சென்னையிலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற தன்னார்வலர்களை அலைக்கழித்து நிவாரணப் பொருட்களைக் கீழே இறக்க பணம் கேட்ட அவலம் நாகையில் நடந்துள்ளது.
கஜா புயல் நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் 6 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. முக்கியமாக நாகை, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இங்குள்ள மக்களின் வாழவாதாரம் விவசாயம் மற்றும் மீன் பிடித்தொழில்.
புயலின் கோரத்தாண்டவம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒன்று என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நாகை, தஞ்சை மாவட்டங்களில் 5 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர், குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் வாடும் மக்கள் அதிகம்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் நல் உள்ளங்களால் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. சேகரிக்கும் தன்னார்வலர்கள் நேரடியாக லாரிகளில் ஏற்றி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சேர்க்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு அதிகாரிகள் உதவும் அதே நேரம் நிவாரணப் பொருட்களுடன் ஆதரவுக் கரம் நீட்டுபவர்களை நன்றியுடன் அரவணைக்கும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
புயலின் கொடுமையான நேரத்திலும் அரசு அதிகாரிகளின் நடத்தை நிவாரணப் பொருட்களுடன் செல்பவர்களை முகம் சுளிக்கவும், வேதனையில் ஆழ்த்தவும் செய்யும் சம்பவம் சில இடங்களில் நடக்கிறது.
நாகையில் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றவர்கள் மனிதாபிமானமற்ற அதிகாரிகளின் செய்கையால் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கஜா புயலின் பாதிப்பை ஊடகங்கள் வாயிலாக அறிந்த கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழுவினர் அங்குள்ள டிஆர்ஓ வழிகாட்டுதலின் பேரில் வியாபாரிகள் பொதுமக்கள் துணையுடன் காய்கறிகள், பழங்கள், அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள், தண்ணீர், மெழுகுவர்த்திகள், துணிகள், நாப்கின்கள் என தேவைப்படும் அத்தனைப் பொருட்களையும் திரட்டியுள்ளனர்.
இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் வரை இருக்கும். இவற்றைக் கொண்டு செல்ல 4 லாரிகளை வாடகைக்கு அமர்த்தி டீசல் போட்டு நாகப்பட்டினத்துக்கு அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தலைமையில் கொண்டு சென்றனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்களை வேர்ஹவுஸ் என்கிற இடத்திற்கு அனுப்பியுள்ளனர். இரண்டு லாரிகளில் பொருட்கள் கொண்டு வரப்பட்டதை இறக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டனர். ஒரு லாரியில் இருந்து பொருட்களை இறக்குவதற்குக் கூலியாக 2000 ரூபாய் தர வேண்டும். இல்லாவிட்டால் பொருட்களை கீழே இறக்க அனுமதிக்க மாட்டோம். அப்படியே சென்றுவிடுங்கள் என்று அலட்சியமாகக் கூறியுள்ளனர்.
நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிகாரி வாங்க மறுப்பதால் நாகை வெளிப்பாளையம் புது பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரமாக காத்திருந்த பின் ஒரு லாரிக்கு ரூ.1500 வீதம் 2 லாரிக்கு ரூ.3 ஆயிரத்தை சொந்தப் பணத்திலிருந்து கொடுத்து நிவாரணப் பொருட்களை லாரியிலிருந்து இறக்கியுள்ளனர்.
மேலும் காய்கறி, பழங்களை ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகளை வேறொரு இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அங்காடி நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர்களில் ஒருவரை 'இந்து தமிழ் இணையதளம்' சார்பில் அணுகி கேட்டபோது அவர் கூறியதாவது:
நீங்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற குழுவில் உள்ளவரா?
ஆமாம் சார், தற்போது நாகப்பட்டினத்தில் தான் உள்ளேன்.
நிவாரணப் பொருட்களை இறக்குவதில் பிரச்சினை என்று தகவல் வந்ததே?
ஆமாம், நாங்கள் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு மளிகைப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், துணிகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகள், பழங்களுடன் 4 லாரிகளில் சென்றோம்.
இன்று அதிகாலை 3 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் சென்றோம். ஆனால் ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணப் பொருட்களைப் பெறுவதில்லை. வேர்ஹவுஸ் என்ற இடத்தில் குடோன் உள்ளது. அங்கு செல்லுங்கள் என்று அனுப்பினர்.
அங்கு சென்றால் அழுகாத பொருட்களை மட்டுமே இறக்குவோம் என இரண்டு லாரிகளை வேறொரு இடத்திற்கு அனுப்பிவிட்டனர். மற்ற இரண்டு லாரிகளில் லோடை இறக்க ரூ.2000 தந்தால் இறக்குவோம் என்று கூறிவிட்டனர்.
நிவாரணப் பொருட்கள்தானே. அதற்கு பணம் எதற்கு?
அதைத்தான் கேட்டோம். இங்கு பணம் கொடுத்தால்தான் லோடை லேபர்கள் இறக்குவார்கள். ஒரு லாரிக்கு ரூ.2000 என ரூ.4000 கொடுங்கள் இல்லாவிட்டால் எடுத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டனர்.
எங்களிடம் பணம் அவ்வளவு இல்லை. இப்படி கேட்பார்கள் என்று தெரிந்திருந்தால் முன்னேற்பாடுடன் வந்திருப்போம், பின்னர் கெஞ்சிக் கூத்தாடி ஒரு லாரிக்கு ரூ.1500 எனப் பேசி ரூ.3000 என் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்தேன்.
எவ்வளவோ செலவு செய்கிறோம், நம் பங்காக நிவாரணப் பணிக்காக ரூ.3000 என நினைத்துக் கொண்டேன்.
லோடை இறக்கிவிட்டீர்களா?
இப்போதுதான் 10 மணி நேரம் கழித்து இறக்குகிறார்கள். நாங்கள் இதுவரை சாப்பிடவில்லை. ஒரு டீக்கடை கூட இங்கு இல்லை. ஏன் தான் கொண்டு வந்தோமோ? என சிந்திக்க வைத்துவிட்டனர். மற்ற இரண்டு லாரிகளையும் எங்கேயோ அனுப்பி வைத்தார்கள். அதன் நிலை என்ன என்று தெரியவில்லை.
இவ்வாறு வருத்தமுடன் தெரிவித்தார்.
நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர்க்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் அதைத் திரட்டி, சேகரித்து, வண்டி அமர்த்தி, டீசல் போட்டு தங்கள் வேலையை மறந்து கொண்டு வந்து சேர்க்கும் ஆர்வலர்களை அலைக்கழிப்பது வேதனையான ஒன்று. அதிகாரிகளின் அலட்சியத்தாலும், பணம் பிடுங்கும் செயலாலும் நாளை இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடவே யோசிப்பார்கள்.
நிவாரணப் பொருட்களைக் கொண்டுவந்தால் அதை இறக்கி வைக்கவும், கொண்டு வருபவர்கள் இளைப்பாற உணவு ஏற்பாடுகளைக்கூட செய்யாத அதிகாரிகள் இறக்குக் கூலி என பணம் பிடுங்குவது வேதனையான ஒன்று.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago