400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?- சமூக வலைதளங்களில் படங்களுடன் வைரலாகும் வதந்தி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சதுரகிரி மலையில் மஹாமேரு புஷ்பம் என்ற ஒருவகை பூக்கள் 400 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படங்கள் போலியானவை என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கின. இந்த அபூர்வ நிகழ்வைக் காண தமிழகம் மட்டுமல்லாது வட மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தாவரவியல் ஆர்வலர்கள் கொடைக்கானலுக்கு வந்தனர்.

குறிஞ்சி மலர்கள் நிகழ்வை போன்று மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் 400 ஆண்டு களுக்குப் பிறகு மஹாமேரு புஷ்பம் என்ற அரியவகை பூக்கள், தற்போது பூத்துள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ‘‘முடிந்தவரை மற்றவர்களும் பார்த் திடப் பகிருங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டு புகைப்படங்களுடன் பரப்பப்படுகின்றன.

இதுகுறித்து மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை தாவரங்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள காந்தி கிராமப் பல்கலைக்கழக உயிரியியல் துறை உதவிப் பேராசிரியரும், தாவரவியல் ஆர்வலருமான ராமசுப்பு கூறியதாவது:

சமூக வலைதளங்களில் 400 ஆண்டு களுக்கு ஒருமுறை பூக்கும் என பரப்பப்படுபவை ஆர்க்கிட் வகை செடியின் மலர்கள் மற்றும் காசி தும்பை வகையைச் சேர்ந்த மலர்கள் போன்று உள்ளன. அதிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. மஹாமேரு புஷ்பம் என்ற வகை மலர்களே கிடையாது. ஆர்க்கிட் வகை மலர்கள் வெளிநாட்டு ரகத்தைச் சேர்ந்த அலங்காரச் செடி. பொக்கே தயாரிப்பதற்கும், வீடுகளில் அழகுக்காகவும் இதை வளர்ப்பர்.

அதிக மழை பெய்து குளிர்ந்த காலநிலை நிலவும்போது, இவை நன்கு வளரும். காசி தும்பை மலர்ச் செடிகள் 3 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பவை. உலகத்தில் எந்த இடத்திலும் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகளே இல்லை. அதிகபட்சம் குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பவை. அதுவே, ஏன் என்ற காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஆனால், அவை அனைத்து இடங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்காது. சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே பூக் கிறது. ஒரே நேரத்தில், அதிகளவில் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடங் களில் பூப்பதால், குறிஞ்சி மலர் 12 ஆண்டு களுக்கு ஒரு முறை பூப்பதாக வரலாறு பதிவாகிவிட்டது. வதந்திகளை சுவாரசிய மாக்க படங்களை போலியாக போட்டோ ஷாப் செய்து சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியரும், இயற்கை ஆர்வலரு மான ராஜேஷ் கூறியதாவது: சமீபத்தில்கூட குழந்தை போன்ற உருவத்தில் தொங்கும் மலர்கள் மிக அபூர்வமாக இமயமலையில் பூத்துள்ளதாக புகைப்படங்கள் பரவின. அவை முழுக்க முழுக்க கிராபிக்ஸ்தான்.

அதுபோல், மஹாமேரு புஷ்பம் எனக் கூறப்படும் புகைப்படங்களில் உள்ள உருவ அமைப்பு இயற்கையான புகைப்படம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் இதுபோன்ற புகைப்படங்களை வைரலாக்கி பரபரப்பாக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய் துள்ளனர் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE