கணவரை கண்டுபிடித்து தரக் கோரி இளம்பெண் தீ குளிக்க முயற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

காணாமல்போன கணவரை மீட்டுத் தரக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே கெரகேப் பள்ளிகேட் பகுதியில் வசித்து வருபவர் குமார். மெக்கானிக். இவரது மனைவி சோனியா(23). இவர்களுக்கு சபீக்சன்(4) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் சோனியா மண்ணெண்ணெய் கேனுடன், மகனை அழைத்துக்கொண்டு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

நுழைவு வாயில் அருகே வந்ததும் சோனியா, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார். அங்கு பணியில் இருந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷிடம் அழைத்துச் சென்றனர். ஆட்சியர் அவரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது சோனியா கூறும்போது, எனது கணவர் குமார், பெங்களூரில் மெக்கானிக் வேலை செய்துவந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சொத்து பிரச்சினை காரணமாக சொந்த ஊருக்கு வந்தோம். கடந்த 25 நாட்களுக்கு முன்பு கணவருடன் சாமல்பட்டி காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றுவிட்டு நான் திருப்பத்தூரில் உள்ள எனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டேன். அதன்பின்பு என் கணவர் வீட்டுக்கு வரவில்லை.

கணவரின் வீட்டுக்குச் சென்று உறவினர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு தெரியாது எனக்கூறி தரக்குறைவாக திட்டி அனுப்பி விட்டனர். சாமல்பட்டி, திருப்பத்தூர் காவல்நிலையங்களில் கணவரை மீட்டுத் தரக் கோரி புகார் அளிக்க சென்றபோது, புகார் வாங்க போலீஸார் மறுத்துவிட்டனர். எனவே கணவரை மீட்டுத் தர வேண்டும் என கண்ணீருடன் முறையிட்டார்.

ஆட்சியர் ராஜேஷ், மாவட்ட சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் காப்பகத்தில் சோனியாவை தங்க வைத்தும், அவரது குழந்தை பள்ளியில் சேர்க்கவும் சோனியாவுக்கு உரிய வேலை பெற்றுத் தரவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE