நெல் ஜெயராமன் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

உழவன் சேற்றில் கை வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பழமொழி பரவலாக நாமறிந்த ஒன்று. ஆனால் சேற்றில் கை வைக்கின்ற உழவன், சமூக அக்கறையோடு அந்த மண்ணையும் சேர்த்து பாதுகாக்க முற்படுவானாயின், அதனால் ஏற்படுகின்ற நன்மைகள் என்பது, இந்த சமுதாயமும் போற்றக்கூடியதாக அமையும் . அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, உயிர் துறந்துள்ளார் நெல் ஜெயராமன்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் சிறிய விவசாயி ராமசாமி - முத்துலெட்சுமி தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்த இவருக்கு, பத்தாம் வகுப்புத் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இவரது பார்வை விவசாயத்தின் பக்கம் திருப்பியது. பின்னர் அச்சகத்தில் வேலை பார்த்துக்கொண்டே, தனது தந்தையின் விவசாயப் பணிக்கு உறுதுணையாக இருந்தார்.  விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்த திருத்துறைப்பூண்டி பகுதியில் எந்த ஒரு கருத்தையும் இடதுசாரி சிந்தனையோடு அணுகும் மனப்பாங்கு கொண்ட ஜெயராமன், அப்பகுதி விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற சிறு பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அணுகி தீர்வு ஏற்படுத்த முற்படுவார்.

அதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கு ஏற்படுகின்ற இடர்ப்பாடுகளை ஜெயராமனிடம் சொல்லி தங்களுக்கான உரிமைகளை பெற்றுத் தரும் நுகர்வோர் அமைப்பு நிர்வாகியாக்கினர். அதன் வழியாக உருவான மாநில அளவிலான நுகர்வோர் கூட்டமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சிகளை வழங்க ஜெயராமன் பணியாற்றினார்.

அப்போது ரசாயன உரங்களைத் தவிர்த்து, இயற்கை வழி விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்த நம்மாழ்வாருடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

அக்காலகட்டத்தில், கல்லணை முதல் பூம்புகார் வரை நடைபயணம் மேற்கொண்ட போது விவசாயிகள் கொடுத்த பால் குடவாழை, பூங்கார், குடவாழை, காட்டுயானம் உள்ளிட்ட 7 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை ஜெயராமனிடம் கொடுத்து   இதனை  வளர்த்தெடுக்க வேண்டும் என்றார் நம்மாழ்வார். அவரது வழிகாட்டலில் வளர்க்கப்பட்ட நெல் ரகங்கள் பல, விவசாயிகளிடத்தில் அடுத்த ஆண்டு முதல் பரவலாக்கப்பட்டது. 2 கிலோ விதைக்கு 4 கிலோ விதையாக திருப்பித் தரும் திட்டம் உருவானது. அதன்படி ஒவ்வொரு நெல்லாகச் சேகரித்தார் ஜெயராமன்.

இன்று 174 நெல் ரகங்களை மீட்டெடுக்க நம்மாழ்வார் காட்டிய வழியில்,  தனது உழைப்பு முழுமையையும் கொடுத்து உருவாக்கித் தந்த ஜெயராமனின் உழைப்பைத் தொடக்க காலத்திலேயே அடையாளம் காட்டிய நம்மாழ்வார், இவருக்கு நெல் ஜெயராமன் எனப் பெயர் சூட்டினார்.

விவசாயிகள் ,மாணவர்கள் அனைவருக்கும் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து பயிற்சி அளித்து பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி இந்த சமுதாயத்திற்கு நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வந்தவர் நெல் ஜெயராமன்.

காவிரி உரிமை மீட்கும் போராட்டங்களிலும்  ,விதைகளை மரபணு மாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

இன்று ஏழ்மை நிலையில் தனது வாழ்க்கையைத் தொடங்கும் ஒவ்வொருவரும், ஏதாவது வழியில் பொருளாதார நிலையில் நாம் உயர முடியுமா?  என்றுதான் சிந்திப்பார்கள். அதிலும் சிறு விவசாயிகள் இயற்கையோடு போராடி தனக்கு வருமானம் ஈட்ட முற்படும்போது சந்திக்கின்ற பெரும் செலவுகள் அவர்களுக்கு இருக்கின்ற சமூக உணர்வையும் விரட்டியடித்து விடும் என்பதுதான் இன்றைய யதார்த்தமான உண்மை.

அப்படிப்பட்ட சூழலில் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய நெல் ஜெயராமன், உற்பத்தியைப் பெருக்கி லாபம் ஈட்ட முற்படாமல், தான் உற்பத்தி செய்கின்ற நெல், இந்த சமுதாயத்துக்கு செல்லும்போது நஞ்சை விளைவிப்பதாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு, ரசாயனத்தைப் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களை பயன்படுத்தத் தொடங்கினார் .

அதையே தான் சார்ந்த விவசாயிகளுக்கும் வழங்கி , ஊக்கப்படுத்தினார். அதுபோன்ற எண்ண ஓட்டத்தினால், கிடைத்த நம்மாழ்வாரின் நட்பைப் பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளோடு இரண்டறக் கலந்த நெல் ஜெயராமன், திருத்துறைப்பூண்டி பகுதியில் தேசிய அளவிலான நெல் திருவிழாக்களை நடத்தி 41,000 விவசாயிகளுக்கு 174 பாரம்பரிய நெல் ரகங்களை வழங்கியுள்ளார் என்பது மிகப்பெரும் சாதனை.

கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பார்கள். பலனை எதிர்பார்க்காத கைமாறு செய்த இந்த சாதனையாளருக்கு, புற்றுநோய் தாக்கி பெருந்துன்பம் அனுபவித்ததை அறிந்த மக்கள் , இவரை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என , முயற்சித்தனர். மருத்துவத்துக்கான பொருள் உதவி உதவி செய்தனர். இருப்பினும் மக்களின் முயற்சியை கொடிய புற்றுநோய் தோற்கடித்து விட்டது. நெல் ஜெயராமனை மரணம் தழுவிக் கொண்டது.

கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் இயற்கை வழி விவசாயத்தை அங்கீகரித்து விட்ட நிலையில் தமிழகமும் அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதை சமீபகாலமாக இயற்கை முறை சாகுபடிக்கு அனைத்து தரப்பிலும் எழுந்துள்ள முக்கியத்துவத்தை,  நெல் ஜெயராமனை  எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்கின்ற அனைத்துத் தரப்பினரின் தன்முனைப்பு உணர்த்துகின்றது.

இந்த நிலையில் மறைந்த நெல் ஜெயராமன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஏழை விவசாயியாக ,அச்சகத் தொழிலாளியாக, நுகர்வோர் பாதுகாவலராக, பாரம்பரிய விவசாயத்தின் குறியீடாக, வாழ்ந்து மறைந்த நெல் ஜெயராமனின் வாழ்க்கை நமக்கு  ஒரு பாடம்.

ஏழ்மை நிலையிலிருந்து உயர நினைக்கின்ற ஒவ்வொருவரும், சமூக அக்கறையோடு  அணுகினால் இந்த சமுதாயம்  நம்மை தலைமேல் வைத்துக் கொண்டாடும் என்பதற்கு சான்றாக நிற்கிறார் ஜெயராமன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்