நீலகிரி மாவட்டம் மாயார் யானைகள் வழித்தடத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகியப் பகுதிகள் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், யானை வழித்தடங்களை வரையறை செய்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் 32-க்கும் மேற்பட்ட ரிசார்ட் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, “நாடு முழுவதும் உள்ள 27 யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக ரிசார்ட்டுகள் மற்றும் ஹோட்டல்கள் கட்டப்படுவதால், யானைகள் பாதிக்கப்படுவதுடன் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்க வேண்டும். பருவமழை காலத்தின்போது தமிழக காடுகளுக்குள் 18 ஆயிரம் யானைகள் இடம்பெயர்கின்றன. இவற்றின் வழித்தடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிப்பதுடன், முழுமையாக மூட உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
“யானைகள் நாட்டின் சொத்து. அவற்றைப் பாதுகாப்பது நமது கடமை. யானை வழித்தடங்களில் அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானங்கள் கட்டக் கூடாது என்று உத்தரவுகள் இருந்தும் சட்டத்தை மீறி கட்டிடங்களை எழுப்பியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்ததுடன், யானை வழித்தடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி 22 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு 13 மாநிலங்கள் பதில் அளிக்காதது குறித்து கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டுகள் மீது பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர். யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை, அடுத்த 24 மணிநேரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்வார். அந்த ரிசார்ட்டுகள் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டிருந்தால், ஆட்சியர் முடிவு எடுக்கலாம். சட்டத்துக்கு புறம்பாக, முன் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்தால், அடுத்த 48 மணி நேரத்தில் தங்கும் விடுதிகளையும் மூடி சீல் வைக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதன் பேரில் மாயார் யானைகள் வழித்தடத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. சோலூர் பேரூராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது, “யானைகள் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 39 காட்டேஜ் வளாகங்களில் 27 காட்டேஜ்களுக்கு 48 மணிநேரத்தில் காலி செய்ய நோட்டீஸ் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. மீதமுள்ள 12 காட்டேஜ்களின் ஆவணங்கள் சமர்ப்பிக்க கெடு உள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவில் வீடுகள் ஏதும் இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago