கஜா புயல் பாதிப்பு வரலாறு காணாத பாதிப்பு, ஓரிரு வாரங்களில் சீரமைப்போம் என அமைச்சர் சொல்வது சாத்தியமில்லாதது என மின் ஊழியர் தொழிற்சங்கத் தலைவர் மறுத்துள்ளார்.
கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குக்கிராமங்களுக்கு இன்றுவரையிலும் அரசின் உதவி போய்ச்சேரவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
அரசை விமர்சிக்கும் அனைவரும் ஒரு விஷயத்தில் மட்டும் அரசின் நடவடிக்கையை பெருமையுடன் பாராட்டுகின்றனர். அது மின் வாரிய ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க பணி. எட்டு நாட்களாகியும் மின்சாரமின்றி கும்மிருட்டில் வாடும் டெல்டா மாவட்ட மக்களுக்கு மீண்டும் மின்சாரம் கிடைக்க உணவு, தங்குமிடம், அடிப்படை வசதி மறந்து ஒரு நாளைக்கு 13 மணி நேரத்திற்குமேல் மின் தொழிலாளர்கள் கடுமையான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப்பணியில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டுபேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் மூன்று நாளில் மின்சாரம் வரும் என்று அமைச்சர் கூறினாலும், 8 நாட்கள் ஆகியும் மின்சாரம் கிடைக்காத பெரும்பாலான இடங்கள் உள்ளன. இதன் உண்மை நிலை என்ன, எவ்வளவு சேதம், எப்போது மின்சாரம் திரும்ப முழுமையாக கிடைக்கும், மின் ஊழியர்களின் கோரிக்கை என்ன? என்னதான் நடக்கிறது என்பது குறித்த கேள்விகள் பல பொதுமக்களிடம் உள்ளது.
அமைச்சர் சொல்வது சரியா? உண்மை நிலை என்ன? என்பதை புயல் பாதித்த பகுதிகளில் தங்கள் குழுவினருடன் 3 நாட்கள் தொழிலாளர்களுடன் தங்கி ஆய்வு நடத்திய, மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்ரமணியம் அவர்களிடம் இந்து தமிழ் திசை இணையதளம் சார்பில் கேள்விகளாக வைத்தபோது அவர் அளித்த பதில்:
புயல் பாதித்த மாவட்டங்களில் மின் பிரச்சினையின் உண்மை நிலை என்ன?
மின்வாரியம் 1957-ல் தோற்றுவிக்கப்பட்டு 61 ஆண்டுகள் கடந்துள்ளது. 61 ஆண்டுகளில் பலவித புயல், வெள்ளம் இயற்கைச் சீற்றங்களை சந்தித்துள்ளது. ஆனால் கஜா என்கிற இந்த புயல் ஏற்படுத்திய இழப்பு பேரிழப்பு. மின்வாரியம் சந்திக்காத ஒன்று.
இழப்பு எவ்வளவு என்று சொல்ல முடியுமா?
சுமார் ஒரு லட்சத்தும்க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்துள்ளது. 4500 கி.மீட்டர் சுற்றளவு உள்ள குறைந்தழுந்த மின்கம்பிகள், 1500 கிலோ.மீட்டர் சுற்றளவு உள்ள உயர் அழுத்த மின்கம்பிகள், 840-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளது. இது ஏற்பட்ட இழப்பு. இதை சரிசெய்யும் முயற்சித்தான் தற்போது நடக்கிறது.
இவ்வளவு இழப்பை சில வாரங்களில் சரிசெய்வோம் என அமைச்சர் பேட்டியளிப்பது சாத்தியப்படுமா?
மின் துறை அமைச்சர் 5 நாட்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறும்போது வேகமாய் 3 நாட்களில் கிராமப்புறங்களுக்குட்பட்டு மின்சாரம் வழங்கிவிடுவோம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் 3 நாட்களுக்கு முன் சொல்வது கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள இழப்புகள் உட்பட அனைத்தையும் சரிசெய்ய 15 நாட்களாகும் என்கிறார். இதைத்தான் நாங்கள் முன்பே சொன்னோம்.
