வம்பிழுக்கும் திமுக ரியாக்ட் செய்த ரஜினி: பனிப்போர் ஆரம்பம்?

By மு.அப்துல் முத்தலீஃப்

‘மற்றவர்கள்போல் அரசியல் செய்ய நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?’ என ரஜினி மொத்தமாக அனைவரையும் வம்பிழுக்க பதிலுக்கு ரஜினியை திமுக வம்பிழுத்துள்ளது. இதற்கு அறிக்கை மூலம் ரஜினி பதிலளித்துள்ளார்.

தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினி தனது ரசிகர் சந்திப்புக்கு பின் தனது மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். எதற்கும் கருத்து சொல்ல மாட்டோம், நேரடியாக சட்டமன்ற தேர்தலில் போட்டி, அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன் என்றெல்லாம் பேசிய ரஜினிகாந்த் பற்றி அவ்வப்போது விமர்சனம் எழுந்தது.

தூத்துக்குடி சம்பவத்தில் ரஜினியின் பதிலும், அதையொட்டி செய்தியாளர்களிடம் கோபத்தை காட்டியதும் ரஜினியின் இன்னொரு முகத்தை காட்டியது. தனது மக்கள் மன்ற நிர்வாகியாக ரஜினி ரசிகர்களுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத லைகா நிறுவன அதிகாரி ராஜு மகாலிங்கத்தை நியமித்ததும் பின்னர் அவரை மாற்றிவிட்டு புதுக்கோட்டை இளவரசனை கொண்டுவந்ததும் தனிக்கதை. சத்திய நாராயணாவை மீண்டும் அழைத்து வந்தும் அவரை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பதும் புரியாத புதிர்.

தனது படம் வெளியாகும் நேரத்தில் எல்லாம் ரஜினி அரசியல் பேசுவார் என்கிற விமர்சனம் உண்டு. மக்கள் மன்றத்தில் அவ்வப்போது வரும் பிரச்சினைகளை ஒட்டி சமீபத்தில் ரஜினி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் ரசிகர்களை தான் பணம் செலவழிக்க சொல்லவில்லை, மற்றவர்கள்போல் அரசியல் செய்ய நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது மற்ற அரசியல்வாதிகளை குறிப்பாக திமுகவை உசுப்பேற்றியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு பதிலடியாக இன்று திமுகவின் அதிகாரபூர்வ நாளேட்டில் ரஜினியின் அறிக்கையை போட்டு அதற்கு அப்பாவி ரசிகன் மனம் வெதும்பி கேள்வி கேட்பதுபோல் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியை நேரடியாக அவரது கலை, அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு பதிவு வந்துள்ளது. சிலந்தி எனும் பகுதியில், ‘ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப் மே.... மே.... மே....’ எனும் தலைப்பில் ரஜினியின் சமீபத்திய அறிக்கையை வைத்து அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அதில் ரஜினியும் அப்பாவி ரசிகனும் உரையாடுவதுபோன்று கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. வெறும் ரசிகர்மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் அப்பாவி ரசிகன் “என்ன தலைவா? கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய்? உனக்கு கொடி பிடித்து கோஷம் போட்டு அப்பா அம்மா பெயரைக் கூட எடுத்துவிட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து, உன் படம் ரிலீசாகும் நாளே எங்களுக்குத் திருநாள் என்று வாணவேடிக்கை எல்லாம் நடத்திக் கொண்டாடிய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா?” என்று கேட்கிறார்.

‘தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வரவேண்டாம், மன்றத்துக்காக யாரையும் செலவு செய்யவேண்டும் என்று நான் சொன்னது கிடையாது’ என்று ரஜினி அறிக்கையில் கூறியிருக்கும் வாசகத்தை போட்டு அதற்கு அப்பாவி ரசிகன், ‘காலைத்தான் வாரி விட்டாய் என்று நினைத்தால், இப்போது குழியும் பறிக்கிறாயே தலைவா. செலவு செய் என நீ சொன்னது கிடையாது. ஆனால் இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள் செலவு செய்து உன் புகழ்பாடி போஸ்டர் அடித்து ஒட்டியதை எல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டுதானே தலைவா இருந்தாய். உன் ஆனந்தமே எங்கள் ஆனந்தம் என்று எங்கள் வயிறைக் கட்டி வாயைக்கட்டி உனக்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை நீ அறியமாட்டாயா? அப்போதெல்லாம் வாய் மூடிக்கொண்டிருந்துவிட்டு இப்போது புத்திமதி சொல்லப் புறப்பட்டிருக்கிறாயே. இதுதான் நேர்மையா?’ என்று கேட்கிறான்.

‘30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிடமுடியாது’ என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி. இதற்கு, ‘தலைவா. உன் மனசாட்சி இதை எப்படி ஏற்கிறது? 30,40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும்போது, இத்தனை ஆண்டு காலம் உன்னை, உயர்த்திப் பிடித்த எங்களுக்கு அரசியலில் ஈடுபடத் தகுதி இல்லை என்பது எத்தகைய நியாயம் தலைவா?’ என்று எழுதப்பட்டுள்ளது.

‘முதலில் நீங்கள் உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம்’ என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியிருந்தார். இதற்கு ரசிகன், ‘ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லையா எனக் கூறியதுதான் எங்களுக்கு இதனை நினைவூட்டுகிறது. உங்கள் குடும்பத்தை மனைவி மக்களைப் பார்த்துக்கொண்டு நீங்கள் இருக்கவேண்டியதுதானே. பின் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என மற்றவர்கள் எங்களைப் பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்வது தலைவா? வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’னு சொல்லி வர்றதுக்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சிட்டியே தலைவா. இது சரிதானா?’ என்று கேட்கிறான்.

‘கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும்’ என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்கமாட்டேன், அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.’ என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.

‘பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையிலே உறுதியாக நின்று போராடவேண்டியதுதானே. உங்களுக்கு மட்டும் முதல் அமைச்சர் பதவி வேண்டும், நாங்கள் எல்லாம் அதற்கு நாயாய் பேயாய் உழைக்கவேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் பதவி ஆசைபடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா?’ என்று கேட்கப்பட்டுள்ளது.

‘உன்னை நினைத்து செயல்பட்ட எங்களை தூக்கி எறிந்துவிட்டாய். உன்னை நம்பி நாங்கள் ஆடிக்கொண்டிருந்தோம். ஆனால் நீயோ யாருடையோ கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகிவிட்டாய் ஹூ ஈஸ் பிளாக் ஷீப் மே... மே... மே...’ என்று முடிந்துள்ளது.

இன்று ரஜினி மீண்டும் ஒரு அறிக்கையை விட்டுள்ளார். அதில் “என்னை வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மக்கள் மன்றச் செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளைச் சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினியிடம் ரசிகர்கள் நியாயம் கேட்பதுபோன்ற ஒரு கட்டுரையை திமுக தனது அதிகாரபூர்வ நாளேட்டில் வெளியிட ரசிகர்கள் அது கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டார்கள் என ஒரு மெசேஜுடன் இன்று ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையும், திமுகவுக்கும் ரஜினிக்கும் லேசான பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதை காட்டுகிறது என அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்