பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு அவசர உதவி எண் 181-ஐ அழைக்கலாம்: மாநில மகளிர் ஆணையம்

By க.சே.ரமணி பிரபா தேவி

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அவசர உதவி எண் 181-ஐ எந்நேரமும் அழைக்கலாம் என மாநில மகளிர் ஆணையத்தலைவி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மாநில மகளிர் ஆணையம் சார்பில்  நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை பெண்களின் நலன், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, அதற்கான தீர்வு உள்ளிட்ட வெவ்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்படும்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஊடகத்தினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி எழிலகத்திலுள்ள மகளிர் ஆணைய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்யநாதன் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் பங்கேற்றனர். மகளிர் ஆணையம் தமிழகத்தில் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் குறித்து  கண்ணகி பாக்யநாதன் விளக்கினார்.

மகளிர் ஆணைய செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், ‘‘குழந்தைகள் திருமணம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்பத்திலும் பணியிடங்களிலும் மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறோம். பணியிடங்களில் குறிப்பாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் விபத்தில் சிக்கினால் உரிய இழப்பீடு பெற்றுத் தருவது, அவர்களுக்கு உண்டான பிஎஃப் தொகையை வாங்கித் தருவது ஆகியவற்றை மேற்கொள்கிறோம். எங்களின் ஆணையத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மூலம் இதற்கான சட்ட வடிவுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேபோல பெண்கள் சிறைகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குகிறோம். அவர்களின் அடிப்படை தேவைகளான நாப்கின் பிரச்சினை முதல் பல தேவைகளையும் கருத்திக்கொண்டு நிறைவேற்றுகிறோம். பல்வேறு பிரச்சினைகளால் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கும் மாநில மகளிர் ஆணையம் வழிகாட்டி வருகிறது.

 

மீடூ விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஐசிசி (உள்விவகாரங்களுக்கான புகார் கமிட்டி) அமைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். பல்கலைக்கழகங்களுக்குக் கீழே வரும் கல்லூரிகள் அனைத்திலும் இதற்கான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

 

அதைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் சட்ட ரீதியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதுவரை 9 மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

 

அணுக முடியாத கிராமங்களில் வசிக்கும் மக்கள், விளிம்பு நிலையில் இருக்கும் பெண்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடிப் பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

 

ஊடகத்தினர் சார்பில் கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, பெண்களை பாதிக்கும் விஷயங்களில் மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குகளை எடுத்து விசாரிக்க வேண்டும், அனைத்து காவல் நிலையங்களுக்கும் பெண்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

 

மாவட்டந்தோறும் மகளிர் கமிட்டி அமைக்க வேண்டும், ஊடகத்தினர் ஆணையம் ஒருங்கிணைப்பு வேண்டும், பெண்கள் அதிகம் பணிபுரியும் நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தப்பட வேண்டும், ஆணையத்தின் செயல்பாடுகளை சாதாரண மக்களிடம் கொண்டுச்சேர்க்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

பதிலளித்துப் பேசிய ஆணையத்தின் தலைவர், ‘‘ஊடகங்களில் வெளியாகும் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மட்டுமல்லாது அவர்களின் முழு அடையாளமும் தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்களை எந்த வகையிலும் காட்சிப்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். பெண்களுக்கான உதவிக்கு மத்திய அரசு சார்பில் அனைத்துப் பெண்களுக்குமான உதவி எண் 181 குறித்துத் தெரிவித்தார்.

 

பெண்கள் தங்களைப்பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மகளிர் ஆணையம் உதவியை நாட எண் 181 ஐ அழைத்து உதவி கேட்கலாம்’’ என்று தெரிவித்தார்.

 

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE