பிக்பாஸ்-2 சொல்லும் சைக்காலஜி; நிதானம் வெற்றியைத் தந்தது: நிருபித்த ரித்விகா

By மு.அப்துல் முத்தலீஃப்

பிக்பாஸ்-2 சீசனில் வென்றுள்ள ரித்விகா தனது நிதானம் மற்றும் பதற்றப்படாத தெளிவான நடத்தை மூலம் வெற்றியை பெற்றுள்ளார். பிக்பாஸ்-2 வியாபார நிகழ்ச்சியாக இருந்தாலும் அது உணர்த்தும் உளவியல் உண்மையை யாரும் மறுக்க முடியாது.

சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்கள், கலராக இருப்பவர்கள், பர்சனாலிட்டியாக இருப்பவர்கள், பிரபலமானவர்களை உடனடியாக நாம் நம்பிவிடுவோம். அது மனித மனதின் இயல்பு. அதைத்தான் வெள்ளையா இருக்கிறவன் பொய்ச்சொல்லமாட்டான் என வடிவேலு படத்தில் காமெடி காட்சியாக வைத்திருப்பார்கள்.

முதல்பார்வையில் எடைபோடாமல் ஒருவரை நம்புவதும் ஒருவரை ஒதுக்குவதும் தவறு, நடத்தைதான் அழகு என்ற உளவியல் கூற்றை பிக்பாஸ்.2 இரண்டு சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளது. ஒன்று ரித்விகா, இரண்டு சென்றாயன், மூன்று பொன்னம்பலம் மற்றும் மும்தாஜையும் குறிப்பிடலாம்.

ரித்விகா, சென்றாயன் விவகாரமும், மகத், யாஷிகா, ஐஸ்வர்யா விவகாரமும் பல பாடங்களை நமக்கு போதிக்கின்றன. பிக்பாஸை சிறந்த பாடம் கற்றுக்கொடுக்கும் தளமாக மாற்றியவர் கமல் என்றால் அது மிகையல்ல. காரணம் அவர் ஒவ்வொரு நிகழ்விலும் அதை பல நிகழ்வுகளுடன் இணைத்தே பார்த்தார்.

பல இடங்களில் பிக்பாஸுக்காக விட்டுகொடுத்ததும், சினிமா நடிகர்களுக்குரிய போலித்தனங்களை தெரிந்தே அனுமதித்தாலும், தனது விமர்சனத்தை அவர் வைக்காமல் இல்லை. சென்றாயன் என்ற கேரக்ட்ரை முதலில் பார்ப்போம். சாதாரண துணை நடிகர் அந்தஸ்துகூட இல்லாதவர், கிராமத்து அடிப்படை குணம், ஆங்கிலம் தெரியவில்லை, வெள்ளந்தியான அவரது நிலைப்பாடு மேல்தட்டு போலித்தனத்தில் ஊறிய மற்ற போட்டியாளர்களுக்கு பூச்சி, எறும்புபோல் அவர் காட்சி அளித்தார்.

மூன்று வகையான கலவைகளை பிக்பாஸில் பார்த்தோம். சினிமா சார்ந்தோ, சினிமாத்துறையிலோ இருக்கும் மேட்டுக்குடி மனோபாவம், அந்த நடைமுறையில் பழகிய மனிதர்கள். இரண்டு அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல் இடையில் ஊசலாடும் மனிதர்கள் உதாரணமாக டானியல், பாலாஜி, ரித்விகா, நித்யா போன்றோர். சாதாரண நிலையை விட்டுக்கொடுக்காமல் அல்லது அப்படியே பழகிப்போன பொன்னம்பலம், சென்றாயன் போன்றோர்.

இதில் முதல் நிலையில் இருந்தவர்கள் ஓரளவு பொன்னம்பலத்தை ஏற்றுக்கொண்டாலும் சென்றாயனை ஒருவித அசூசையுடனே பார்த்தனர். அவரது வெள்ளந்தித்தனமான செயல்கள் முதிர்ச்சியற்ற நாகரிகமற்ற செயல்களாக பார்க்கப்பட்டது.

அவர் பாத்ரூம் கழுவ மட்டுமே அடிக்கடி குழுவில் போடப்பட்டார். அவரை முற்றிலும் ஒதுக்கியவர் மும்தாஜ். அவர் கையால் ஒரு பொருளை வாங்கக்கூட தயங்கினார். ஆனால் சென்றாயன் அவர் அவராக இருந்தார். இதேபோன்ற நிலை பொன்னம்பலத்துக்கும் ஏற்பட்டிருக்கும், ஆனால் அவர் பல படங்கள் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டதால் அவரிடம் ஒருவித மரியாதையுடன் ஆனால் அருகில் சேர்க்காமல் பார்த்துக்கொண்டனர்.

ஆரம்பத்தில் கூடி குலாவிய மேல்தட்டு நாகரிக போட்டியாளர்கள் அனைவரும் போகப்போக மழையில் நனையும் மேக்கப்போல் அவர்களது இயல்பு நிலையை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். மோசமான பழக்க வழக்கங்களால் யாஷிகா, ஐஸ்வர்யா, ஷாரிக், மகத் தங்களது மரியாதையை இழந்தனர்.

கமலே ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். “நீங்கள் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இல்லை, உங்கள் சொந்த விருப்பங்களில் நாட்டம் செலுத்துகிறீர்கள், இதை மக்கள் கவனிக்கிறார்கள்” என்று எச்சரித்தும் அவர்கள் மாறவில்லை. மறுபுறம் சாதாரண உப்புப் புளி பிரச்சினையில்கூட நித்யா, மமதி, பாலாஜி, மும்தாஜ், டானியல் உள்ளிட்டோரால் நாகரீகமாக நடக்க முடியவில்லை.

துணிச்சலாக கருத்தைச் சொல்லும் மனோபாவம் சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது, நேராக புகழ்வது, போலியாக கரிசனம் காட்டுவது, புறம் பேசுவது அந்த உலகத்தில் சாதாரணம். அது பிக்பாஸ் வீட்டில் வெளிப்பட்டது. இதை மக்கள் உன்னிப்பாக கவனித்தார்கள். கமல் அவ்வப்போது ஆலோசனை கூறியும் யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

விளைவு ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இதில் ரித்விகா ஆரம்பத்தில் சாதாரண துணை நடிகைத்தானே, சாதாரண தோற்றம் கொண்டவர், பெரிய பிரபலமும் இல்லை. மேல்தட்டு நடைமுறையும் இல்லை என ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒட்டாமல் இருந்தனர். சிலர் மட்டுமே பழகினர்.

‘ஜெல்லாக மாட்டேங்கிறார்’ என்று பழகாததற்கு போலி காரணத்தையும் கூறினர். ஆனால் நாளாக ஆக எண்ணிக்கை குறைய குறைய ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கும்போது போலித்தனங்கள் உடைய ஆரம்பித்தபோது இயல்பாக இருந்த ரித்விகாவும், சென்றாயனும் ஜொலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கான மக்கள் ஆதரவு கூட ஆரம்பித்தது.

மும்தாஜும் ஷாரிக், ஐஸ்வர்யா, யாஷிகா விவகாரத்தில் மூக்குடைப்பட்டு எல்லோருடனும் இயல்பாக பழக ஆரம்பித்தார். முதல் பார்வையில் ஒருவரை முடிவு செய்வது தவறு என்ற உளவியல் தகவல் பிக்பாஸ் வீட்டின் மூலம் 105 நாட்களில் போட்டியாளர்கள் உணர்ந்தார்களா? என்றால் அதை சொல்ல முடியாது.

காரணம் மீண்டும் அவர்கள் அதே போலி உலகத்தில் தங்கள் வாழ்நாளை கழிக்கப்போகிறார்கள். பிக்பாஸை பார்த்த மக்கள் அளித்த அங்கிக்காரம்தான் ரித்விகாவின் வெற்றி. இதை பார்வையாளர்கள் உணர்ந்ததால் அமைந்த வெற்றி. ரித்விகா, கடந்த போட்டியில் ஆரவ் போன்றவர்கள் அதிகமாக அலட்டிக் கொண்டவர்களும் இல்லை, உடைந்து போனவர்களும் இல்லை. தங்களுக்கான இடத்தை தங்களது நிதான நடைமூலம் அடைந்தனர்.

இதனால் மற்றவர்கள் தகுதியில்லாதவர்கள் என்று அர்த்தம் அல்ல. நடத்தைத்தான் ஒருவரை தீர்மானிக்க வைக்கிறது என்பதில் சில சந்தர்ப்பங்களில் தவற விடுபவர்கள் இலக்கை கடைசியில் அடைய முடியாமல் போனார்கள். யாஷிகா ஆரம்பத்தில் அவரது செயல்பாட்டால் பின்னர் சரியான நிலைக்கு மாறினாலும் மக்கள் பழையதை மறக்கவில்லை.

நேர்மையாக, வெளிப்படையாக நடப்பது போட்டியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றியைத் தேடித்தரும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆரம்பத்தில் அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் அதுதான் இறுதியில் வெல்லும். இது பல பெரிய மனிதர்களின் வெற்றிக்குப்பின்னால் உணர்த்தப்பட்டுள்ளது. அது பிக்பாஸிலும் வெளிப்பட்டுள்ளது.

சரி இவ்வளவு இருந்தும் ஆர்ப்பாட்டம் செய்து சராசரி போட்டியாளர் மன நிலையில்கூட இல்லாமல் இருந்த ஐஸ்வர்யா எப்படி இறுதிக்கு வந்தார் என்ற கேள்வி எழலாம். அது பிக்பாஸுக்கு மட்டுமே தெரியும். கமலையும் மீறி காப்பாற்றியவர் அவர் அல்லவா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்