4a91e5a3-0333-4d03-9f58-c25c726a980ajpg100
இதை தீர்க்க எவ்வளவு மனித சக்தி தேவை?
தமிழக மின்சார வாரியம் ஒரு கணக்கை கொடுக்கிறது 7 மாவட்டங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 7 மாவட்டங்களிலும் பணியாற்றுபவர்கள் 8000 பேர், இதர மாவட்டங்களிலிருந்து 5000 பேரை நாங்கள் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம் என்கின்றனர். இந்தக்கணக்கை வைத்துத்தான் முதலில் 3 நாட்கள் என்றார். தற்போது 15 நாட்கள் என்கிறார்.
எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்னவென்றால் இதற்கு முன்னர் வார்தா புயலின்போது 30 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்போது மின்வாரியம் 3000 பேரை மட்டுமே இறக்கி நிவாரணப்பணியை செய்தார்கள். அப்போது நாங்கள் தலையிட்டு 20 ஆயிரம் பேரை ஈடுபடுத்தினால்தான் முழுமையான நிவாரண பணியை முடிக்க முடியும் என்று தெரிவித்தோம். ‘
அரசு அப்போது 18 ஆயிரம் பேரை உடனடியாக இறக்கி செயல்பட்டு முடித்தது. 30 ஆயிரம் மின் கம்பங்களுக்கு 18 ஆயிரம் பேர் தேவை ஏற்பட்டது. இப்போது அதேபோன்று 3 மடங்குக்கும் மேலான 1 லட்சம் கம்பங்கள் சாய்ந்துள்ளது. 30 ஆயிரத்துக்கு 18000 தொழிலாளிகள் வேலை செய்தால் 1 லட்சத்துக்கு எத்தனைபேர் வேலை செய்யணும் யோசித்துப் பாருங்கள்.
இதில் என்ன செய்ய வேண்டும் என சொல்கிறீர்கள்?
வார்தா புயல் பாதிப்பைவிட மும்மடங்காக உள்ள பணிக்கு குறைந்தப்பட்சம் 25000 தொழிலாளர்களை ஈடுபடுத்தவேண்டும். அப்படி செய்தால் அமைச்சர் சொல்வதுபோல் மாவட்ட தலைமையிடம், தாலுகா தலைமையிடம், சில கிராமங்களில் மின்சார இணைப்பை மனித சக்தியை பயன்படுத்தினால் சரி செய்ய முடியும்.
இது உட்புற கிரமங்களுக்கு அல்ல என்பதையும் தெரிவிக்கிறேன்.
download-6jpg100
மனித உழைப்புத்தவிர வேறு என்ன பிரச்சினைகள் உள்ளது?
மனித சக்தியை அதிகப்படுத்தும் அதே நேரத்தில் பேரிடர் இழப்புகளை சரிசெய்ய போதிய கிரேன் கிடையாது, பள்ளம் தோண்ட, மற்ற பணிகளில் பயன்படும் ஜேசிபி எந்திரங்கள் இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே கொடுக்கிறார்கள். அதையும் முழுமையாக பயன்படுத்தினால் சாத்தியமாகும்.
மனித சக்திகளை இரட்டிப்பாக்குவது, தேவையான ஜேசிபி, கிரேன் போன்ற எந்திரங்களை பயன்படுத்தினால் அமைச்சர் கூறுவதுபோன்று 15 நாளில் ஓரளவுக்காவது நிவாரணம் காணமுடியும்.
அவ்வளவு தொழிலாளர்களை ஈடுபடுத்த தமிழக மின்வாரியத்துக்கு சாத்தியமாகுமா?
இருக்கிறார்கள், மின் வாரியத்தில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஆள் பற்றக்குறை ஒருபக்கம் இருந்தாலும், இதர பகுதிகளில் அவசரத்தேவைக்காக ஓரிரண்டுப்பேரை நிறுத்தி வைத்து அனுப்பலாம். மின் வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் குறையாத ஒப்பந்தப்பணியாளர்கள் உள்ளனர்.
