வாகன விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 கோடி இழப்பீடு: மெகா லோக் அதாலத்தில் தீர்வு

வாகன விபத்தில் உயிரிழந்த தனியார் வங்கி அதிகாரியின் குடும்பத்துக்கு, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மெகா லோக் அதாலத்தில் ரூ.4 கோடியே 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு ஏற்பாட்டின் பேரில் தமிழகம் முழுவதும் மெகா லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி மெகா லோக் அதாலத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நீதிமன்றங்களுக்கு வெளியே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதன் மூலம் விரைவான தீர்வு கிடைக்கிறது. ஆனால் வழக்காடிகளிடையே காணப்படும் ஈகோ என்பது வழக்கு நீண்டு கொண்டே செல்ல முக்கிய காரணமாக உள்ளது.

எனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவர் ஒரு வழக்குக்காக வந்தார். ஆசிரியராக உள்ள நீங்கள் இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டாம். எதிர் தரப்புடன் அமர்ந்து பேசி சுமூகமாகப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. விசாரணை நீதிமன்றத்தில் அவரது வழக்கு தோற்றுப் போனது. அதன் பின், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மேல் முறையீடு செய்தார். ஆனாலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதற்காக 15 ஆண்டுகளுக்கும் மேல் அவர் நீதிமன்றங்களுக்கு அலைந்தார். பல லட்ச ரூபாய் செலவானது. இறுதியில் அவர் நிம்மதி இழந்து தவித்தார்.

ஆகவே, இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்கவும், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க தீர்வை, விரைவில் தரும் விதத்தில் லோக் அதாலத் செயல்பட்டு வருகிறது என்றார்.

ரூ.4 கோடி இழப்பீடு

நிகழ்ச்சியின் போது கடந்த 2012-ம் ஆண்டு மேலூரில் வாகன விபத்தில் உயிரிழந்த தனியார் வங்கி அதிகாரி வி.சத்யநாராயணன் குடும்பத்துக்கு ரூ.4 கோடியே 10 லட்சத்துக்கான காசோலையை தலைமை நீதிபதி வழங்கினார். சென்னையில் தனியார் வங்கியொன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்த சத்யநாராயணன், மாதம் ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டி வந்தார். இந்நிலையில் விபத்தின்போது லாரி மோதி அவர் உயிரிழந்தார். ஆகவே, அந்த லாரியை காப்பீடு செய்திருந்த ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் தங்களுக்கு ரூ.10 கோடியே 45 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோரி சத்யநாராயணனின் தாயார், மனைவி மற்றும் மகள் சார்பில் சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு லோக் அதாலத்துக்கு மாற்றப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, சத்யநாராயணன் தாயார், மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியே 36 லட்சத்து 66 ஆயிரம் வீதம் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்வு ஏற்பட்டது. இதனையடுத்து இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை சத்யநாராயணன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE