கம்பெனி பதிவாளரை விசாரிக்க 7 நாள் போலீஸ் காவல் கேட்டு சிபிஐ மனு

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பெனிகளின் பதிவாளர் மனுநீதிச் சோழன், சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது.

செட்டிநாடு குழுமங்களின் தலைவர் எம்.ஏ.எம்.ராமசாமியிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கம்பெனிகளின் பதிவாளர் மனுநீதி சோழனை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் கைது செய்தனர். அவரை புதன்கிழமை பிற்பகல் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, மனுநீதி சோழனை 2 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்தனர். அதே நேரத்தில் மனுநீதி சோழன் சார்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை (இன்று) நடக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மனுநீதி சோழன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE