10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை சரியாகத் திருத்தாத 1000 ஆசிரியர்கள்: தேர்வுத்துறை விளக்கம் கேட்பு

By மு.அப்துல் முத்தலீஃப்

 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சரியாக விடைத்தாளைத் திருத்தாத 1000 ஆசிரியர்களிடம் தேர்வுத்துறை விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது.

பொதுத்தேர்வுகளில் நன்றாகப் படித்து, தேர்பை சிறப்பாக எழுதியும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய தேர்வுத்துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வெழுதிய சுமார் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறு மதிப்பீடு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் விடைத்தாள் கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால் மதிப்பெண் மாறியுள்ளது தெரியவந்தது.

விடைத்தாள்களைத் திருத்துவதில் ஆசிரியர்கள் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் ( உதவித் தேர்வாளர்) செயல்பட்டதாகப் புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட விடைத்தாள்களை தேர்வுத்துறையினர் ஆய்வு செய்தனர். அந்த விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் ( உதவித் தேர்வாளர்), சரிபார்த்த விடை திருத்தும் மைய அதிகாரிகள் குறித்த பட்டியலைத் தயார் செய்தனர்.

அதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளைத் திருத்தியதில் 5 முதல் 40 மதிப்பெண்கள் வரை குறைவாகவும், தவறாகவும் கையாளப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் விடைத்தாளைத் திருத்திய 200 பட்டதாரி ஆசிரியர்களை இனங்கண்டுள்ளனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை அலட்சியமாகத் திருத்தியதால் 5 முதல் 50 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் இருந்ததாகக் கண்டறியப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 800 முதுகலை ஆசிரியர்கள் (உதவித் தேர்வாளர்) கண்டறியப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாகத் திருத்தாத 1000 ஆசிரியர்களுக்கும் (உதவித் தேர்வாளர்) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆசிரியர்கள் ( உதவித் தேர்வாளர்) விடைத்தாளைத் திருத்தியதும், அதை முதன்மைத் தேர்வாளர்கள் ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். பின்னர் அது கண்காணிப்பாளர் வசம் இறுதிப்படுத்தப்படும்.

இதுகுறித்து இத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

இதில் உதவித்தேர்வர், முதன்மைத் தேர்வர் பணி முக்கியமானது. தேர்வெழுதும் மாணவரின் எதிர்காலம் அவர்கள் கையில்தான் உள்ளது. இந்தப்பணிக்கு வர பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவதில்லை. இதனால் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்து விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

இதனால் பள்ளிக் கல்வித்துறை அலட்சியமாக விடைத்தாள் திருத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பில்லை. சாதாரணமாக 17(எ) பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு அதன் பதிலைப் பெற்று முடித்துவிடுவார்கள். அடுத்த ஆண்டு இத்தகையோர் விடைத்தாள் திருத்தக்கூடாது என்றுகூட வலியுறுத்த மாட்டார்கள், காரணம் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள் என்ற எண்ணம்.

அப்படியே நடவடிக்கை இருந்தால் அரசியல் குறுக்கீடு, சங்கம் குறுக்கீடு என்று போகும். ஒரு மாணவன் மறு மதிப்பீடு குறித்து அறிந்திருந்தால் அவரால் மறு மதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்கு பெற்றோர் ஒத்துழைப்பும் அவசியம். ரூ.1000 வரை செலவாகும், மறுகூட்டல்குறித்த மாணவரின் பெற்றோருக்கு நம்பிக்கை வேண்டும், பண வசதி வேண்டும்.

மேலும் இன்றும் கிராமப்புற மாணவர்களில் அதிகமான சதவிகிதத்தினருக்கு மறுகூட்டல் குறித்து தெரியாது. அல்லது தெரிந்திருந்தாலும் பணவசதி இருக்காது. இவையெல்லாம் இல்லாத மாணவர் இதுபோன்ற தவறான திருத்துதல் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மதிப்பெண்ணும் அந்த மாணவருக்கு முக்கியம் என்ற உணர்வுடன் ஆசிரியர்கள் திருத்துதல் வேண்டும்.

இதுபோன்ற நேரங்களில் 17(எ) பிரிவின் கீழ் இல்லாமல் 17(பி) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பள உயர்வு கட் போன்ற நடவடிக்கையை எடுக்கவேண்டும். முக்கியமாக அரசியல் தலையீடு, சங்கத்தின்  தலையீடு இல்லாமல் நடவடிக்கை இருக்க வேண்டும். மாணவர்களின் வாழ்க்கை முக்கியத்துவம் வாய்ந்தது.” என்று தெரிவித்தார்.

மாணவர்கள் ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவர்கள் வாழ்க்கையில் இன்றியமையாதது.  அந்த அடிப்படையில் ஆசிரியர்களும் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்பதே பெற்றோர், மாணவர்களின் எதிர்பார்ப்பு.

பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துவரும் அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்