‘கஜா’ புயல் பாதித்த கடந்த 15-ம் தேதி இரவுப் பொழுது முழுவதையும் வேதாரண்யம் பகுதி மக்கள் மரண பயத்துடன் கழித்துள்ளனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் பலரும் தவிக்கின்றனர்.
வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிகுளம் நடுசேத்தியில் உள்ளது ஆவுடைக்கோன்காடு. விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அங்குள்ள காளியம்மன் கோயில் தெருவில் 114 குடும்பங்கள் வசிக் கின்றன. அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள். நிறைய குடிசைகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டங்களில் கட்டப்பட்ட வீடு களும் உள்ளன. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக பல வீடுகளில் ஜன்னல்கள் பொருத் தப்படவில்லை. சில வீடுகளில் கதவுகள் போதிய பாதுகாப்புடன் இல்லை. சுமார் 300 சதுர அடி பரப்புள்ள ஒரு சமுதாயக் கூடம், ஒரு கோயிலும் உள்ளது. இதைத் தவிர, வேறு பொதுக் கட்டிடம் எதுவும் அங்கு இல்லை.
அப்பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர், மிரட்சியுடன் தங்கள் அனுபவத்தை கூறியதாவது:
“புயல் வீசப் போகுது; மழை கொட்டப் போகுதுனு சொல்லிட்டே இருந்தாங்க. ஆனால், பகல் பொழுது முழுவதும் வழக்கம்போல வெயில்தான் அடிச்சுது. கொஞ்சம் கூட மழை இல்லை. காற்றுகூட இல்லாமல், ரொம்ப அமைதியா இருந்திச்சு. இரவு 8 மணி வரைக் கும் புயலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால, புயல் வீசும்னு யாருமே நம்பல.
மாலை 6 மணிக்கு கரன்ட்டை நிறுத்திட்டாங்க. அதனால, சீக் கிரமே சாப்பிட்டுட்டு, தூங்கப் போனோம். இரவு 9 மணிக்கு லேசா மழை பெய்ய ஆரம்பிச்சுது. 10 மணி வாக்கில் கொஞ்சம் பலமாக காற்று வீசத் தொடங்கியது. இது புயலாக மாறப்போகுதுன்னு அப்போகூட நாங்க நினைக்கலை.
பத்தரை மணி இருக்கும். சுழல் காற்று வீசத் தொடங்கிச்சு. சொன்னபடியே புயல் வந்துடுச்சோன்னு, மனசெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. அடுத்த அரை மணி நேரத்தில, ‘ஊய்.. ஊய்..’னு பயங்கர சத்தத்தோட பேய்க் காற்று வீசியது.
தூங்கிட்டிருந்த குழந்தைகளை எல்லாம் தூக்கிக்கிட்டு அருகே இருக்கிற சமுதாயக் கூடத்துக்கு ஓடினோம். சுமார் 300 சதுர அடி மட்டுமே கொண்ட கட்டிடத்துக்குள்ள நாப்பது, அம்பது பேர் தஞ்சம் புகுந்தோம். இட நெருக்கடி. உட்காரக்கூட இட மில்லை. குழந்தைகளைத் தூக்கி வைச்சுக்கிட்டு, நின்னுட்டே இருந் தோம்.
நேரம் போகப் போக, காற்றின் கோரத்தாண்டவம் அதிகமாகிட்டே போச்சு. நடுராத்திரி 1 மணி இருக்கும். அதிபயங்கர சத்தத்தோட காற்று சுழன்று சுழன்று வீசியது.
எங்கள் குடிசை வீடுகள் எல்லாம் சின்னாபின்னமா ஆகியிருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டோம். பக்கத்துல இருந்த மரங்கள் எல்லாம் முறிஞ்சு, நாங்க நின்னுட்டிருந்த கட்டிடத்து மேல விழுந்துட்டே இருந்திச்சு. அந்த கட்டிடமும் இடிஞ்சு விழப்போகுதுன்னுதான் நினைச்சோம். விடிஞ்சா, உயிரோட இருப்போமா என்பதே தெரியல.
குழந்தைகள் பயத்துல அழ ஆரம்பிச்சிட்டாங்க. பெரியவங் களுக்குகூட பயம் வந்திடிச்சு. கும்மிருட்டுல, பக்கத்துல நிக்கிறது யார்னுகூட தெரியல. விடிய விடிய அப்படியே நின்னுட்டிருந்தோம்.
காலை 6 அல்லது 7 மணி இருக்கும். காற்றின் வேகம் சற்று குறைந்தது. கட்டிடத்தைவிட்டு மெதுவா வெளியே வந்தோம். அது எங்க கிராமம்தானா என்பதே தெரியவில்லை. திரும் பிய பக்கமெல்லாம் மரங்கள் தாறுமாறாக கிடந்தன. பாதைன்னு எதுவுமே இல்லை. முறிஞ்சு விழுந்த மரங்களுக்கு நடுவுல புகுந்து போய், வீடுகளைத் தேடினோம்.
இதுநாள் வரை குடும்பம், குட்டிகளோட வசிச்ச எங்க சொந்த வீட்டையே தேடிக் கண்டுபிடிக்கிற அளவுக்கு பல வீடுகள் அடையாளம் தெரியாதபடி உருக்குலைந்து கிடந்தன.
காதில் ஒலிச்சிட்டே இருக்கு
அந்த ராத்திரி நேரத்தில ஆக்ரோஷமா வீசுன புயல் காற்றின் சத்தம், இன்னும் காதில் ஒலிச்சிட்டே இருக்கு. அதை இப்போ நினைச்சாலும் பதறுது. படுத்தா, தூக்கம் வரலை. எங்களால் அந்த இரவை மறக்கவே முடியவில்லை. அந்த கொடுமையான நினைவில் இருந்து மீண்டுவர முடியாம தவிக்கிறோம்.
வீடுகள் எல்லாம் உருத்தெரி யாமல் நிற்கின்றன. அதை இப் போது சீரமைக்க முடியாது. இதுமட்டுமில்லாம, பல பொருட் களையும் பறிகொடுத்திருக்கோம். எங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையை யும் இந்த புயல் சின்னாபின்ன மாக்கிட்டு போய்டிச்சு.
நாங்கள்லாம் தினக்கூலி தொழிலாளர்கள். எங்க வாழ்க்கை, எதிர்காலம் எல்லாம் ஒரே இரவுல சிதைந்து போய்டிச்சு. திரும்பவும் நாங்க பழைய நிலைமைக்கு எப்போ வரப்போறோம்னு தெரியல..!’’
இவ்வாறு கண்ணீர்மல்க கூறினார் உமாதேவி.
அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.குணசேகரன் கூறும்போது, “புயலில் சிக்கி ஏராளமான ஆடு, மாடு, கோழிகள் இறந்துவிட்டன. காயமடைந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். சேதமடைந்த வீட்டு கூரைகள் மேல் தார்ப்பாய்களைக் கொண்டு தற்காலிகமாக மூடிவருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை கட்டித் தர வேண்டும்.
எங்கள் பகுதியில் இருந்த சிறிய சமுதாயக்கூடக் கட்டிடம்தான் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. அந்த கட்டிடத்தை விரிவுபடுத்தி, பெரிதாக கட்டித் தர வேண்டும். இப்பகுதியில் உள்ள எல்லா கிராமங்களிலும் இதுபோன்ற அரசுக் கட்டிடங்களை அதிக அள வில் கட்டினால், ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்’’ என்றார்.
இந்த கிராமம் ஓர் உதாரணம் மட்டுமே. வேதாரண்யம், தலை ஞாயிறு பகுதிகளில் உள்ள பல கிராமங்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.
புயலால் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அந்த மக்களுக்கு இப்போதைய தேவை என்பது அரசுகள் அளிக்கும் நிவாரணம் மட்டுமல்ல; பிற பகுதி மக்களின் அன்பும், ஆதரவும், அரவணைப் பும்தான்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago