கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு: காவிரியில் பெரும் வெள்ளப்பெருக்கு

By வி.சீனிவாசன்

 கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் தமிழகத்துக்கு  திறக்கப்பட்டுள்ளது. வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூரில் சிறப்பு பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கன‌மழை பெய்ததால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட‌து. இதேபோல்,‌ கேரள மாநிலம் வயநாட்டில் இரவு பகலாக பலத்த மழை பெய்து வருவதால் கபினி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய‌ அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், இந்தாண்டில் இரண்டாம் முறையாக இரு அணைகளும் நிரம்பின.

காவிரியில் தமிழகத்துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1.75 லட்சம் கனஅடி அளவுக்கு நீர் திறக்க‌ப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 122.43 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரத்து 896 கனஅடி நீர் வந்துக் கொண்டிருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சத்து 37 ஆயிரத்து 579 கனஅடி நீர் வெளியேற்ற‌ப்பட்டது.

மைசூரு மாவட்டத்தில் கபினி அணையின் நீர்மட்டம் 2279.22 அடியாக உள்ளது. கேரளாவில் தொடரும் கனமழையால் கபினி அணைக்கு விநாடிக்கு 60 ஆயிரத்து 6180 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 62 ஆயிர‌த்து 542 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்தும் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளதால் 5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூருக்கு சிறப்பு பேரிடர் மீட்புப் படை வருகை புரிந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள 12 மாவட்டங்களின் ஆட்சியர்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அணைக்கு வரும் நீர் அளவைக் கணக்கெடுத்து கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு பவானிசாகர் அணையில் நீர் திறப்பு 31 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 116.75 அடியாகவும், நீர்இருப்பு 30.11 டிஎம்சியாகவும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்