தமிழகத்தில் சட்டவிரோதமாக நடத்தப்படும் மகளிர் விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சமூக நலத்துறையின் அலட்சியப் போக்கே இந்நிலைக்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கோவை பீளமேடு அருகே மகளிர் விடுதியில் பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நாட்டில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு இன்னமும் முழு உத்தரவாதம் இல்லை. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்ட தனியார் அனாதை இல்லத்தில் 2 மைனர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த விசாரணையின்போது அந்த இல்லம் அரசு அங்கீகாரம் இல்லாமல் இயங்கியது தெரியவந்தது. இதுபோல வெளியே தெரிந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் தவிர, வெளியே தெரியாத பல சம்பவங்களும் உண்டு. உரிமம் இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல், முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில்ஏராளமான மகளிர் விடுதிகள் செயல்படுவது அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, மகளிர் தங்கியிருக்கும் விடுதிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தை (2014) அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.
இந்த சட்டப்படி அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் தனியார் மகளிர் விடுதிகளோ அல்லது இல்லங்களோ நடத்தக்கூடாது. இச்சட்டம் அமலுக்கு வந்த இரண்டு மாதங்களில் உரிமம் வாங்காவிட்டால் சம்பந்தப்பட்ட மகளிர் விடுதியின் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.50 ஆயி
ரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் சுகாதாரச் சான்று பெற வேண்டும். சமையல் செய்யும் மகளிர் விடுதிகளாக இருந்தால், உணவு பாதுகாப்புத் துறையிடம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) சான்று பெற வேண்டும்.
பாதுகாப்புக்கு தேவையான தீ தடுப்பு சாதனங்களுடன் இருப்பதாக தீயணைப்புத் துறை சான்றளிக்க வேண்டும். வீடு அல்லது குடியிருப்புகளில் வணிக நோக்கத்துடன் மகளிர் விடுதிகள் செயல்படக்கூடாது. நபர் ஒருவருக்கு 120 சதுரஅடி வீதம் அறைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். மகளிர் விடுதி மற்றும் அங்கு தங்கியிருக்கும் பெண்கள் குறித்த அனைத்து தகவல்களும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது அவசியம். பெண்களையே வார்டன்களாக நியமிக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், ஓய்வுபெற்ற காவல்துறையினர் மட்டுமே பாதுகாவலராக நியமிக்கப்பட வேண்டும். மகளிர் விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் விழிப்புடன் இருத்தல் அவசியம். மகளிர் விடுதி நடத்துவதற்கு இதுபோல ஏராளமான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் ஆவணங்களில் மட்டுமே உள்ளன. விரல்விட்டு எண்ணும்மகளிர் விடுதிகளிலேயே இவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தமிழ்நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மற்றும் தனி நபர்களால்
ஆயிரக்கணக்கான மகளிர் விடுதிகள்நடத்தப்படுகின்றன. பெரும்பாலானவற்றில் அடிப்படை வசதிகள் இல்லை. கண்காணிப்பு கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கிடையாது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் வடபழனி, திருவான்மியூர், சூளைமேடு, மேத்தா நகர், விருகம்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் புற்றீசல் போல மகளிர் விடுதிகள் முளைத்துள்ளன. குடியிருப்புகள் வணிக நோக்கில் மகளிர் விடுதிகளாக மாறியிருக்கின்றன.
பாதுகாவலர் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவர் பணியில்ஈடுபாடு காட்டுவதில்லை. நுழைவுவாயில் எப்போதும் பாதி திறந்த நிலையிலே இருக்கும். பகல் மற்றும் இரவு நேரங்களில், ஏன் நள்ளிரவில்கூட யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று மகளிர் விடுதி நடத்துவோரும் பாதுகாவலரும் கண்டு கொள்வதில்லை என்று புகார் கூறப்படுகிறது.
பல்வேறு குற்ற சம்பவங்களுக்குப் பிறகு வீடுகளிலும் வணிக வளாகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்படி மாநகர காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. ஆனால், மகளிர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை உள்ளூர் போலீஸார் உறுதி செய்வதில்லை. இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
வீடு அல்லது குடியிருப்புகளில் குடும்பத்தினர் வசிப்பதாக ஆவணத்தில் இருக்கும். அதற்கான சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்தப்படும். ஆனால், குடியிருப்புகளில் வணிக நோக்கில் மகளிர் விடுதிகள் செயல்படுவதுடன், அதற்கான சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், மின்கட்டணம், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு வீட்டு உபயோகத்துக்கான கட்டணமே கட்டப்படுகிறது. வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கான கூடுதல் கட்டணம் செலுத்தப்படுவதில்லை. இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மகளிர் விடுதிகளில் பெயர்ப் பலகைகூட இருப்பதில்லை. அவ்வாறு இருந்தாலும் வெறுமனே விடுதியின் பெயர், தெரு பெயர், செல்போன் எண் மட்டுமே இருக்கும். மாவட்ட ஆட்சியர் வழங்கிய மகளிர் விடுதிக்கான உரிமம் எண் இடம்பெறுவதில்லை. விசாலமான அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம் இல்லை. ஆனால் கட்டணம் மட்டும் கூடுதலாக வசூலிக்கின்றனர் என்கின்றனர் விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் பலர். மகளிர் விடுதிகளைப் பற்றிய முழு விவரங்கள் சமூக நலத்துறையிடமோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ இல்லாததது வேதனையிலும் வேதனை.
குடியிருப்புப் பகுதிகளில் மகளிர்விடுதி நடத்துவதால் மக்கள் அடர்த்திஅதிகரித்து அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன. இப்படி பல வழிகளிலும் முறைகேடாக மகளிர் விடுதிகள் நடத்தப்படுவதால், மக்களுக்கு சிரமம் ஏற்படுவது குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. முழு பாதுகாப்பு இல்லாத நிலையில் மகளிர் விடுதிகளில் தங்கியிருக்கும் தங்கள் குழந்தைகளை நினைத்து பெற்றோரும் நிம்மதியில்லாமல் தவிக்கின்றனர்.
அண்மையில் கோவை பீளமேடு அருகே இயங்கி வந்த மகளிர் விடுதியில் பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக புகார்எழுந்தது. இதையடுத்து அதன் உரிமையாளர் நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே மர்மமான முறையில் இறந்தார். அதன் பெண் வார்டன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகே சமூக நலத்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆனால், தீவிரம் காட்டப்படவில்லை.
மகளிர் விடுதி நடத்துவோர் அதற்கான உரிமத்தை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற வேண்டும். இல்லாவிட்டால் விடுதி நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திரிகைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. சமூக நலத்துறை. பணியாளர்கள் பற்றாக்குறையால் அனைத்துப் பகுதிகளிலும் மகளிர் விடுதிகளை ஆய்வு செய்ய முடியவில்லை என்ற காரணமும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திருவான்மியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ராஜப்பா, ஓ.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:
சென்னையில் பெரும்பாலான மகளிர் விடுதிகள் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன. திருவான்மியூர் கெனால் சாலையில் உள்ள 10-க்கும்மேற்பட்ட மகளிர் விடுதிகள் சட்டவிரோதமாக நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விடுதிகளுக்கு வழங்கப்பட்ட தீ தடுப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் மகளிர் விடுதிகளில் திடீர் சோதனை நடத்த முடியாது. அதனால் சமூக விரோத செயல்கள் சர்வசாதாரணமாக அரங்கேறி வருகின்றன. உரிய விதிகளின்படி செயல்படாத மகளிர் விடுதிகள் பற்றி சமூக நலத்துறை அளிக்கும் அறிக்கை அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்தான் நடவடிக்கை எடுக்க முடியும். மகளிர் விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்த விடுதிகள் சட்டவிதிகளின்படிதான் செயல்படுகின்றன என்பதை அரசு உறுதி செய்ய வேண்டியது அவசர அவசியமாகும் என்றனர்.
இதுகுறித்து சமூக நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் அரசு 28 மகளிர் விடுதிகளை நடத்துகிறது. இதுதவிர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியாரால் மகளிர் விடுதிகள் நடத்தப்படுகின்றன. மகளிர் விடுதிகளில் பெண்களை தவறாகப் பயன்படுத்த முயற்சி நடப்பதாக புகார் வந்ததையடுத்து, மகளிர் விடுதி நடத்துபவர்கள் உடனே தங்கள் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். அதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. அதன்பிறகு சுமார் 250 மகளிர் விடுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் நிறைய மகளிர் விடுதிகள் இருக்கின்றன.
மாவட்ட ஆட்சியரிடம் உரிமம் பெறாமல் மகளிர் விடுதிகள் நடத்தினால் அபராதமும் தண்டனையும் உண்டு என்று எச்சரித்து வருகிறோம். உரிய விதிமுறைகளின்படி செயல்படாததால் கடந்த மூன்று மாதங்களில் சென்னையில் மட்டும் 25 மகளிர் விடுதிகளை மூடியுள்ளோம்.
அதுபோல மாவட்டங்களிலும் பதிவு
செய்யப்படாத மகளிர் விடுதி நிர்வாகங்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி,30 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பிறகும் பதிவு செய்யாவிட்டால் அதனை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட சமூக நல அலுவலர்கள் அறிக்கை அளிப்பார்கள்.
மகளிர்விடுதிகள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக 181 என்ற ஹெல்ப்லைன் எண்ணை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம். சென்னையைப் பொருத்தவரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலரை 044 – 25264568 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்
தின் 8-வது மாடியில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் சென்றும் புகார் கொடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாடகைக்கு வீடு கொடுத்தவர்கள் தங்களது வீடுகளில் குடியிருப்பவர்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், மகளிர் விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்கள் பற்றிய விவரங்கள், அந்த விடுதிகளை நடத்துவோர் பற்றிய தகவல்கள் எதுவும் உள்ளூர் போலீஸாரிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அருப்புக்கோட்டை கலைக் கல்லூரி, திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் மாணவியரை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக பேராசிரியைகள் மீது புகார் கூறப்பட்டதால், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு படிக்கும் மாணவியர், வேலை பார்க்கும் பெண்கள் மீது பாலியல் வன்முறை பரவலாக அதிகரித்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை அரசு தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை வந்து கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் மகளிர் விடுதிகளின் விவரங்களை சமூக நலத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெறச் செய்வது அவசியம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago