நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டில் இல்லாத வகையில் 2017-ம் ஆண்டில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 329 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 200 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என 52 பேர் உயிரிழந்தனர். தமிழகம் மெல்ல மெல்ல டெங்குவிலிருந்து மீண்டு வந்த நிலையில் மீண்டும் டெங்கு பிரச்சினை தீவிரம் அடைந்திருக்கிறது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதவரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமாரின் குழந்தைகள் தக்சன், தீக்சா ஆகிய இரட்டைக் குழந்தைகள் உயரிழந்த நிலையில், தமிழகத்தில் 5 பேர் இதுவரை டெங்குவுக்குப் பலியாகியுள்ளதாகவும் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட வர்கள் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கையின் அடிப்படையில் இது சாதாரணமானது என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஏனெனில், டெங்கு என்பது மெதுவாக பரவக்கூடிய நோய் அல்ல. திடீரென நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஒரே நேரத்தில் பரவக்கூடியது. அதனால் ஆரம்பத்திலேயே டெங்குவை ஒழிப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியம்.
முன்பெல்லாம் சீஸன் காலங்களில் அதாவது பருவமழைக் காலங்களில் சுமார் 2 அல்லது 3 மாதங்கள் மட்டுமே டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஆனால், தற்போது ஆண்டு முழுவதும் டெங்கு பாதிப்புகள் காணப்படுவதற்கான அறிகுறிகள் தமிழகத்தில் உள்ளன என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் டெங்குவைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கையாள்வதே நம் முன் இருக்கும் சவால்.
20 வழிமுறைகள்
* கொசுக்களை ஒழிப்பதே டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் ஒரே வழி. டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.
* வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச் சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, கொசு ஸ்பிரே போன்றவையும் பலன் கொடுக்கும்.
* கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்.
* வீட்டில் தினமும் வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றினால், அதன் வாசனைக்கு கொசு வீட்டுக்குள் வராது. மேலும், வேப்ப எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் தடவிக் கொண்டால் கொசு கடிக்காது. நாட்டு மருந்து கடைகளில் வேப்ப எண்ணெய் கிடைக்கும்.
4jpg100
* வீட்டைச் சுற்றியுள்ள சாக்கடையை மட்டுமல்ல, கொசுக்கள் வாழும் இடங்களான மேல்நிலைத் தொட்டிகளையும், கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடி வைக்க வேண்டும். தண்ணீரைத் திறந்த பாத்திரங்களில் ஊற்றிவைக்காமல், மூடி உள்ள பாத்திரங்களில் ஊற்றிவைப்பது பாதுகாப்பானது.
* குப்பைத்தொட்டிகள், தேங்காய் மூடிகள் ஆகியவற்றில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* சிமெண்ட் தொட்டிகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர், ஏர்கண்டிசனர் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையும் இவ்வாறே சுத்தப்படுத்த வேண்டும்.
* குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்புகளைச் சீரமைக்க வேண்டும்.
* திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய்கள் இருந்தால் சுகாதாரத் துறையினரை அணுகி, குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பயனற்ற பிளாஸ்டிக் பொருட்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் இருந்தால் அவற்றில் தேங்கும் தண்ணீர் மூலம், நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு அபாயம் இருப்பதால் அவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
* கட்டிடப் பணிகளுக்காக நீண்ட நாட்களாக தொட்டிகளில் நீர் தேக்கி வைத்திருப்பதால் அதன்மூலம் நோய்கள் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் இருப் பதால் தேவையான அளவுக்கு மட்டும் தண்ணீர் தேக்கி பயன் படுத்திவிட்டு, அப்பகுதிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* மருத்துவமனைகள், நிறுவனங்கள், புதிய கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள், வணிக கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் செயல்படும் நிறுவனங்கள், தனி நபர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அபராதம் விதிக்க வேண்டும்.
* மழைநீர் தேங்கும் வகையில் நிறுத்தப்பட்டிருக்கும் பயனில்லாத பழைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட பல அரசுத் துறைகளிலும் பழுதடைந்த நிலையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அப்புறப்படுத்த வேண்டும்.
* உள்ளாட்சி அமைப்புகளால் அடிக்கப்படும் கொசு மருந்து புகையை விட தீபாவளி பண்டிகைக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் புகை அளவு பன்மடங்கு அதிகம் என்பதால் இது தீவிர கொசு விரட்டியாக அமைந்து விடுகிறது. இதையும் குறிப்பிட்ட அளவில் மட்டும் பயன்படுத்தலாம்.
* காய்ச்சல் வந்தால் அது டெங்குவாக இருக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தாமாக ஒரு முடிவுக்கு வரக்கூடாது. சாதாரணக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
* காய்ச்சல் வந்த பிறகு, மருத்துவர்களிடம் ஆலோசனை பெறாமல் மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கிச் சாப்பிடும் பழக்கத்தை வளர்க்க வேண்டாம். கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பார்த்துவிட்டு காய்ச்சல் குறையவில்லை என்று கடைசியில் மருத்துவரைச் சந்திப்பதும் சரியான போக்கு அல்ல.
* காய்ச்சல் வந்தவுடன் ஒவ்வொரு வீட்டிலும் சுடுகஞ்சியைத்தான் கொடுப்பார்கள். காரணம் உடம்பிலுள்ள நீர்ச்சத்தை ஈடுகட்டும் வல்லமை படைத்தது சுடுகஞ்சி. இதுபோன்ற பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே காய்ச்சலை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
* நீர்ச்சத்து பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக வீட்டிலேயே குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற தவறைச் செய்யவே கூடாது.
* காய்ச்சல் வந்து மூன்று நாட்களுக்கு பின்னரே அதன் அறிகுறி தெரியும். நில வேம்புக் கசாயம் குடிக்கலாம், பப்பாளிச் சாறு குடிக்கலாம். ஆனால் டெங்கு கட்டுப்படவில்லை, பிளட் லெட் குறைகிறது என்றால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகிவிட வேண்டும்.
* நிலவேம்பு ஜுர சூரணம் என்ற பொடியை தகுதியான மருத்துவர்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது அங்கீகரிக்கப்பட்ட பொடியா என்று கவனித்து அதைத்தான் வாங்கி பயன்படுத்தப் வேண்டும். சாதாரணமாக நில வேம்பு பொடியால் எந்த உபயோகமும் இல்லை.
குறிப்பு: டெங்கு குறித்து பல்வேறு நிபுணர்கள், மருத்துவர்கள், மருத்துவ எழுத்தாளர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago