கஜா புயல் பாதிப்பு; குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் வேதாரண்யம் மக்கள்

By க.சே.ரமணி பிரபா தேவி

'கஜா' புயல் மற்றும் கனமழை காரணமாக நாகப்பட்டினம், கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடலோரப் பகுதிகளில் உள்ள பெரும்பான்மை வீடுகள் தரைமட்டமாகின. தென்னை, தேக்கு மரங்கள் விழுந்து வீடுகளின் ஓடுகள் நொறுங்கியும், சுவர்கள் இடிந்தும் சேதமடைந்தன. வீட்டை விட்டு வெளியே வர இயலாத அளவுக்கு வீட்டின் முன்பும், உட்பிரிவு சாலைகளிலும், மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எனினும் வீடு, வாசல், கால்நடைகள், உடைமைகளை இழந்த மக்களின் அவசியத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வேதாரண்யத்தைச் சேர்ந்த மருதூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.ராமலிங்கத்திடம் பேசினேன்.

எங்களின் அவசியத் தேவை உணவுதான். அரசு சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவை போதவில்லை. சில தன்னார்வக் குழுக்கள் இங்கே வந்து போகின்றன. முழுமையான உதவி கிடைக்கவில்லை. அத்துடன் மருந்துகள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, போர்வை ஆகியவற்றையும் எதிர்பார்க்கிறோம்.

வேதாரண்யம் வட்டத்தில் இன்னும் மின்சாரம் வரவில்லை. சுழற்றி அடித்த புயலால் அனைத்து மரங்களும் முறிந்து விழுந்து விட்டன. இதனால் சாய்ந்த மின் கம்பங்களை மீண்டும் நட்டுக்கொண்டிருக்கின்றனர். 20 கி.மீ. தூரத்துக்கு நிறுத்திக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு  திருவாரூர் வழியாக வாய்மேடு துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் அனுப்பப்படும். அங்கிருந்து வேதாரண்யத்துக்கு மின் விநியோகம் செய்யப்படும். மின்சாரம் இன்னும் வாய்மேட்டுக்கே வரவில்லை. அதனால் மின்சாரம் கிடைக்க இன்னும் சில நாட்கள் ஆகும்.

குடிநீருக்கே அவதி

இதைச் சிலர் பயன்படுத்திக் கொள்கின்றனர். மயிலாடுதுறையில் இருந்து வரும் தனியார் அமைப்பினர் 1 மணிக்கு 800 ரூபாய் வசூல் செய்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் அளிக்கின்றனர். பொருளாதார வசதி கொண்டவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, தண்ணீரை வீடுகளில் ஏற்றிக் கொள்கின்றனர். விளிம்புநிலை மக்களுக்கு அவ்வளவு செலவு செய்ய வசதி இல்லை. இதனால் குடிநீருக்கே சிரமப்படுகிறார்கள்.

 

குடிசை வீடுகள் தரைமட்டமானதால் பெரும்பாலான விளிம்பு நிலை மக்கள் முகாம்களில் வசிக்கின்றனர். ஓட்டு வீடுகளின் கூரைகள் அனைத்தும் நொறுங்கிவிட்டன. அங்கிருந்தவர்கள் முகாமுக்கும் செல்லாமல் வீட்டிலும் இருக்க முடியாமல் தவிக்கின்றனர். நேற்று மழை பெய்ததால் கூரை இல்லாத ஓட்டு வீடுகள் ஒழுகின. இன்று மழை இல்லாததால் பரவாயில்லை.

இப்போது 1 ஓடு 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தன்னார்வ அமைப்புகள் மூலம் பால் தங்கு தடையின்றிக் கிடைக்கிறது. ஓடுகள் விலை ஏற்றத்தால் தார்ப்பாயைப் போட்டு வீட்டைக் காப்பாற்ற நினைத்தவர்களுக்கும் அதிர்ச்சிதான் மிஞ்சியது. தார்ப்பாய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.

குடிசை வீடுகள் நீண்ட காலத் திட்ட அடிப்படையில் கான்க்ரீட் வீடுகளாக மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்கிறார் ராமலிங்கம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE