உர்ஜித் படேல் ராஜினாமா: நாட்டின் பொருளாதாரம் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது; ஸ்டாலின்

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததன் மூலம், நாட்டின் பொருளாதாரம் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர், சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்திருக்கிறார். பாஜக மோடி ஆட்சியில் ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர்களே ராஜினாமா செய்யக்கூடிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாட்டினுடைய பொருளாதாரத்தின் மீது துல்லியத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, மேகதாது அணை தொடர்பாக சோனியா காந்தியிடம் ஏதாவது கோரிக்கை வைத்தீர்களா? என்றுசெய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ''இதுபற்றி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் பேசினேன். அவர்கள் சம்பந்தப்பட்ட மாநில முதல்வரிடம் பேசுவதாக உறுதி தந்துள்ளனர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடமும் இதுகுறித்துப் பேசியுள்ளேன்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE