குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி செப்.2-ல் பாமக ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி, பாமக சார்பில் செப். 2-ல் சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: " தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள், அண்டை மாநிலங்களில் மது விற்பனை செய்யப்படுவதைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுத்து வருகின்றன.

மதுவிலக்கில் தென் மாநிலங்களுக்கு வழி காட்டும் விதத்தில் புதிய மதுவிலக்குக் கொள்கையை கேரள அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி கேரளத்தில் மொத்தமுள்ள 730 மதுக் குடிப்பகங்களில் ஏற்கனவே மூடப்பட்டவை தவிர, மீதமுள்ள 312 குடிப்பகங்களையும் உடனடியாக மூட கேரள அரசு ஆணையிட்டிருக்கிறது.

கேரளத்தை பின்பற்றி தமிழ்நாட்டிலும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 21 ஆம் தேதியே தமிழக அரசை நான் வலியுறுத்தியிருந்தேன். மக்கள் நலன் விரும்பும் மற்றவர்களின் விருப்பமும் இதுவாகவே உள்ளது.

ஆனால்,‘‘நல்லதை பார்க்காதே; நல்லதை கேட்காதே; நல்லதை பேசாதே’’ என்ற கொள்கையை கடைபிடித்துவரும் தமிழக அரசுக்கு இதைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமில்லை. மாறாக மது விலையை உயர்த்தி அதிக லாபம் ஈட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

மதுக்கடைகளை அகற்றுவது குறித்த நீதிமன்ற ஆணைகளையும் தார்மீக அடிப்படையில் மதித்து நிறைவேற்ற தமிழக அரசு தயாராக இல்லை. ஓர் ஊரில் மதுக்கடை கூடாது என்று அந்த ஊரின் கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை மதித்து அந்த ஊரில் மதுக்கடையை திறக்கக் கூடாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி கடந்த ஆண்டு சுதந்திர தினத்திலும், மகாத்மா காந்தி பிறந்த நாளிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த தீர்மானங்களின் மீது இன்றுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல், குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடை நடத்துவது மக்களின் கண்ணியமாக வாழும் உரிமைக்கு எதிரான செயல் என்று கூறி, அத்தகைய மதுக்கடையை மூடும்படி அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. தமிழகத்தில் 60 விழுக்காட்டிற்கும் கூடுதலான மதுக்கடைகள் குடியிருப்புப் பகுதிகளில் தான் உள்ளன என்பதால், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழக அரசே தானாக முன்வந்து இக்கடைகளை அகற்றியிருக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசு அவ்வாறு செய்ய வில்லை. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை; கண்ணியமான, அமைதியான வாழ்க்கை வாழும் உரிமையை இழந்து தவிக்கின்றனர்.

எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதித்து, எந்தெந்த மதுக் கடைகளையெல்லாம் மூட வேண்டும் என கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ அந்தக் கடைகளையும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளையும் தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

எனது தலைமையில் நடைபெறவுள்ள இந்த அறப்போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பா.ம.க.வினர், மதுவிலக்கு ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE