கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது போச்சம்பள்ளி வாரச்சந்தை. நான்கு தலைமுறை நட்பு நிலவும் பழமையான இச்சந்தையில் கலப்படமில்லாத பொருள்கள் வருவாய் நோக்கின்றி விற்பனை செய்யப்படுகிறது என 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போச்சம் பள்ளி சந்தையின் பெருமையை வெளிப்படுத்துவதாக அமைந் துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நகரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது. தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் இச்சந்தையில் காய்கறிகள் முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுவது சிறப்பாகும். இச்சந்தைக்கு போச்சம் பள்ளி, பாளேத்தோட்டம், புளியம்பட்டி, புதுவயலூர், கரடியூர், புலியூர், அரசம்பட்டி, கூச்சானூர், ஆனந்தூர், கல்லாவி, சந்தூர், காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைவிக்கப்படும் பொருட்களை நேரடியாக போச்சம்பள்ளி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் அதிகளவில் சந்தைக்கு வருகை தந்து பொருட்களை விற்றும், வாங்கியும் செல்கின்றனர். சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரம் கடைகளுடன் செயல்பட்டு வரும் இச்சந்தை, ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பு இருந்தே போச்சம்பள்ளியில் கூடுவதாக கூறுகின்றனர் போச்சம்பள்ளி பகுதி விவசாயிகள்.
அவர்கள் மேலும் கூறும் போது, பொதுவாக வாரந்தோறும் நடைபெறும் சந்தைகள் அன்றைய தினம் காலை தொடங்கி மாலை நிறைவடையும். ஆனால் போச்சம் பள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று கூடும் சந்தைக்கு, வியாபாரிகள், விவசாயிகள் அனைவரும் சனிக்கிழமை இரவே வந்து கடைகளை அமைக்கும் பணியைத் தொடங்கி விடுவர். அதிகாலையில் ஆடு, மாடு, கோழிகளும், ஓட்டல் உள்ளிட்டவையும் தொடங்கும். இச்சந்தையில் கடுகு, சீரகத்தில் இருந்து சிறுதானியங்கள், நவதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், அரிசி வகைகள், விவசாயத்துக்கு தேவையான இரும்பு பொருட்கள், இயற்கையின் அத்தியாவசியத்தை உணர்த்தும் மூங்கில் கூடைகள், முறம், பாய், மண் பாத்திரங்கள் என அனைத்து பொருட்களும் தரமாகவும், மலிவாகவும் கிடைக்கிறது.
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், தங்கம், வெள்ளி ஆகியவையும் விற்பனை செய்யப்படும் இடமாக போச்சம்பள்ளி சந்தை திகழ்கிறது. சந்தைக்கு வரும் மக்கள் தங்கம், வெள்ளி அணிகலன்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். தற்போது எலக்ட்ரானிக் பொருட்களும் சந்தையில் விற்பனை செய்யப்படுவது போச்சம்பள்ளி சந்தையின் சிறப்பம்சம். பாத்திரங்கள், துணிமணிகள் ஒரு குடும்பத்துக்கு, தொழிலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் இங்கு வாங்கலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் போச்சம்பள்ளி சந்தைக்கு முக்கிய பங்கு உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
அடிப்படை வசதிகள் குறைவு
போச்சம்பள்ளி வாரச்சந்தை, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. சந்தையில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. சந்தையில் அவ்வப்போது குப்பைகள் கொட்டி தீ வைக்கப்படுகிறது. மேலும், சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை. கால்நடைகளுக்கும் தண்ணீர் வசதி இல்லை.
அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சந்தையில் கூடுதலாக கடைகள் அமைக்க வேண்டும். சந்தையின் 4 புறங்களிலும் கேட் அமைத்து பூட்டுவதுடன், காவலாளி நியமித்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாடுகள் பூட்டிய வண்டியில் வியாபாரிகள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கிராமங்கள் வழியே சந்தைக்கு வரும்போது, வண்டியின் சக்கரத்தில் உள்ள அச்சாணியில் பொருத்திய மணிகள், மாடுகளின் கழுத்தில் கட்டியிருக்கும் மணிகள் ஆகியவற்றின் ஓசையை வைத்தே ஞாயிறு சந்தை கூடுகிறது என கிராம மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
பாடத்தில் சந்தையின் பெருமை
9-ம் வகுப்பு புதிய பாடத் திட்டத்தில் 2-ம் பருவ தமிழ் பாடப் புத்தகத்தில் 'தொழில் பல முனைதல்' பகுதியில் வரும் சந்தை பாடத்தில் ‘தெரியுமா’ என்ற தலைப்பில் போச்சம்பள்ளி வாரச்சந்தையை பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தக்காளி முதல் தங்கம் வரை வாங்குவதற்கு மக்கள் போச்சம்பள்ளியில் கூடுகிறார்கள். விற்பவரும் வாங்குபவரும் உறவுகளாகப் பேசி மகிழும் ஆரவாரம் அங்கே ஒலிக்கிறது. 125 ஆண்டுகள் வயதான அச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது. கலப்படமில்லாத பொருள்களை வருவாய் நோக்கின்றி அச்சந்தை இன்றும் விற்பனை செய்கிறது என சந்தையின் பெருமைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago