தினகரன் அணிக்கு மேல்முறையீடு உதவுமா? எடியூரப்பா வழக்கு உதாரணமாகுமா?- ஒரு பார்வை

By மு.அப்துல் முத்தலீஃப்

எடியூரப்பா வழக்கை உதாரணமாக வைத்து டிடிவி தினகரன் அணியினர் மேல்முறையீட்டிற்குச் சென்றால் அது அவர்களுக்கு வெற்றியைத் தருமா? மேல்முறையீட்டினால் ஆளுங்கட்சிக்குப் பயன் கிடைக்கும் என்பது உண்மையா? என்பது குறித்த ஒரு அலசல்.

தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பு பழைய வழக்குகளை வைத்து வாதங்கள் வைக்கப்பட்டன. டிடிவி ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் கர்நாடகத்தில் நடந்த எடியூரப்பா வழக்கின் தீர்ப்பை உதாரணம் காட்டியே வாதங்கள் வைக்கப்பட்டன.

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் போலவே முதல்வர் குறித்து அதிருப்தியை கர்நாடக ஆளுநரிடம் தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை தீர்மானம் வருவதற்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றனர். உயர் நீதிமன்றம் சட்டப்பேரவை தலைவரின் தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பளித்தது.

ஆனால் மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஏனென்றால் “கட்சித்தாவல் தடை விதிகளின்படி சட்டப்பேரவை தலைவர் போதுமான கால அவகாசம் (நோட்டீஸ்) தரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வரின் வெற்றி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்கிறோம்'' என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என டிடிவி தினகரன் தரப்பு நம்பியது.

ஆனால் எதிர் தரப்பில் உத்தரகாண்ட் மாநில விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதாரணம் காட்டினர். கர்நாடக மாநில விவகாரம் 2011 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு உத்தரகாண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் சபாநாயகர் தீர்ப்பு சரி என உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்ற வாதம் வைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இதே போன்றதொரு நிகழ்வு நடந்த பொழுது சபாநாயகர் 9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத்தை மாற்ற வேண்டும் என்று ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர்.அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் 9 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர். தாங்கள் காங்கிரஸ் கட்சியிலேயே தொடருவதாகவும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற தங்களது கோரிக்கை ஜனநாயக மரபுதான் என்றும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு ஆதரவாக சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரத்தில் முதல்வர் மீது ஆளுநரிடம் முறையிடச் சென்ற பாஜக எம்எல்ஏக்களுடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் சென்றது கட்சித் தாவல்தான் என காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி யூ.சி.தியானி தீர்ப்பளித்தார். தகுதி நீக்கத்தை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவை ஏற்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். ஆனால் இதில் சிறிய வித்தியாசம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக எம்.எல்.ஏக்களுடன் சென்று மனு அளித்தனர்.

ஆனால் தினகரன் தரப்பில் அவர்கள் தனி அணியாகச்  சென்று மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே உத்தரகாண்ட் மாநிலப் பிரச்சினையும் அதையொட்டி வந்த தீர்ப்பையும் இதில் பொருத்திப் பார்க்க முடியாது என்றும் சிலர் வாதம் வைத்தனர்.

ஆனால் இன்றைய தீர்ப்பு அதிலும் இல்லாமல் இதிலும் இல்லாமல் வந்துள்ளது. எடியூரப்பா வழக்கில் போதிய அவகாசம் சட்டப்பேரவைத் தலைவர் அளிக்காததால் வழக்கு தகுதி நீக்க எம்.எல்.ஏக்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால் இன்றைய தீர்ப்பில் நீதிபதி குறிப்பிடும் முதல் வாசகமே எடியூரப்பா வழக்குடன் இந்த வழக்கை ஒப்பிட முடியாது. ஆவணங்களை ஆராய்ந்தபோது இந்த வழக்கு முற்றிலும் வேறுபட்டுள்ளது 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை. அரசியல் சாசன கடமை மீறியதாகவோ, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாகவோ, இயற்கை நீதியை மீறியதாகவோ கூற முடியாது.

இதனால் இந்த வழக்கில் மேல்முறையீடு செல்லும் பட்சத்தில் அதில் எடியூரப்பா வழக்கை உதாரணமாகக் காட்ட இயலுமா என்கிற கேள்வி எழுகிறது.சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த அரசியல் சாசன அமர்வு வழக்கு விசாரணையில் உள்ளதால் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டை எப்படி பார்க்கும் என்கிற கருத்தும் வைக்கப்படுகிறது.

மூன்றாவதாக மேல் முறையீட்டிற்காக தினகரன் அணியினர் செல்லும் பட்சத்தில் அது ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே அமையும். 18 தொகுதிகளுக்கான தேர்தல் இதனால் தள்ளிப்போகும். ஆகவே டிடிவி அணியினர் மேல்முறையீட்டிற்குச் செல்வார்களா? தேர்தலைச் சந்திப்பார்களா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்