28 ஆண்டுகள் சிறைவாசம்: மீண்டும் மனைவியுடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கிய சுப்பிரமணியன்

By ப.கோலப்பன்

தமிழகத்தில் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த நபர், 28 ஆண்டுகள் கழித்து விடுதலையாகி தன் மனைவியுடன் மீண்டும் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

தமிழகத்திலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த, அதாவது, தன் வாழ்வின் 28 ஆண்டுகளை சிறையில் கழித்த சுப்பிரமணியன் (63) என்பவர், வேலூர் மத்திய சிறையில் இருந்து கடந்த சனிக்கிழமை விடுதலையானார். அவரது மனைவி விஜயா (60), சிறையிலிருந்து வெளியே வந்த தன் கணவரை வரவேற்றார்.

விஜயாவும் சிறையில் இருந்தவர் தான். அவர் 2013 ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையான போது, அவரே தமிழகத்தில் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்தவராக கருதப்பட்டார். அதிக காலம் சிறையில் இருந்த கணவன் - மனைவி ஒன்றாக இணைந்தது சுவாரஸ்யமான நிகழ்வாக கருதப்படுகிறது.

கோவை மாவட்டம் சூலூரில் ஒருவரை கொலை செய்த வழக்கில் தம்பதியர் இருவருக்கும் 1990 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு இருவரும் தங்கள் உறவினர்களால் கைவிடப்பட்டனர்.

தன் கணவர் சிறையில் இருந்து விடுதலையான போது விஜயா வார்த்தைகளற்று, கண்ணீர் மல்க கணவரை வரவேற்றார். அதன் பிறகு, சுப்பிரமணியன் விஜயாவை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊரான திருப்பூருக்கு சென்றார்.

அதிக காலங்கள் இருவரும் சிறையில் இருந்திருந்தாலும், இருவரும் அஞ்சத்தக்க வலுவான குற்றவாளிகள் அல்ல. சொல்லப்போனால், விஜயா அக்ரோபாட்டிக் மற்றும் நடன கலைஞர். விஜயா மீது சுப்பிரமணியன் காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த போது, சுப்பிரமணியன் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து தெருக்கூத்து கலைஞர்களாக வாழ்ந்தனர்.

சில ஆண்டுகள் கழித்துதான் அந்த துயர சம்பவம் நடந்தது. சூலூரில் இருவரும் நடைபாதையில் உறங்கியுள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் விஜயாவிடம் தவறாக நடந்துள்ளார். அந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. அப்போது, விஜயா தன்னை பாதுகாத்துக் கொள்ள தம்பதியர் இருவரும் அந்த இளைஞரை தாக்கியுள்ளனர்.

அதில், அந்த இளைஞர் உயிரிழந்தார். “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி என்னுடைய கவனத்தை ஈர்த்தார். அவரும் அதிக ஆண்டுகள் சிறையில் உள்ளவர். விஜயாவும் நளினியும் வேலூர் சிறையில் ஒன்றாக இருந்தவர்கள். அதனால், விஜயாவை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தேன்” என சிறைவாசிகள் உரிமைகள் அமைப்பின் இயக்குநரான வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

சட்டப்பேரவையிலும் குரல் எழுப்பப்பட்டது

இந்த விவகாரம் 2013 ஆம் ஆண்டு தேமுதிக எம்எல்ஏ ஆர்.எம்.பாபு முருகவேலால் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. இந்த வழக்கு குறித்து முருகவேல் விளக்கினார். ‘‘அப்போது சட்டத் துறைக்கான மானிய கோரிக்கையின் போது இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் எழுப்பினேன். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நான் பேசியதை கவனித்தார். இரண்டு மாதங்கள் கழித்து, சட்டத்துறை அதிகாரிகள் விஜயா விடுதலை செய்யப்படுவது குறித்து எனக்கு விளக்கினர்” என நினைவு கூறும் முருகவேல், தற்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.

அதன்பிறகு, விஜயாவின் விடுதலை செய்யப்படுவதற்கான நகலை 2013 -ம் ஆண்டு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சிறைத்துறை சமர்ப்பித்தது.

சுப்பிரமணி விடுதலை செய்யப்படுவதற்கான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவும் 2015-லேயே கிடைத்து விட்டது எனக்கூறும் வழக்கறிஞர் புகழேந்தி, போதிய சமூக ஆதரவின்மையால் அவரது விடுதலை தள்ளிப்போனதாக கூறுகிறார். “விஜயா தற்போது தன்னார்வ தொண்டு இல்லத்தில் தங்கியுள்ளார். ஆனால், அவரது கணவரை எந்த இல்லமும் ஏற்க ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது, அவர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்”என புகழேந்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்