ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி: ‘காலேஜ்ல படிக்கும் போது பேன்ட், செருப்பு வாங்க வசதி இல்லீங்க’- உருக்கமான பேட்டி

By எஸ்.முகமது இம்ரானுல்லா

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய ஏ.செல்வம் தனது ஓய்வுக்குப்பின் ஷார்ட்ஸ், டி சர்ட் அணிந்து கொண்டு தனது கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுவருவது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்து பாராட்டையும் பெற்றுள்ளது.

சென்னை உயர் மன்ற நீதிபதியாக இருந்தவர் ஏ.செல்வம். உயர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஓய்வு பெற்றார்.

சட்டக்கல்வியை முடித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் கடந்த 1981-ம் ஆண்டு பதிவு செய்து 5 ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார். அதன்பின் கடந்த 1986-ம் ஆண்டு முனிசிப் மற்றும் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டாக செல்வம் நியமிக்கப்பட்டார்.

அதன்பின் கடந்த 1989-ம் ஆண்டு துணை நீதிபதியாகவும், 1997-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாகவும் செல்வம் உயர்ந்தார். அதன்பின் கடந்த 2006-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு ஏப்ரல் வரை 12 ஆண்டுகள் பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த ஓய்வுக் காலத்துக்குப் பின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள தனது பிறந்த ஊரான புலங்குறிச்சியில் செல்வம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். இவரைப் பார்க்கச் சென்ற வழக்கறிஞர்கள் சிலர், நீதிபதி செல்வம் தனது ஓய்வுக்குப்பின் கால் சட்டையும், டி சர்ட் அணிந்தும், தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு ஆர்வத்துடன் விவசாயப் பணிகளைச் செய்வதையும், டிராக்டரில் நிலத்தை உழுழதையும் பார்த்து வியந்துள்ளனர். அவரை மனதாரப் பாராட்டி உள்ளனர்.

இளைய சமூகத்தினர் விவசாயத்தைக் கைவிட்டு பல்வேறு தொழில்களுக்கு மாறிவரும் நிலையில் நீதிபதி ஒருவர் தனது ஓய்வுக்குப்பின் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு ஈடுபட்டு வருவது இளைய சமூகத்தினருக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது, விவசாயத்தின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது.

விவசாயம் லாபம் இல்லாத தொழில், பருவ மழை பொய்ப்பு, விளைபொருட்களுக்கு விலை இல்லை என்ற பல்வேறு மன சங்கடங்களுக்கு மத்தியில் விவசாயத்தை விரும்பி தனது ஓய்வு காலத்துக்குப் பின் ஓய்வுபெற்ற நீதிபதி செய்துவருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதியாக செல்வம் பணியாற்றிய போது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்த உத்தரவுகளைப் பிறப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவுடன், தனக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவைப் புறக்கணித்தார் செல்வம். அது மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற அன்றை அரசு வழங்கி இருந்த இல்லத்தையும், காரையும் திருப்பி அளித்துவிட்டு, தனது சொந்த ஊருக்குப் புறப்படத் தயாராகினார்.

புலங்குறிச்சியில் விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதியிடம் 'தி இந்து' (ஆங்கிலம்) சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது அவர் கூறியதாவது:

''நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். அதிலும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை, என் தாத்தா என அனைவரும் பாரம்பரியாக விவசாயம் செய்து வந்தனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், மிகவும் கஷ்டப்பட்டுதான் பள்ளிப்படிப்பை முடித்தேன். நல்ல உடைகள்கூட என்னிடம் கிடையாது.

கலை கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க நான் செல்லும்போது, எனக்கு உடுத்திக்கொள்ள பேன்ட் இல்லை, காலில் அணியச் செருப்பு இல்லை. இல்லை என்பதைக் காட்டிலும் வாங்குவதற்கு வசதி இல்லை.

அதனால், வேட்டி அணிந்து கொண்டுதான் கல்லூரி சென்று படித்தேன். நான் சட்டக்கல்லூரிக்கு சென்றபோதுதான் காலில் செருப்பும், உடுத்திக்கொள்ள பேன்ட்டும் வாங்கிக்கொள்ள முடிந்தது. ஆதலால், விவசாயம் என்பதும், வறுமை என்பதும் எனக்குப் புதிதானது அல்ல.

நீதிபதி பதிவியில் இருந்து ஓய்வு பெற்றபின், நான் எந்தவிதமான அரசு சலுகைகளையும் அனுபவிக்கவில்லை, கார், வீட்டைக் கூட உடனே திருப்பி அளித்துவிட்டேன்.

சுதந்திரமாக, சுத்தமான காற்றை சுவாசித்து, எனது சொந்த கிராமத்தில், மகிழ்ச்சியாக விவசாயம் செய்து வருகிறேன். அதிலும் எந்தவிதமான ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்யாமல், இயற்கை முறை விவசாயத்தைச் செய்து வருகிறேன். நெல், பழங்கள், காய்கறிகளைப் பயிர் செய்திருக்கிறேன்.''

இவ்வாறு செல்வம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்