக்க ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட 15 வருஷம் அவருக்கிட்ட நாகஸ்வரம் படிச்சுக்கிட்டே இந்தியா முழுமைக்கும் கச்சேரிகளுக்குப் போனோம். வெளிநாடுகள்ல தமிழ் சங்கங்கள் எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் வாசிச்சாச்சு.

எங்க ரெண்டு பேருக்கும் 1994-ல் தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கவுரவிச்சது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஐயா, கலைஞர் ஐயா இவங்களுக்கு முன்னாடி எல்லாம் வாசிச்சிருக்கோம். ஆனால், ஜெயலலிதாம்மாவுக்கு முன்னால் வாசிக்கிறதுக்கு எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கல. அப்துல் கலாம் ஐயா ஜனாதிபதியா இருந்தப்ப, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் எங்களை நாகஸ்வர கச்சேரி பண்ணச் சொன்னார்.

அந்த நிகழ்ச்சியில் ஒன்றரை மணி நேரம் எங்களது வாசிப்பைக் கேட்ட கலாம் பாராட்டுப் பத்திரம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். 1992-ல், எங்க குருநாதர் இருக்கிற ரங்கத்துக்கே நாங்களும் வந்துட்டோம். எங்க ரெண்டு பேருக்குமே அதிகம் படிப்பு இல்லை. அதனால, எங்க பையன் ஷேக் ஃபெரோஸ் பாபுவை எம்.சி.ஏ., வரைக்கும் படிக்க வச்சிட்டோம்.

ஆனாலும், உத்தியோகம் என்ற பெயரில் கம்பியூட்டரை கட்டி இழுக்காம அவன் கையிலும் நாகஸ்வரத்தை எடுத்துக் கொடுத்தாச்சு. அவனும் இப்ப எங்களோட கச்சேரிக்கு வந்துட்டு இருக்கான். நாகஸ்வரத்தில் இன்னும் நிறையக் கத்துக்கணும், நிறைய வாசிக்கணும் இன்னும் நிறைய பேரும் புகழும் எடுக்கணும் இதுதான் எங்களோட ஆசை. அந்த ஆசை இருந்தால்தான் வாசிக்கவும் முடியும்; சாதிக்கவும் முடியும். இதைத்தான் எங்க பையனுக்கு நாங்க சொல்லிட்டு இருக்கிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்