தொழில் புரட்சி உருவாகியுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

ரூ.2.10 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய ஜப்பான் முன்வந்துள்ளதால் இந்தியாவில் தொழில் புரட்சி ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசிய தாவது:

’’தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குறைந்திருக்கிறது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு வெகுவிரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். சமீபத்தில் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி தொகைக்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் முன்வந்துள்ளது. இதனால் இந்தியாவில் தொழில் புரட்சி ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக நடை பெறவிருக்கும் இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்துக்கு நல்ல முடிவு கிடைத்ததுபோல காவிரி பிரச்சினையிலும் நல்ல முடிவு கிடைக்கும். முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழக முதல்வரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து எதுவுமே செய்யாத காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவின் 100 நாள் ஆட்சியைப் பற்றி குறைகூற அருகதையில்லை.சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர். கட்சியில் முக்கியப் பொறுப்பில் இல்லாத ஒருவரின் கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE