கருணாநிதியின் அரசியல் வாழ்வில் நங்கவரம் போராட்டம்!- நினைவுகளை பகிர்கிறார் நண்பர் கவண்டம்பட்டி முத்து

By அ.வேலுச்சாமி

தமிழ்நாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத அத்தியாயமாக விளங்கியவர் திமுக தலைவர் கருணாநிதி. கலை, இலக்கியம், அரசியல் என பல்துறை வித்தகராக திகழ்ந்த அவர், விவசாயிகளுக்காக முதல் முதலில் நடத்திய நங்கவரம் போராட்டமும், அரசியலில் தடம்பதித்து முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்றதும் அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள்.

அப்படிப்பட்ட தருணங்களில் கருணாநிதிக்கு உற்ற துணையாகவும், உடனிருந்து வலுசேர்த்த நண்பராகவும் விளங்கிய முக்கியமானவர்களில் ஒருவர் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நங்கவரம் அருகேயுள்ள கவண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து (94). இவர் திமுக தலைவர் கருணாநிதி குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழிடம் பகிர்ந்துகொண்ட நினைவுகள்:

பண்ணையார்கள் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலம் அது. நங்கவரம் பண்ணையில் ‘ கையேர் வாரம்', ‘மாட்டேர் வாரம்' ஆகிய முறைகள் இருந்தன. களத்திலே மலைபோல நெல்மணிகள் குவிந்துகிடக்கும்.

உழவுசெய்து, பயிரிட்டு, அந்த நெல்மணிகளை அறுவடை செய்து தந்த தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கஞ்சிக்கு வழியின்றி கஷ்டப்படும் நிலை இருந்தது. அதுமட்டுமின்றி பண்ணையாரை பார்த்துவிட்டால், உடனடியாக கீழே விழுந்து வணங்க வேண்டும். நங்க வரத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் எங்கள் ஊர். திருச்சி ஜில்லா விவசாயிகள் சங்கத் தலைவர் என்ற முறையில் பண்ணையாருக்கு எதிராக நான் குரல் கொடுத்து வந்தேன்.

நங்கவரத்தில் கருணாநிதி

இப்பிரச்சினையின் தீவிரத்தை அறிந்த அண்ணா, ‘ விவசாயிகளுக்கு நில உரிமை கிடைப்பதற்காக கருணாநிதி தலைமையில் நங்கவரத்தில் போராட்டம் நடைபெறும். அதற்குப் பிறகும் பண்ணையார் ஒத்துவராவிட்டால், நானே முன்னின்று போராட்டத்தை நடத்துவேன்' என சென்னையில் அறிவித்தார். போராட்டத்துக்கு வந்தால் கருணாநிதியின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கருணாநிதி அதைப் பொருட்படுத்தவில்லை. விவசாயிகளின் நலனே முக்கியம் எனக் கருதி இப்போராட்டத்தை நடத்துவதற்காக துணிச்சலுடன் வந்தார். பெருகமணி ரயில் நிலையத்துக்கு வந்திறங்கிய அவரை, பெருந்திரளானோர் வரவேற்றோம். கருணாநிதியின் பேச்சாற்றல் குறித்து அப்போது தமிழ்நாடு முழுவதும் அறிந்திருந்த சமயம். அவரைக் காண வழிநெடுகிலும் பொதுமக்களும், இளைஞர்களும், திமுகவினரும் திரண்டிருந்தனர். அதேபோல பண்ணையார்களின் ஆதரவாளர்கள் கருணாநிதிக்கு எதிராக செயல்படலாம் என்ற நிலையும் இருந்தது.

எழுச்சிமிக்க பேச்சு

இதனால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க பெருகமணியில் இருந்து நங்கவரம் வரை வழிநெடுகிலும் ரிசர்வ் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது.

கருணாநிதியை சைக்கிளில் உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றோம். நான்தான்சைக்கிளை மிதித்தேன். நங்கவரத்தில் இறங்கிய கருணாநிதியை, விவசாயிகள் விண்ணதிரும் வகையில் வாழ்த்து முழக்கம் எழுப்பி வரவேற்றனர். அப்போது அவர்களுக்கு மத்தியில் கருணாநிதி பேசிய பேச்சும், அவர் நடத்திய உரிமைப் போராட்டமும் விவசாயிகளிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

அதன்பிறகு கிராமங்கள்தோறும் போராட்டங்கள் தீவிரமாகின. வேறுவழியின்றி பண்ணையார்கள் இறங்கி வந்தனர். கிரயத்தின் அடிப்படையில் அவரவர் உழுத நிலம், விவசாயிகளுக்கே சொந்தமானது. இதற்கான ஒப்பந்தத்தில் அப்போதைய திருச்சி ஆட்சியர் மலையப்பன், கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம்,

நான் உள்ளிட்டோர் கையெழுத்திட்டோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த போராட்டமே எங்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்க காரணமாக இருந்தது.

மன உறுதி மிக்கவர்

நான் நெருங்கிப் பழகியவரை கருணாநிதியிடம் கண்டு வியந்த ஆற்றலில் முக்கியமானது, மனிதனை மனிதன் அறியும் ஆற்றலைப் பெற்றிருந்ததுதான். எதிரில் இருப்பவர்களின் முகத்தைப்பார்த்து மட்டுமல்ல; பேச்சை வைத்தே அவர்களை எடைபோடக்கூடிய திறன் பெற்றவராகத் திகழ்ந்தார் கருணாநிதி.

அதேபோல அபார நினைவாற்றலும், அசைக்க முடியாத மன உறுதியும் கொண்டவராக இருந்தார். கருணாநிதியைப் போன்று திமுகவில் வேறு யாரிடமும் மன உறுதி இல்லை என்று அண்ணாவே பலமுறை சொல்லியது உண்டு  என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்