பட்டாசு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பதற்கு கம்யூனிஸ்ட்களே காரணம்: தமிழிசை குற்றச்சாட்டு

பட்டாசு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழப்பதற்கு கம்யூனிஸ்ட்களே காரணம் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சிவகாசியில் ஆண்டாண்டு காலமாக இயங்கி வந்த உலக பிரசித்தி பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் இன்று மூடப்படுவதற்கு காரணம் உச்ச நீதிமன்றம் பட்டாசு தொழிலுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளே என்றாலும் இந்த பிரச்சினையை பூதாகரமாக்கி சுற்றுச்சூழல் மாசு விழிப்புணர்வு என்ற பெயரில் உயர் நீதிமன்ற வாசலுக்கு எடுத்து சென்றவர்கள் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் இயங்கும் கம்யூனிஸ்டுகளும் அர்பன் நக்சலுகளுமே காரணம்.

ஏனென்றால் இவர்கள் பட்டாசு எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி என்று சென்னை நகரில் ஊர்வலம் நடத்தி துண்டு பிரசுரங்களும் விநியோகித்துவிட்டு தற்போது சிவகாசியில் அதே கம்யூனிஸ்டுகள் முன்னின்று பட்டாசு தொழிலாளர்களுக்காக போராடுவதாக பாசாங்கு செய்கிறார்கள்.

கரும்பு மானியத்திற்கு விலையை அதிகரிக்க சொல்வதும், சர்க்கரை விலையை குறைக்க சொல்வதுமே கம்யூனிஸ்டுகளின் கபட நாடகம். பட்டாசு தொழில் நலிவடைந்து போகாமல் இருக்க சீன பட்டாசுகளின் இறக்குமதியை தடைசெய்தது பிரதமர் மோடி அரசு அதையும் மீறி கள்ளத்தனமாக கடத்தி வந்து இங்கே விற்பனை செய்து சுற்றுப்புற சூழலை கெடுத்து உண்மையான சிவகாசி பட்டாசு விற்பனையை சரிவடைய செய்ததற்கு நமது வியாபாரிகளும் பொறுப்பு என்பதே நிதர்சனம்.

புகை மாசு அதிகம் வெளியிடும் சீன பட்டாசுகள் ஊடுருவலால்தான் டெல்லியில் தீபாவளி நேரங்களில் புகை மாசு அதிகரித்தது என்பதே உண்மை. ஆகையால் சீன பட்டாசுகளை இங்கு விற்பனை செய்த வியாபாரிகளும் பொறுப்பல்லவா?

உலகமே சுற்றுசூழல் விழிப்புணர்வு தேவை ஓசோன் மண்டலம் ஓட்டை விழுகிறது என்று விழித்தெழும் நிலையில் விஞ்ஞான ரீதியாக நவீன தொழில் நுட்பத்துடன் மாசு படுத்தாத பட்டாசுகள் தேவை அதுதான் பசுமை பட்டாசு அதன் ஆராய்ச்சி ஊக்குவித்து அங்கீகரித்து இப்பிரச்சினைக்கு தீர்வை நோக்கி முதல் படி எடுத்து வைத்தது பிரதமர் மோடி தலைமையிலான அரசு.

மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் பசுமை பட்டாசுகளை அறிமுகப்படுத்தி அங்கீகரித்துள்ளார்கள். பட்டாசு தொழில் பசுமை பட்டாசை நோக்கி பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல சட்டத்தின் விளைவு என்பதே நிதர்சனம்.

இதை புரிந்துகொண்டு சிவகாசி பட்டாசு தொழில் செயல்முறைகள், பயிற்சிகள், வணிகப்படுத்துதல் இவையனைத்தும் புயல் வேகத்தில் நடைபெற வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக தொழிலாளர்களை தெருவில் நிறுத்தி நாடகமாட வேண்டாம் என்று கம்யூனிஸ்ட்களையும் ,இடதுசாரிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக  அரசு பட்டாசு தொழிலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரண உதவி வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அதுவரை பட்டாசுத்தொழிலாளர்களால் பயனடைந்த பட்டாசு தொழிற்சாலை முதலாளிகளும் அவர்களுக்கு நிவாரண உதவி செய்ய முன்வர வேண்டும்" என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE