கொடிவேரி அணைக்கு சுற்றுலா வரும் சிறுவர்களை கொல்ல முயற்சியா?- பணம் பறிக்க நடக்கும் சதி என பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி தகவல்

By எஸ்.கோவிந்தராஜ்

கொடிவேரி தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களை நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொடிவேரியில் குளிக்கச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் பரபரப்பான தகவல் வேகமாக பரவி வருகிறது. இத்தகவலால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடிவேரி அணைப்பகுதி பாதுகாப்பற்ற பகுதியா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் இத்தகவலைப் பகிர்ந்த வர் யார் என விசாரித்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த பி.திருவேங்கடம் என்ற மென்பொறியாளர் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:

எனது மகன்கள் பிரஜேஸ் (16), முகில் (14) உறவினர்களுடன் கொடிவேரி அணைக்கு சென்றபோது அங்கு குளித்துக் கொண்டிருந்த ஒருவர், நீச்சல் தெரியாது தத்தளிப்பதுபோல் தவித்துள்ளார். எனது மகன் பிரஜேஸுக்கு நீச்சல் தெரியும் என்பதால், அவருக்கு உதவி செய்ய சென்றான். நீரில் குளித்துக் கொண்டு இருந்தவர் எனது மகனை தாவி அணைத்து நீரில் மூழ்கடித்துள்ளார். அவன் அவரது பிடியில் இருந்து தப்பி நீருக்கு மேலே வந்துள்ளார். இதைப் பார்த்த எனது இன்னொரு மகன் முகில் அங்கு வரவே, அவனையும் அந்த நபர் இறுக்கி அணைத்து நீரில் மூழ்க வைத்துள்ளார். அவனும் அவரது பிடியில் இருந்து தப்பியுள்ளான். இதனைக் கண்ட எங்களது கார் ஓட்டுநர் அங்கு வந்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார்.

2 மகன்களையும் நீரில் மூழ்க வைத்தவர் கரையேறிய நிலையில் ஏன் இப்படி செய்தீர்கள் என எனது மகனும், ஓட்டுநரும் கேட்டுள்ளனர். அப்போது அந்த நபருக்கு ஆதரவாக கூடுதலாக 3 பேர் அங்கு வந்து, அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறிவிட்டு அழைத்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தோம். 15 நிமிடத்தில் போலீஸார் வந்தனர். அதற்குள் அவர்கள் நால்வரும் தப்பிவிட்டனர். மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்யவே சமூக வலைதளங்களில் பதிவிட்டேன் என்றார்.

சிறுவன் பிரஜேசிடம் பேசியபோது, ‘‘எனக்கும், என் தம்பிக்கும் நீச்சல் நன்றாகத் தெரியும். அந்த நபருக்கு 30 வயதுக்குள் இருக்கும். என் கையைப் பிடித்து ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்று மூழ்கடிக்கப் பார்த்தார். நீரில் மூழ்கி நீச்சல் அடிக்க எனக்குத் தெரியும் என்பதால் அவரிடம் இருந்து தப்பினேன். மீண்டும், மீண்டும் என்னை தொடர்ச்சியாக நீரில் மூழ்கடிக்கப் பார்த்தார்.

நான் நீரில் மூழ்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சி பெற்றவன். பொதுவாக நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினால், பார்வை மேல் நோக்கி போய்விடும். ஆனால், என்னை நீரில் மூழ்க வைத்த நபர், நீருக்குள் என்னை நேரடியாக பார்த்தபடியே உள்ளே அழுத்தினார். பங்களாபுதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, இன்ஸ்பெக்டர் இல்லை என்று கூறினர். அதனால், நாங்கள் திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்று விட்டோம் ’’என்றார்.

உடலை மீட்க ரூ.30 ஆயிரம்

கொடிவேரி அணைப்பகுதியில் வசிப்பவர்களிடம் பேசியபோது, ‘‘அணைநீர் வழிந்தோடும் இடத்தில் மணல்போக்கி என்ற அமைப்பு உள்ளது. 10 அடி ஆழத்துடன் கிணறுபோல் இருக்கும் இப்பகுதியில் சேறும், சகதியும் அதிகமாக இருக்கும். இந்த பகுதியில் நீரில் மூழ்கினால், கால் மாட்டிக்கொண்டு மூச்சுத் திணறி இறந்துவிட வாய்ப்பு உண்டு. இப்பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தது. இந்த மணல்போக்கியில் மூழ்கி மூச்சுத் திணறியும், நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டும் ஆண்டுக்கு 20 பேர் வரை இறந்து விடுகின்றனர்.

இவ்வாறு இறந்தவர்களின் உடல் நீரில் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் உள்ள புதர்களில் சிக்கிக்கொள்ளும். இறந்தவர்களின் உறவினர்கள் உடலைத் தேடித்தரக் கேட்டால் மீனவர்கள் ரூ.30 ஆயிரம் வரை கேட்பார்கள். எந்த இடத்தில் குளித்தால் உடல் எங்கு ஒதுங்கும் என்பதை மீனவர்கள் அறிந்து வைத்திருப்பதால், பணம் கொடுத்தால் மிக விரைவாக உடலை மீட்டுக் கொடுத்து விடுவார்கள்’’ என்றனர்.

எம்பி, எஸ்பி விசாரணை

திருப்பூர் எம்பி சத்தியபாமா சம்பவம் குறித்து திருவேங்கடத்திடம் விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். அதேபோல், ஈரோடு எஸ்பி சக்தி கணேசனிடமும், திருவேங்கடம் சம்பவம் குறித்து விளக்கியுள்ளார்.

இதுகுறித்து, எஸ்பி சக்தி கணேசனிடம் பேசியபோது, ‘‘நீரில் மூழ்கி இருக்கும் ஒருவரைக் காப்பாற்ற முயற்சித்தால், காப்பாற்றுபவரை சம்பந்தப்பட்டவர் நீரில் அழுத்தி இருக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 32 மீனவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள 4 கண் காணிப்பு கேமராக்களில் இந்த பதிவு இல்லை. கொடிவேரி பகுதியில் கூடுதலாக 20 கண் காணிப்பு கேமராக்களை அமைக்கவும், சுற்றுலாப் பயணிகள் வரும் நேரத்தில், அங்கு காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்