குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

‘குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதை எதிர்த்து அனுப்பப்படும் மனுக்களை விரைவில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். அந்த மனுக்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை மீறுவதாகும்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (29). இவர் மீது பட்டீஸ்வரம், நாச்சியார் கோயில் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் காரணமாக மாரியப்பன் கடந்த ஏப்.1-ல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மாரியப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அவரை விடுதலை செய்யக்கோரி மாரியப்பனின் மனைவி தவமணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

‘குண்டர் சட்டத்தில் மாரியப்பன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசுக்கு 2014 மே 2-ல் மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனு மே 8-ம் தேதி அரசிடம் கிடைத்துள்ளது. அந்த மனுவுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மே 9-ல் விளக்கம் கேட்கப்பட்டது. ஆட்சியரிடம் மே 19-ல் விளக்கம் பெறப்பட்டது. விளக்கம் கேட்கப்பட்டதில் இருந்து விளக்கம் பெறப்பட்டது வரை, அதாவது மே 9 முதல் 19 வரையிலான 9 நாட்களில் 5 முழு வேலை நாள் இருந்துள்ளது. இந்த நாட்களில் மனு மீது முடிவெடுக்காமல் இருந்துள்ளனர். இந்த தாமதத்துக்கு அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் மனுக்கள் மீது உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும், பல்வேறு உயர் நீதிமன்றங்களும் உத்தரவிட்டுள்ளன. குண்டர் சட்ட உத்தரவுகளை எதிர்த்து அளிக்கப்படும் மனுக்களை அதிகாரிகள் உடனடியாக பரிசீலித்து முடிவு தெரிவிக்க வேண்டும். அந்த மனுக்களை உரிய காலத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 (5)-ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

இந்த வழக்கில் மனுதாரரின் கணவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அனுப்பப்பட்ட மனு உரிய காலத்தில் பரிசீலிக்கப்படவில்லை. இந்த தாமதம் காரணமாக மனுதாரரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE