திமுகவின் பலம் என்று தீவிரமான தொண்டர்களைத்தான் சொல்லுவார்கள். திமுக தலைவர் கருணாநிதி கூட, அப்படியொரு தீவிரத் தொண்டராக, சுயம்புவாக உருவெடுத்து, தனக்கென ஓரிடத்தைப் பெற்றவர்தான்!
1944-ல் பட்டுக்கோட்டை அழகிரி பேச்சால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த கருணாநிதி, பேச்சுப்போட்டியில் வென்றவுடனேயே பேச்சுமன்றம் ஒன்றை தனது கிராமத்தில் உள்ள இளைஞர்களை வைத்து ஆரம்பித்த ஆளுமை மிக்கவர். தானே ஒரு கையேட்டை நடத்தி அதற்கு முரசொலி என்று பெயரிட்டு, அதை 75 ஆண்டுகாலமாக நடத்தி வரும் பத்திரிகையாளர். தனது பேச்சால், கூர்தீட்டிய வாள் போன்ற வசனங்களால் தமிழக மக்களைக் கவர்ந்தார்.
எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்னரே தனது எழுத்தாளுமையால் திரையுலகிற்கு வந்தவர் அவர்! 1973-ல் எம்ஜிஆரை திமுகவை விட்டு நீக்கியபோதும், பின்னர் 1977 எம்ஜிஆர் ஆட்சி அமைத்துதேர்தலில் தோல்வியில் ஆரம்பித்து 1989 வரை தொடர் தோல்வியைச் சந்தித்தாலும் தனது தனித்துவமிக்க ஆளுமையால் தொண்டர்களை வசப்படுத்தி வைத்திருந்தார்.
அவரது பேச்சு, எழுத்தால் ஈர்க்கப்பட்ட கோடிக்கணக்கான தொண்டர்களால் இன்றும் திமுக உயிர்ப்புடன் முதன்மைக் கட்சியாக விளங்கி வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி. உள்ளூர், வெளியூர் என தொண்டர்களின் வருகை இப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
எழுந்து வா தலைவா எனும் கோஷங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. டாக்டர் கலைஞர் வாழ்க என்று கோஷமிட்டபடி இருக்கிறார்கள் தொண்டர்கள். அங்கே... கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதலாக... கையில் கட்சிக் கொடியைப் பிடித்துக்கொண்டு, சாப்பாடு, தூக்கம் என எதுகுறித்தும் யோசிக்காமல் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறார் தொண்டர் ஒருவர்.
அந்தத் தொண்டர்கள் கூட்டத்துக்கு நடுவே கூட்டத்துடன்கூட்டமாக நின்றாலும் தனிக்கவனம் ஈர்க்கிறார். கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் எனும் செய்திகள் வரவர... கொஞ்சம்கொஞ்சமாக, காவேரி மருத்துவமனை வளாகப் பகுதி சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆனால்... கூட்டத்தில் ஒருவராக நின்ற அந்தத் தொண்டர், கட்சிக்கொடியை தூக்கிப்பிடித்தபடி, கொடியை அசைத்துக்கொண்டே இன்று வரை அங்கே நின்றுகொண்டிருக்கிறார்.
அங்கு பணியில் ஈடுபட்டிருக்கிற போலீசார் முதற்கொண்டு பலருக்கும் அந்தத் தொண்டர் அறிமுகமாகிவிட்டார். அழுக்கு உடை, எண்ணெய் காணாத சிகை என இருக்கிறார். ஆனால் அவருக்கு இதெல்லாம் ஒருபொருட்டே இல்லாமல், கருணாநிதி எனும் ஒற்றைச் சொல்லை நினைத்தபடியே இருக்கிறார். அவரைப் புகைப்படம் எடுத்தேன். ‘என்னை ஏன் போட்டோ எடுக்கறே? என் தலைவரு குணமாகி வருவாரு... அவரை எடு’ என்று சொல்லிவிட்டு, கலைஞர் வாழ்க கோஷமிடுகிறார்.
அவரை இன்னும் நெருங்கினேன். பேச்சுக் கொடுத்தேன். அவரைப் பற்றிய விவரம் கேட்டேன். ’’எம் பேரு கரண். எனக்கு 38 வயசாவுது. பொறந்தது, வளர்ந்தது, வாழ்றது எல்லாமே சென்னைதான். அதுவும் மந்தவெளிதான்’’ என்றவர், பெயிண்டிங் வேலை செய்கிறாராம். இப்போது வேளச்சேரியில் இருக்கிறார். ‘’எனக்குக் கல்யாணமாகி, பெண் குழந்தை இருக்கு. மனைவி, மகள்னு வாழ்ந்துட்டிருக்கறவன் தான் நான்.
முன்னால பாத்துருக்கணும். மெர்சலாயிருவே. இப்ப தலைவர் இப்படி இருக்கச் சொல்ல, எனக்கு எதுவுமே ஓடலை. தலைவர் கலைஞர்தான் எனக்கு உலகம். என் உசுரே அவருதான். அவருக்கு முடியல... ஆஸ்பத்திரில சேத்துருக்குன்னு தெரிஞ்சதும் மனசே உடைஞ்சு போயிட்டேன். என்னால வேலை எதுவும் செய்யமுடியல. இதோ... ஆஸ்பத்திரி வாசலே கதின்னு கெடக்கேன்’’ என்று தெரிவித்த கரணிடம், ‘வீட்டுக்குப் போகவில்லையா? மனைவி, மகளையெல்லாம் பார்க்கவில்லையா?’ என்றேன்.
‘எல்லாம் அவங்க நல்லாத்தான் இருப்பாங்க. தலைவர் குணமாகற வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டு போகமாட்டேன். அவர் குணமாகி, கோபாலபுரம் திரும்பற வரைக்கும் இங்கேதான் இருப்பேன். அதுக்குப் பிறகுதான், நான் என் வீட்டுக்குப் போவேன்’’ என்கிறார் உறுதியும் நம்பிக்கையுமாக.
‘கருணாநிதியை அவ்வளவு பிடிக்குமா?’ என்று கேட்டால், கண்கள் விரிய, முகம் பிரகாசமாகப் பேசுகிறார் கரண். ‘’என்ன அப்படிக் கேட்டுட்டீங்க. அவர் பேச்சு கேட்டுக்கிட்டே இருக்கலாம். முன்னாடிலாம் எங்கே கூட்டம்னாலும், எங்கே அவர் பேசினாலும் போயிருவேன். நிறைய பேரு, கட்சி உறுப்பினரான்னு கேக்குறாங்க. அப்படில்லாம் இல்ல. ஆனா தலைவரைப் பிடிக்கும். ரொம்பரொம்பப் பிடிக்கும்.
இப்போ என் நெனப்பு... தலைவர் குணமாகணுங்கறது மட்டும்தான். வேற எதுவுமே இல்ல. எந்தச் சிந்தனையும் இல்ல’’ என்றவரிடம் சாப்பாட்டுக்கு என்ன செய்றீங்க என்று கேட்டேன். ‘’பசிக்கிறதே இல்ல. எப்பவாவது வயிறு கத்தும்போது, இங்கே, யார்யாரோ பொட்டலம் தர்றாங்க. தலைவர் குணமாகணும்; கோபாலபுரம் திரும்பணும். அவ்ளோதான்’’ என்று சொல்லிவிட்டு, அடித்தொண்டையில் இருந்து, காவேரி மருத்துவமனையின் மாடி நோக்கி, கொடியசைத்துக்கொண்டே சொல்கிறார்... ‘எழுந்து வா தலைவா... எழுந்து வா தலைவா!’ .
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago