உற்ற தோழனாகவும், வீட்டின் காவலனாகவும் நம்மோடு இணைந்திருக்கும் செல்லப் பிராணிகள், பட்டாசு வெடி சத்தத்துக்கு பயந்து அவதிக்குள்ளாவதை தடுக்க, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கலாம்.
குற்றச் சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்றால், விசாரணைக்கு வரும் போலீஸார் முதலில் கேட்கும் கேள்வி, ‘வீட்டில் நாய் இருக்கிறதா?’ என்பதுதான். வீட்டில் வளர்க்கப்படும் நாய், சம்பவம் நடந்தபோது குரைத்ததா, இல்லையா என்பதை வைத்தே, குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர், பாதிக்கப்பட்டவருக்கு நெருக்கமானவரா, தொடர்பில்லாதவரா என்பதை தெரிந்து கொள்கின்றனர். செல்லப் பிராணிகளால் பாதி விசாரணை முடிந்துவிடுகிறது. சென்னை புறநகர் பல்லாவரத்தில் கடந்த செப்டம்பர் மாதம், வங்கி அதிகாரி ஒருவர் வீட்டில் நகை திருட்டு நடந்தது. அது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், திருட்டுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை முதலில் விஷம் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது. அப்படி, செல்லப் பிராணிகள் நமக்கு உற்ற தோழனாகவும், காவலனாகவும் விளங்குகின்றன.
குழந்தைகளின் மழலை கால செயல்களையும், பேச்சுக்களையும் நாம் ரசிப்போம். அந்த வாய்ப்பு சில ஆண்டுகள் மட்டுமே கிடைக்கும். குழந்தையாக இருக்கும்போது பெற்றோரை சுற்றி வந்த குழந்தைகள், வளர்ந்த பிறகு அவ்வாறு செய்வதில்லை. குழந்தைகள் வளர, வளர அவர்கள் மழலைக் காலத்தில் கொடுத்த மகிழ்ச்சியை பின்னர் தரமுடியாது. ஆனால் செல்லப் பிராணிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவை வாழும் வீட்டில் உள்ள அனைவரிடமும் குறும்புத் தனங்களை செய்து, அன்பைப் பொழியும். அதை பார்க்கும்போது எத்தனை கோபத்தில் இருந்தாலும், நமக்கு கோபம் தணிந்துவிடும். அத்தகைய சிறப்பு செல்லப் பிராணிகளுக்கு உண்டு.
செல்லப் பிராணிகளால், முதியவர்களின் தனிமை மறைகிறது. இதய நோயாளிகளுக்கு உள்ள பாதிப்புகள் குறைகிறது. நம் சுக துக்கங்கள், கோப தாபங்கள் அனைத்திலும் பங்கேற்று, நம்முடனே இருக்கும் செல்லப் பிராணிகள், அதிக ஒலியுடன் வெடிக்கப்படும் பட்டாசுகளால், சொல்லொணா துயரத்தை அனுபவிக்கின்றன.
இது தொடர்பாக பிஎஃப்சிஐ என்ற விலங்குகள் நல அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா கூறியதாவது:
அதிக ஒலியுடன் பட்டாசு வெடிப்பதால், செல்லப் பிராணிகள் பயந்து கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகி, மனதளவில் பாதிக்கப்படுகின்றன. பல செல்லப் பிராணிகள் தீக்காயமும் அடைகின்றன. பட்டாசு வெடிப்பதால், வேதிப்பொருட்கள் நிறைந்த குப்பைகள் உருவாகின்றன. அதில் கிடக்கும் உணவுப் பொருட்களை செல்லப் பிராணிகள் உண்ணும்போது உயிரிழப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதிக சத்தத்தை கேட்டு பயந்து, செல்லப் பிராணிகள் வெகுதூரம் ஓடி விடுகின்றன. அத்தகைய நேரங்களில் வாகனங்களில் சிக்கியும் உயிரிழக்கின்றன. வெகுதூரம் சென்று விடும் செல்லப் பிராணிகளுக்கு உணவு, குடிநீர், தங்குமிடம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றன.
செல்லப் பிராணிகளும் ஒரு உயிர்தான். அவையும் நம் குடும்ப உறுப்பினர்தான். அவற்றுக்கும் இந்த உலகில் அமைதியாக வாழ உரிமை இருக்கிறது. எனவே இந்த தீபாவளி திருநாளில், அவற்றுக்கு பிடித்த உணவுகளை வழங்கி, செல்லப் பிராணிகள் இருக்கும் இடங்களில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து, அவற்றுக்கு உகந்த தீபாவளியை கொண்டாடுவோம். அவை அதிக சத்தத்தால் பயந்தோடி தொலைந்துவிடுவதை தடுக்க, அவற்றின் கழுத்தில், நம் கைபேசி எண் மற்றும் முகவரி இடம்பெற்ற பட்டியை கட்டிவைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago