கோயமுத்தூர் வயது 213

By கா.சு.வேலாயுதன்

பவானியை தலைமையிடமாக வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக தென்கொங்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக பிறந்து இன்றுடன் 213 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கி.பி 1804 நவம்பர் 24-ல் கோவை மாவட்டம் உதயமானது. அதையொட்டி, கடந்த பத்து ஆண்டுகளாக நவம்பர் 24-ம் தேதியை கோயமுத்தூர் தினமாக கோவை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். கோவை மாநகராட்சியும் ஆண்டுதோறும் கோயமுத்தூர் தினத்தில் புகைப்படக் கண்காட்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சரித்திர முக்கியத்துவம்

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நகரமாக திகழ்ந்துள்ளது கோவை. இதுகுறித்து பேசும் தொல்லியல் அறிஞர் பூங்குன்றன், “தற்போதைய தெக்கலூர் அருகே நடந்த அகழாய்வில் வண்ணத்தாங்கரை என்ற இடத்தில் கால்நடைகளின் செமி ஃபாசில்கள் கிடைத்துள்ளன. அவை மேற்கே உள்ள குருடிமலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாளமடல் ஓடை, தன்னாசி பள்ளத்தில் கரைபுரண்ட காட்டாற்றில் அடித்துவரப்பட்ட மாடுகளாக இருக்கலாம் என்கிறார்கள். அப்போதே அங்கு கால்நடைகளை வளர்த்த நாகரிக மனிதர்கள் வாழ்ந் தார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

சோழ நாட்டையும், மேற்குக் கடற்கரையையும் இணைக்கும் ராஜகேசரி பெருவழி பாலக்காட்டு கணவாய்க்கு அருகில் செல்கிறது. கி.மு 4-ம் நூற்றாண்டிலேயே ரோமானிய கிரேக்க நாடுகளுடன் சோழநாடு வணிகத் தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு ஆதாரமாக இப்பெருவழியையொட்டி ஓடும் நொய்யலில் பல இடங்களில் அகழாய்வின்போது ரோமானிய காசுகள், அணிகலன்கள் கிடைத்துள்ளன. இதில் பழமையான நகரங்களாக திருப்பூர் மாவட் டத்தில் அமைந்துள்ள கொடுமணல், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர், பேரூர் இருந்துள்ளது” என்கிறார்.

“கி.பி. 10 மற்றும் 11-ம் நூற்றாண்டுகளில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரை 32 அணைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் கட்டி நீர் பரிபாலனம் செய்துள்ளனர் அன்றைக்கு இப்பகுதியை ஆண்ட சோழர்கள். இதனால், ஆண்டு முழுக்க செழிப்பான பகுதியாக இருந்தது கோவை. 1804-ல் பிரிட்டீஷார் கோவை மாவட்டத்தை உருவாக்கியபோது, கேரளத்தின் பாலக்காடு தொடங்கி கர்நாடகாவின் கொள்ளேகால் வரையிலும் கோயமுத்தூரின் பரப்பு பரந்து விரிந்திருந்தது.

அதிலிருந்து 1868-ல் நீலகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. கடந்த நுாற்றாண்டின் தொடக்கத்தில், பவானி, கோவை, தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், பாலக்காடு, உடுமலைப்பேட்டை ஆகியவை கோயமுத்தூர் மாவட்டத்தின் தாலுகாக்களாக இருந்தன. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிறந்தபோது, பாலக்காடு கேரளத்துடனும், கொள்ளேகால் கர்நாடகத்துடனும் இணைக்கப்பட்டன. மாவட்ட பிரிவினையின்போது, கரூர் தாலுகா திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு பின்னர், கரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உதயமானது.

இதேபோல், பவானி, தாராபுரம், சத்தியமங்கலம் ஆகியவை, 1979-ல் உருவான ஈரோடு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. கடைசியாக, 2009-ல் திருப்பூர், உடுமலை பகுதிகளை பிரித்து திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது” என்கிறார் கோயமுத்தூர் வரலாற்று நூல்களை எழுதியுள்ள சி.ஆர்.இளங்கோவன்.

கோனியம்மன் வரலாறு

“என்னங்கண்ணா.. ஏனுங்கண்ணா என்று அழைப்பதை மட்டுமே கொங்குச் சீமையாம் கோவையின் அடையாளமாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி பல நல்ல விஷயங்கள் கோவையின் சிறப்பைச் சொல்கின்றன. கோவையின் பெயர்க் காரணமாகச் சொல்லப்படும் கோனியம்மன் தற்போது அமைந்துள்ள இடத்துக்கு தெற்கே ஓடும் நொய்யலாற்றில் முன்பு இருந்தது.

ஆறு பெருக்கெடுத்து அழித்ததால் அம்மனை கோட்டைமேட்டில் கொண்டு வந்து வைத்தார்கள் என்கிறார்கள் சிலர். கோனியம்மன் தற்போது கோயில் கொண்டுள்ள இடத்துக்கு வடக்கில் ஓடும் சங்கனூர் பள்ளத்தில் இருந்தது. அங்கே வெள்ளம் வந்ததால்தான் தற்போதுள்ள இடத்துக்கு அம்மன் கொண்டுவரப்பட்டார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இதில் உண்மையான தகவல் எது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் வெளிக் கொண்டுவர வேண்டும்” என்கிறார் ஆண்டுதோறும் கோவை தின விழாக்களில் பங்கெடுத்து வரும் பேரூர் ஜெயராமன்.

கோவை பஞ்சாலைகளுக்கு புகழ்பெற்ற நகரம். இங்கே உருவான முதல் பஞ்சாலை ‘கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் (சி.எஸ்.டபிள்யூ). இதை உருவாக்கியவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர். தற்போது ‘என்டைஸ்’ நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த மில்லின் கட்டிடங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. கோவையின் முதல் ரயில் நிலையமும், தபால் அலுவலகமும் அமைந்தது போத்தனூரில்தான். தென் மேற்கிலிருந்து வீசும் கேரளத்தின் குளுமையான காற்று இங்கே இதமான தட்பவெப்பத்தைத் தந்ததால், ஆங்கிலேயருக்கு மிகவும் பிடித்தமான ஊராக இருந்தது போத்தனூர்.

ஆங்கிலேயர்கள் கட்டிய மிகப் பழமையான லண்டன் தேவாலயம் போத்தனூரில் உள்ளது. தற்போது கோவையிலுள்ள வனக்கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் நடத்தப்படும் விக்டோரியா ஹால், ரயில் நிலையம் எதிரில் உள்ள ஹாமில்டன் கிளப் எல்லாமே ஆங்கிலேயர் உருவாக்கித் தந்தவையே. எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரும் இணைந்து பணியாற்றிய சென்ட்ரல் மற்றும் பட்சிராஜா ஸ்டுடியோக்கள் இருந்ததும் கோவையில்தான்.

அடையாளங்களை பாதுகாப்போம்

இதில், ஹாமில்டன் கிளப் அண்மையில் காவல்துறை மியூசியமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வேளாண் பல்கலைக்கழகம், வனக்கல்லூரி, விக்டோரியா ஹால் போன்றவை பொலிவு மாறாமல் இருக்கின்றன. மற்ற கட்டிடங்கள் ஆங்காங்கே சிதிலமடைந்தும், உருத் தெரியாமலும் போய்க் கொண்டிருக்கின்றன. இவைகளையும் புதுப்பித்து பாரம்பரியம் மிக்க கோவைக்கான தனி அடையாளங்களாக பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள் கோவை மக்கள். பிறந்த நாளில் நாமும் கோவை செழிக்க வாழ்த்துவோம்.

(இன்று கோவை தினம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்