தற்போது அந்தப்பகுதிகளில் 3000-க்கும் சற்றுக்குறைவாக ஒப்பந்த தொழிலாளர்களைத்தான் பயன்படுத்துகின்றனர். பல மாவட்டங்களில் சேவை மனப்பான்மையுடன் பணிக்கு வர தயார் என்று தெரிவித்தும் அரசு கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் அண்டை மாநிலத்திலிருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அண்டை மாநிலங்களிலிருந்து ஏன் மின் பணியாளர்களை கொண்டுவரவேண்டும்.
அவ்வாறு வருபவர்களுக்கு இங்குள்ள பணிகுறித்த தெளிவு இருக்காது. இங்குள்ளவர்களுக்குத்தான் பணி குறித்த தெளிவு இருக்கும்.
அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்கப்படுகிறதா?
தொழிலாளிகள் பல மணி நேரம் வேலை செய்கிறார்கள், ஆனால் அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் இல்லை. அவர்கள் கொசுக்கடியில், சாலையில் உண்ண, உறங்க தயாராக உள்ளார்கள். ஆனால் இயற்கை உபாதைகளுக்கான அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என்றால் எப்படி. குடி நீர் வசதிகள் இல்லை.
ஒரு மண்டபம் பிடிக்கிறார்கள் அங்கிருந்து வேறு இடம் என மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அங்காங்கே நிவாரண முகாம் அமைத்து வாகன வசதி செய்து தொழிலாளர்களை அழைத்துச் செல்லவேண்டும் இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
b185658c-0a66-4b94-a3fd-3a86ca7316f4jpg100
உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடும், வாரிசு வேலையும் அளித்துள்ளதே?
உயிரிழக்கும் தொழிலாளிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், வாரிசுக்கு வேலையும் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். ஆனால் 15 லட்சம் அறிவித்துள்ளார்கள். அதிலும் கொடுமை என்னவென்றால் உயிரிழந்த 3 பேரில் இரண்டு பேர் நிரந்தர தொழிலாளர்கள், ஒருவர் ஒப்பந்த தொழிலாளி.
அரசு இரண்டு நிரந்தர தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மட்டும் இழப்பீடு வழங்கியுள்ளது. ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு வழங்கவில்லை. உயிர் அனைவருக்கும் ஒன்றுத்தானே. இதில் என்ன வித்தியாசம். இந்தப்பாகுபாடு வேண்டாம் என்கிறோம் நாம்.
சோமசுந்தரம் என்கிற ஒப்பந்தத் தொழிலாளி கடலூர் காட்டுமன்னார்க்கோவிலை சேர்ந்தவர். பழைய மின்கம்பத்தின் மீது இருக்கும் உபகரணத்தை அகற்றும்பணியில் உயிரிழந்தார். புதிய உபகரணம் அளித்திருந்தால் உயிர் போயிருக்குமா? கிரேன் இருந்திருந்து உரிய உபகரணம் இருந்திருந்தால் உயிர் போயிருக்காது.
download-7jpg100
ஒரு லட்சம் மின்கம்பங்கள் தேவை எனும்போது, பல ஆயிரம் கிலோ மீட்டர் நீள மின்கம்பிகள் நம்மிடம் உள்ளதா?
நிச்சயம் கிடையாது. நம்மிடம் உள்ள கம்பங்கள் மொத்த எண்ணிக்கையே 30 ஆயிரம் தான் உள்ளது. உபகரணங்கள் இல்லை. நாங்கள் சென்ற இடமெல்லாம் தொழிலாளர்கள் சொன்னது மின் கம்பங்கள் தரவில்லை, உபகரணங்கள் இல்லை, கிரேன் இல்லை, நாங்கள் பல மணி நேரமாக வேலையின் வெறுமனே நிற்கிறோம் என்று சொல்லும் நிலையைத்தான் அனைத்து இடங்களிலும் பார்த்தோம்.
அப்படியானால் இதை எப்படி ஈடுகட்ட முடியும்?
மீதி தேவைப்படும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்களை வெளி மாநிலங்களிலிருந்துதான் வாங்கவேண்டும், இதே போன்று தேவைப்படும் மற்ற உபகரணங்களையும் வாங்கவேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள சேதம் எவ்வளவு?
சுமார் ஆயிரம்கோடி என்று அரசு சொல்கிறது. அது சரியான கணக்கீடுதான் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத்தான் ஆகும்.
இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?
விவசாயப்பணிகள் தவிர்த்து மற்ற அனைத்து மின் சர்வீஸ்களையும் கடலோர மாவட்டங்களில் தரைக்கடியில் மின் கம்பிகளை புதைக்கும் திட்டத்தை அமல்படுத்தினால் விபத்துக்களை தவிர்க்கலாம், இதுபோன்ற பேரிடர் காலங்களில் அதிக சேதம் ஆகாது. புயலடித்து ஓய்ந்த உடனேயே மின்சாரத்தை வழங்கலாம்.
45d27626-d137-4e6e-97ff-a56302595a47jpg100
இதற்கு எவ்வளவு தொகை செலவாகும்?
இதை இப்படி பாருங்கள், புயலடிக்கும் ஒவ்வொரு தடவையும் இதுபோன்ற பாதிப்பினால் பல நூறுகோடி செலவு செய்கிறார்கள். அனைவரும் சிரமம். புயல் தாக்கும் கடலோர மாவட்டங்களில் இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஒருமுறை முதலீடு செய்வதன்மூலம் இப்படி ஒவ்வொருமுறை பாதிக்கும்போதும் செய்யப்படும் செலவுகளை முற்றிலும் தவிர்க்கலாம். இதைச்செய்யாமல் ஓவொருமுறையும் இப்படிச் செய்யப்படும் செலவுகள் கிணற்றில் போடும் கல் போன்றதுதான். வீண் செலவு.
குக்கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?
இப்போது உள்ள மனித உழைப்பு, இவர்கள் செய்யும் பணியை வைத்து நாங்கள் கணக்கீடு செய்ததில் ஒரு மாதம் வரை ஆகும் என்று தெரிகிறது. கன்னியாகுமரியில் தாக்கியதே ஓக்கிப்புயல் அப்போதைய பாதிப்பில் பேச்சிப்பாறை பெருஞ்சானை ஆகிய இடங்களுக்கு ஒன்றரை மாதங்களுக்கு பிறகுதான் மின்சாரம் கொடுக்க முடிந்தது.
மேற்கண்ட தகவல்களை அமைச்சர், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுச்சென்றீர்களா?
ஆமாம் கொண்டுச்சென்றோம். அமைச்சர் அதிகாரிகள் அனைவர் கவனத்திற்கும் கொண்டுச் சென்றோம், பார்க்கிறோம் என்பது மட்டுமே பதிலாக உள்ளது.
அதிகாரிகள் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?
அதிகாரிகள் மட்டத்தில் ஒத்துழைப்பு பெயரளவுக்குத்தான் உள்ளது. முக்கிய இடங்களில் முகாமிட்டு உட்கார்ந்துக்கொள்கிறார்கள். ஸ்பாட்டுக்கு போய் நேரடியாக வேலை வாங்கி தட்டிக்கொடுத்து அடுத்த இடத்துக்கு கொண்டுச்செல்லும் பணியை கவனிக்கணும். ஆனால் அந்த ஒருங்கிணைப்பு பணி இல்லை.
60 ஆயிரம் மின் கம்பங்கள் எப்படி வாங்குவார்கள்? பழைய மின் கம்பங்களை பயன்படுத்த முடியாதா?
தற்போதுள்ள மின் கம்பங்கள் தரமற்றவை. மீண்டும் பயன் படுத்தவே முடியாது. 10 ஆண்டுகளுக்கு முன் நமது மின்சார வாரியத்திலேயே மின் கம்பங்களை தயாரிப்பார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிரண்டு இடங்களில் இந்த தயாரிப்புகள் இருக்கும். ஆனால் அதை அவுட்சோர்சிங் விடுவது அண்டை மாநிலத்தில் டெண்டர் விட்டு வாங்குவது என முடக்கி விட்டார்கள்.
வடமாநில அதிகாரிகள் அவர்களது மாநிலத்தில் உள்ள ஆட்களுக்கு மின்கம்பம் தயாரிக்க ஆர்டர் கொடுத்து அத்தனையும் தரமிழந்தவைத்தான் பதிக்கப்பட்டது. இவை அனைத்தும் மாற்றப்படவேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago