‘சர்கார்’ படக் காட்சி ரத்து: மதுரையில் அதிமுகவினர் முற்றுகைப் போராட்டத்தால் பதட்டம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழக அரசையும், ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் வசனங்களை நீக்க வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) மதியம் மதுரையில் ‘சர்கார்’ படம் ஓடிய சினிப்பிரியா தியேட்டர் முன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் முற்றுகைப் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த தியேட்டரில் இன்று மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதையில் தொடங்கி அதன் வசனங்கள் வரை சர்ச்சைகள் கொடிகட்டிப் பறந்தது. தற்போது இந்தப் படத்தின் ஒரு காட்சியில், தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் துணை நடிகர்கள் தூக்கி எறிவது போன்ற காட்சி இருப்பதாகவும், அப்படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியதாகவும் அதிமுகவினர் கடந்த 2 நாளாக கொந்தளிப்பில் உள்ளனர்.

இன்று மதியம் மதுரையில் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ‘சர்கார்’ படம் ஓடிய அண்ணாநகர் சினிப்ரியா காம்ப்ளக்ஸ் தியேட்டர் முன் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும், சர்காரில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளையும், காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

அதனால், தியேட்டர் முன் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனடியாக குவிக்கப்பட்டனர். அதிமுகவினர் போராட்டத்தைத் தொடர்ந்து அண்ணாநகரில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

இதுகுறித்து விவி.ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கலாநிதி மாறன் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்தில் அதிமுக அரசையும், ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெயலலிதாவை நேசிக்கும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏழை மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச திட்டப் பொருட்களை தூக்கி எறிந்து வன்முறையைத் தூண்டியுள்ளனர். வியாபார நோக்கில் ஆளும் கட்சியையும், ஜெயலலிதாவையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படத்தின் காட்சிகளை மாற்றியமைக்கும் வரை தியேட்டர் உரிமையாளர்கள் இந்தப் படத்தை திரையிடக்கூடாது. மீறி இந்தப் படத்தை வெளியிட்டால் மதுரையில் எந்த தியேட்டரிலும் ஓட விடமாட்டோம். அதுவரை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன் போராட்டம் தொடரும். அதனால், மதுரை தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், 'சர்கார்' படத்தில் வரும் இந்தக் காட்சிகளை நீக்க முன் வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அதிமுகவினர் போராட்டத்தால் சினிப்பரியா தியேட்டரில் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் மதியம் 2 மணி படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கான அறிவிப்பும் தியேட்டர் முன் ஒட்டப்பட்டது. இதையடுத்து, அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தியேட்டருக்கு 'சர்கார்' படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். மதுரை மாவட்ட 'சர்கார்' படத்தின் விநியோகிஸ்தர் அதிமுகவினர் போராட்டம் நடத்திய தியேட்டரின் உரிமையாளர் என்பதால் அந்த தியேட்டரை தேர்ந்தெடுத்து அவர்கள் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவினர் போராட்டத்தால் தென் மாவட்ட விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், அவசர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவினர் போராட்டம் தொடர்ந்தால் ‘சர்கார்’ வசூல் பாதிக்கும் என்பதால் பெரும் தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் பதட்டமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்