மருந்தில்லா மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 18-ம் தேதி, இயற்கை மருத்துவ தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய ஆயுஷ் (AYUSH) அமைச்சகம் அறிவித்தது. அதன்படி, முதலாவது இயற்கை மருத்துவ தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இயற்கை மருத்துவத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க தமிழக அரசு சார்பிலும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் வாழ்வியல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2014 செப்டம்பரில் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் நோய்களுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கேற்ப மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, சூரிய குளியல், வாழை இலை குளியல், அக்குபஞ்சர், யோகா என இயற்கையை வைத்தே குணப்படுத்துகின்றனர். காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இங்கு 34,000 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 110 பேர் வரை சிகிச்சைக்காக வருகின்றனர்.
எந்தெந்த நோய்கள்?
உடல்பருமன், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, மூட்டுவலி, மன அழுத்தம், மாதவிடாய் கோளாறு, குடற்புண் உள்ளிட்டவற்றுக்கு இங்கு மருந்துகள் இல்லாமல் சிகிச்சை அளிக்கின்றனர். மாத்திரை சாப்பிடுவோர் தொடர் சிகிச்சை பெறும்போது, படிப்படியாக மாத்திரைகளை குறைத்துவிடுகின்றனர்.
“உடலுக்கு தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் உள்ளது. அதை சரியாக பயன்படுத்தினாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்துவிடலாம். உடற்பயிற்சி செய்வதில்லை என்பதைவிட, உடல் உழைப்பு இல்லாமல் போவதே நோய்களுக்கு காரணமாகிறது” என்கிறார் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையத்தின் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் வி.புவனேஷ்வரி.
பச்சை காய்கறிகள்
வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் மேலும் கூறியதாவது:
அடிப்படை சத்துகள் குறையும்போது கழிவுகள் உடலில் தேங்கி உள் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. கழிவு மண்டலத்தின் வேலைத்திறன் அதிகரிக்கும்போது நோய் பாதிப்பு குறையும். எனவே, வாரத்தில் எல்லா நாட்களும் உணவருந்திக்கொண்டே இருக்காமல், ஜீரண மண்டலத்துக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். எனவே, உபவாசம் (விரதம்) இருப்பதன் அவசியம், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கிறோம்.
மூன்று வேளையும் அரிசி உணவை உட்கொள்ளாமல், ஒருவேளையாவது கேரட், வெள்ளரி போன்ற பச்சை காய்கறிகள், பழங்கள், முளைகட்டிய பயறு வகைகளை உட்கொள்ள வேண்டும். இதன்மூலம் உயிர்சத்துகளை நேரடியாக பெறலாம். எனவே, உணவு முறை குறித்தும் கவுன்சிலிங் அளிக்கிறோம்.
சூரிய குளியல்
எலும்புகள், மூட்டுகள் வலுவாக இருக்கவும், தோல் நன்றாக இருக்கவும் ‘வைட்டமின் டி’ அவசியம். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைட்டமின் டி சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. சூரிய வெளிச்சம் போதிய அளவு உடலில் படாமல் போவதே இதற்குக் காரணம். எனவே, சூரிய குளியலின் அவசியத்தை விவரிக்கிறோம். மண்ணில் சல்பர், மெக்னீசியம், ஜிங்க் போன்றவை உள்ளன. எனவே, மண்ணைக்கொண்டு மூட்டுவலி, தோல்நோய்கள், உடல்பருமன் ஆகியவற்றுக்கு மண் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருமணத்துக்கு தயாராவோருக்கு
திருமணத்துக்கு தயாராகும் இளைஞர்கள், பெண்களுக்கென பிரத்யேக யோக பயிற்சி, கர்ப்பிணி பெண்களுக்கான யோக பயிற்சியும் அளிக்கப்படுகிறது. உடல் நலனோடு, மன நலனும் முக்கியம் என்பதால் மன அழுத்தத்தைப் போக்க யோக பயற்சிகள் அளிக்கப்படுகின்றன. இயற்கை மருத்துவத்தில் நோய்கள் குணமாக சிறிது கால தாமதமானாலும், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். எனவே, சிகிச்சை பெறுவோர் தொடர்ந்து கிசிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் பி.அசோகன் கூறும்போது, “வாழ்வியல் முறை மாற்றத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிறப்பான முறையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago