பரிதி இளம்வழுதியும் சட்டப்பேரவையும்: கருப்பு பேன்ட் சுவாரஸ்யம்

By மு.அப்துல் முத்தலீஃப்

மறைந்த பரிதி இளம்வழுதி தன்னந்தனியராக சட்டப்பேரவையில் கலக்கியதும், அவரைச் சமாளிக்க முடியாமல் ஆளுங்கட்சியினர் கொந்தளித்ததும் சுவாரஸ்யமான விஷயங்கள்.

மறைந்த பரிதி இளம்வழுதி பிரபல திமுக பேச்சாளர் இளம்பரிதியின் மகன் ஆவார். மாவட்டச்செயலாளராகவும் இருந்தவர் இளம்பரிதி. எம்.எல்சியாகப் பதவி வகித்தவர். மைக்கே இல்லாமல் பல மணி நேரம் பேசக்கூடியவர் இளம்பரிதி. அவரது பேச்சைக் கேட்க திமுக தொண்டர்கள் ஆர்வமுடன் கூடுவார்கள். சாதாரணமாக எழும்பூரில் சிறிய வீட்டில் வசித்தவர் இளம்பரிதி. அவரது மகன் இளம்வழுதி தந்தையைப்போலவே திமுகவில் ஈர்க்கப்பட்டார்.

திமுகவில் இளம் பேச்சாளராக மேடையைக் கலக்கியவர் பரிதி இளம்வழுதி. கருணாநிதியின்மேல் கொண்ட பற்றால் பெரியப்பா என அவரை அழைப்பார். ஸ்டாலினுக்கு அன்பில் பொய்யாமொழி போல் சென்னையில் நெருக்கமான நண்பராக இருந்தவர் பரிதி இளம்வழுதி. 1980 களில் திமுகவில் துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் கொண்ட மூவர் அணி சட்டப்பேரவையில் கலக்கியது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவையில் மூவர் அணி கலக்க,  மேடையில் 20 வயது இளைஞர் பரிதி இளம்வழுதி கவனம் ஈர்த்தார். அப்போது முதல் அவரது நகைச்சுவைப் பேச்சால் அனைவரையும் கவர்ந்து வந்தார். 1984-ம் ஆண்டு இந்திரா கொல்லப்பட்ட பிறகு, எம்ஜிஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் முதன் முதலாக நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மிகப்பெரும் தலைவரான சத்தியவாணி முத்துவைத் தோற்கடித்தார்.

இளம்வயதில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பரிதிக்கு அப்போது வயது 25 மட்டுமே. பின்னர் 1989-ம் ஆண்டும் அதே பெரம்பூர் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1991-ம் ஆண்டு ராஜீவ் மரணம் காரணமாக நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது திமுக மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. கருணாநிதி மட்டுமே வெற்றிபெற்ற தேர்தலில் எழும்பூரில் வேட்பாளர் மரணமடைந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர் நடந்த இடைத்தேர்தலில் பரிதி இளம்வழுதி திமுக சார்பில் வெற்றி பெற்றார். திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்கு வராத நிலையில் ஒத்தை ஆளாக சட்டப்பேரவையை பரிதி இளம்வழுதி கலக்கினார். சட்டப்பேரவை தலைவர் காளிமுத்து ஜெயலலிதா குறித்து முன்பு கூறியவைகளை ஜெயலலிதா முன் சட்டப்பேரவையில்  கூறி அவரை நெளிய வைத்தார்.

சட்டப்பேரவையில் மிகப்பெரும் செல்வாக்குடன் இருந்த அதிமுக உறுப்பினர்களிடையே அமர்ந்துகொண்டு கேள்வி கேட்கும் தைரியம் மிகத் துணிச்சலாக பார்க்கப்பட்ட ஒன்று. அந்த நேரத்தில் சில நேரம் அவர் தாக்கப்படும் சூழ்நிலையும் உருவானது. கருணாநிதியைப் பற்றியும், திமுக ஆட்சியைப் பற்றியும் பேசும்போதெல்லாம் ஒற்றை ஆளாக எழுந்து பதிலளித்து ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாவார்.

பல நேரம் அவர் சபைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார். அந்த நேரங்களில் அவரது வேட்டி உருவப்படும். பின்னர் அவர் கருப்பு பேன்ட் அணியத் தொடங்கினார். அப்போது மேடைகளில் இதை நகைச்சுவையாக குறிப்பிடுவார். சாதாரணமாக கருத்தைச் சொல்ல எழுந்து க என்று ஆரம்பித்தாலே உடனே கூச்சலிடுவார்கள் என்னை வெளியேற்றுவார்கள்.

வேட்டி உருவப்படுவதை தவிர்க்க கருப்பு பேன்ட் அணிந்து சட்டப்பேரவைக்குச் செல்ல ஆரம்பித்தேன். பின்னர் அதுவே வழக்கமாகிவிட்டது என்று தெரிவித்தார். இதே காலகட்டத்தில் பரிதி மீது வழக்கு புனையப்பட்டு அவரைக் கைது செய்தனர் போலீஸார். திமுக வழக்கறிஞர் குழு கடுமையான வாதங்களை வைத்து அவரை மீட்டது. நேராக அறிவாலயம் வந்தவர் திமுக தலைவரின் காலடியில் அமர்ந்துகொண்டார். அவரது தலையை கருணாநிதி ஆதரவாக தடவினார். அந்தக் காட்சிகள் அப்போது பத்திரிகைகளில் பிரபலமாக வந்தது.

1984, 1989, 1991,1996, 2001, 2006-ம் ஆண்டுகளில் திமுகவில் எம்எல்ஏவாக இருந்தார். 2011-ம் ஆண்டு அதிமுக, தேமுதிக கூட்டணி வேட்பாளர் நல்லதம்பியிடம் தோல்வி அடைந்தார், 2016-ல் அதிமுக சார்பில் அதே எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனிடம் தோல்வியடைந்தார். வெற்றிபெற்று வாருங்கள் அமைச்சராக்குகிறேன் என்று அப்போது ஜெயலலிதா கூறியிருந்த நிலையில் தோல்வி அடைந்தார்.

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி வாக்குப்பதிவு நேரத்தில் புரசைவாக்கத்தில் வன்முறை கும்பலால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் முயற்சியில் அருகிலிருந்த நாஞ்சில் மனோகரன் வீட்டுச் சுவரேறி குதித்துத் தப்பினார்.

துணைப்பொதுச்செயலாளர், துணை சபாநாயகர், செய்தித்துறை அமைச்சர், 6 முறை எம்.எல்.ஏ என திமுகவில் செல்வாக்காக இருந்த பரிதி இளம்வழுதி கருணாநிதியால் இந்திரஜித், வீர அபிமன்யூ என அழைக்கப்பட்டார். தனதுமகனுக்கு இந்திரஜித் என்று பெயரும் பரிதி வைத்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால் 2013-ல் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். கடந்த 2016 பொதுத்தேர்தலில் எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனிடம் தோற்றார்.

அதன்பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் அணி பின்னர் டிடிவி தினகரன் அணிக்குத் தாவினார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். பரிதி இளம்வழுதி தான் இருக்கும் வரை செல்வாக்கான மனிதராக, இளைஞர் அணியைக் கட்டமைப்பதில் ஸ்டாலினுக்கு உறுதுணையாகவும், நெருங்கிய நண்பராகவும் திமுகவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்