திருச்செந்தூர் கோயில் அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை மரணம் தொடர்பாக, திமுக தலைவர் மு.கருணாநிதி 1982-ல் மதுரை முதல் திருச்செந்தூர் வரை 200 கி.மீ. தொலைவுக்கு நடத்திய ‘நீதி கேட்டு நெடும்பயணம்' தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நடைபயணமாக கருதப்படுகிறது. இந்த நடைபயணம் மூலம் ஆளும் அதிமுக அரசுக்கும், முதல்வர் எம்ஜிஆருக்கும் பெரும் நெருக்கடி உருவானது.
இடைத்தேர்தல் பணி
தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்த பொன்னுச்சாமி நாடார் மரணமடைந்ததை தொடர்ந்து, 1958-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. திமுக சார்பில் எம்.எஸ்.சிவசாமி களம் இறக்கப்பட்டார். தேர்தல் பொறுப்பாளராக கருணாநிதியை நியமித்து அண்ணா அனுப்பி வைத்தார். 10 நாட்கள் தூத்துக்குடியில் முகாமிட்டு தெருத் தெருவாகச் சென்று கருணாநிதி வாக்கு சேகரித்தார். அனைத்து தெருக்களின் பெயரும் அவருக்கு அத்துப்படியானது. இதனை பின்நாட்களில் அவரே நிகழ்ச்சிகளில் சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து, 1960-ம் ஆண்டும் தூத்துக்குடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலிலும் கருணாநிதி தீவிர பிரச்சாரம் செய்தார். ஆனால், இரண்டு இடைத்தேர்தல்களிலும் திமுக தோல்வியைத் தழுவியது.
மாநில சுயாட்சி முழக்கம்
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் வ.உசி. சிலை திறப்பு விழா கடந்த 1972-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி வஉசி பிறந்த தினத்தன்று நடைபெற்றது. வ.உ.சி. சிலையை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார். அப்போது தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதியும் இவ்விழாவில் பங்கேற்றார்.
திமுகவினர் வைத்திருந்த வரவேற்பு பதாகைகளில் 'மாநில சுயாட்சி வேண்டும்' என்ற கோரிக்கை மேலோங்கி காணப்பட்டது. விழாவில், பேசிய இந்திரா காந்தி இதற்கு பதிலளிக்கும் விதமாக 'உங்களது கோரிக்கை நியாயமானதாக இருக்கிறது. ஆனால், இதனை நடைமுறைப்படுத்தக் கூடிய நிலைக்கு இன்னும் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறவில்லை' என தெரிவித்தார்.
செருப்பு வீச்சு
அன்றைய தினம் இரவு திமுக சார்பில் வஉசி கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டம் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அப்போது சிலர் மேடை மீது செருப்புகளை வீசினர். இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த திமுக நிர்வாகி எம்.எஸ்.சிவசாமி, பதிலுக்கு மேடையில் செருப்பை கழற்றி காட்டிய போது, அவரை கருணாநிதி கண்டித்தார். இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என கடிந்துகொண்டார்.
திருச்செந்தூர் நடைபயணம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை 1980-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், திருச்செந்தூர் கோயிலில் நடந்த உண்டியல் முறைகேடு குறித்து, அரசிடம் புகார் செய்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சி.ஜே.ஆர்.பால் தலைமையில் விசாரணை ஆணையத்தை முதல்வர் எம்ஜிஆர் அமைத்தார். இந்த ஆணையம் விசாரணை நடத்தி 288 பக்கங்கள் கொண்ட அறிக்கையை எம்ஜிஆரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை சட்டப்பேரவையில் வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அரசு வெளியிடவில்லை.
இதையடுத்து விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி வெளியிட்டார். கருணாநிதி கையில் அறிக்கை கிடைத்தது எப்படி? என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
இதுதொடர்பாக, கருணாநிதி உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்த சில அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், கைதும் செய்யப்பட்டனர்.
நீதிபதி பால் ஆணைய அறிக்கையில், அறநிலையத்துறை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கருணாநிதி முன்வைத்தார்.
நீதி கேட்டு நெடும் பயணம்
கொலையாளிகள் மீது 1982 பிப்ரவரி 15-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அன்றைய தினமே மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நீதி கேட்டு 200 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் செல்வேன் என அறிவித்தார். ஆனால், அதிமுக அரசு அசைந்து கொடுக்காததால் திட்டமிட்டபடி, நீதி கேட்டு நெடும் பயணத்தை கருணாநிதி 1982 பிப்ரவரி 15-ம் தேதி மதுரையில் தொடங்கினார். 8 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு பிப்ரவரி 22-ம் தேதி திருச்செந்தூரை அடைந்தார்.
ஓய்வின்றி நடந்ததால் கருணாநிதியின் கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்ட போதும், பொருட்படுத்தாமல் கட்டு போட்டுக் கொண்டு நடந்தார். 22-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவரால் எழுந்து நிற்க முடியாததால் இருக்கையில் அமர்ந்தவாறே பேசினார். இதற்காக மக்களிடம் முதலில் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பேசத் தொடங்கினார்.
திருச்செந்தூரில் ஆண்டுதோறும் ‘சூரனை சுப்பிரமணியன் வதம் செய்வார். ஆனால், தற்போது சுப்பிரமணியனை சூரன்கள் வதம் செய்துள்ளனர்' என கோடிட்டுக் காட்டினார்.
இந்த நடைபயணம் கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாக அமைந்தது. ஆளும் கட்சிக்கும், முதல்வர் எம்ஜிஆருக்கும் பெரும் நெருக்கடி ஏற்படக் காரணமாக இது அமைந்தது.
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் 05.09.1972-ல் நடைபெற்ற வ.உசி. சிலை திறப்பு விழாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன், அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கலந்து கொண்டார்.தூத்துக்குடி துறைமுகத்தில் 08.06.1968-ல் நடைபெற்ற தெற்கு அலைதடுப்பு சுவர் கட்டுமான பணி தொடக்க விழாவில் அப்போதைய மத்திய கப்பல் துறை அமைச்சர் வி.கே.ஆர்.வி.ராவுடன், அப்போதைய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதி கலந்து கொண்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago