‘மறக்க முடியுமா?’ கலைஞரின் பன்முக ஆற்றலை..!

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

திமுக கூட்டம் ஒன்றில் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர். அண்ணா சொல் மழை பொழிந்துகொண்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, அண்ணா மற்றொரு கூட்டத்துக்கு செல்ல வேண் டும். அதற்காக, தனது பேச்சை சுருக்கிக் கொண்ட அண்ணா, ‘‘முன்னுரையை நான் எழுதிவிட்டேன். முடிவுரையை தம்பி கருணாநிதி எழுதுவான்...’ என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.

பின்னர், பேச்சை ஆரம்பித்தார் கருணா நிதி. அண்ணாவின் உணர்ச்சியும், எழுச்சியும், நகைச்சுவையும் மிளிர பேசி முடித்தார். கட்சி யினரிடம், ‘அண்ணாவுக்குப் பின் கருணா நிதிதான் தலைவராக இருக்கத் தகுதி படைத்தவர்’ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியது.

சில ஆண்டுகளில் அது உண்மை யாகவும் ஆனது. 1967-ல் திமுக ஆட்சியைப் பிடித்து, அண்ணா முதல்வரானார். ஆன போதிலும், நீண்டகாலம் அவரால் ஆட்சி யில் இருக்க முடியவில்லை. புற்று நோயால் பாதிக்கப்பட்ட அண்ணா, சிகிச்சை பலனின்றி 1969 பிப்ரவரி 3-ம் தேதி காலமானார். அவருக்குப் பின் யார் என்ற கேள்வி எழுந் தது. எம்ஜிஆர் ஆதரவோடு முதல் வரானார் கருணாநிதி. கட்சியின் தலைவ ராகவும் ஆனார். இதை பெரியார் வரவேற்றார். ஒரு கட்டத்தில், ‘கருணாநிதி திமுகவின் சர்வாதிகாரி ஆக்கப்பட வேண்டும்’ என்று அவருக்கு தனது முழு ஆதரவை அளித்தார் பெரியார்.

1967-ல் திமுகவுக்கு தேர்தல் செலவு களுக்காக ரூ.10 லட்சம் நிதி திரட்ட வேண்டும் என்று அண்ணா இலக்கு வைத்தி ருந்தார். அவர் நிர்ணயித்ததைவிட ஒரு லட்சம் ரூபாய் அதிகமாகவே வசூலித்து விட்டார் அப்போது திமுகவின் பொருளா ளராக இருந்த கருணாநிதி. சென்னையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் நிதியாக அண்ணாவிடம் ரூ.11 லட்சத்தை அளித்தார். பின்னர், தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு கூட்டம் நடந்தது. அதில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் கருணாநிதியை, ‘மிஸ்டர் பதினோரு லட்சம்’ என்று பெருமிதம் பொங்க அறிவித்தார் அண்ணா.

சட்டப்பேரவையில் மாற்றுக்கட்சியினர் எழுப்பும் சிக்கலான எந்த கேள்விக்கும் தனக்கே உரிய முறையில் நகைச்சுவை யுடனும், சாதுர்யத்துடனும் பதில் அளிப்பார் கருணாநிதி. ஆக்ரோஷமாக எழுந்து கேள்வி கேட்டவரே ரசிக்கும்படி பதில் அளிக்கும் ஆற்றல் கருணாநிதிக்கு உண்டு.

1970-களில் அவர் முதல்வராக இருந்த போது சட்டப்பேரவையில் ஒரு விவாதம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் மசோதாவை ஆதரித்து கருணாநிதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்க் கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர் டி.என்.அனந்தநாயகி, ‘‘எதற்காக இந்த சட்டம்? எங்கள் ஊரில் உள்ள பிடாரி கோயிலில் தாழ்த்தப்பட்டவர்தான் பூசாரியாக இருக்கிறார். எனவே, இந்த சட்டம் தேவையில்லை’’ என்றார்.

அதற்கு, மசோதாவின் நோக்கத்தை விளக்கிய கருணாநிதி, ‘‘தாழ்த்தப்பட்டவர் கள் அர்ச்சகராக இருப்பதை பிடாரிகள்கூட ஏற்கிறார்கள். சில அடங்காப் பிடாரிகள் ஏற்க மறுக்கிறார்கள்’’ என்று கூற, அவையே சிரிப்பில் ஆழ்ந்தது.

விடாமல் அடுத்த கேள்வி தொடுத்தார் அனந்தநாயகி. ‘‘சாமி நம்பிக்கை இல்லாத முதல்வர் கருணாநிதிக்கு, கோயிலைப் பற்றி என்ன கவலை?’’ என்றார். அசராத கருணாநிதி, ‘‘கொலை செய்தவர்கள் மட்டுமா நீதிமன்றம் போகிறார்கள். வழக்கில் வாதாடும் வக்கீல்களும், நீதிபதிகளும் கூடத் தான் நீதிமன்றம் போகிறார்கள்’’ என்றார். கேள்வி கேட்ட அனந்தநாயகி உட்பட சபையே அவரது சாதுர்யத்தை ரசித்தது.

கருணாநிதி கதை, வசனத்தில் முரசொலி மாறன் தயாரித்து, இயக்கிய படம் ‘மறக்க முடியுமா?’. அந்தப் படத்தில் இடம்பெற்ற மறக்க முடியாத பாடல்.. டி.கே.ராமமூர்த்தியின் இசையில் பி.சுசீலா வின் சோகம் இழையும் குரலில் வரும் ‘காகித ஓடம் கடல் அலைமீது போவது போலே மூவரும் போவோம்’ என்ற பாடல். இப் பாடலை எழுதியவர் கருணாநிதிதான் என்பது பலருக்கு தெரியாது.

அவராக விரும்பி, இந்தப் பாடலை எழுதவில்லை. எழுத வேண்டிய சூழ்நிலை.

முதலில் கவிஞர் மாயவநாதன்தான் பாடலை எழுத இருந்தார் திரைப்படப் பாடல்களை உருவாக்குவதில் இரண்டு ரகம் உண்டு. ஒன்று, பாட்டு எழுதி அதற்கு மெட்டமைப்பது. இன்னொன்று, மெட்டுக்கு பாட்டு எழுதுவது.

இந்தப் பாட்டுக்கு இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி ஏற்கெனவே மெட்டு அமைத்துவிட்டார். வழக்கமாக, ‘தானன தானா.. தானன தானா’ என்றுதான் இசையமைப்பாளர்கள் பாடிக் காட்டுவார்கள். அன்று உற்சாக மனநிலையில் இருந்த டி.கே.ராமமூர்த்தி, ‘தானன தானா..’ என்பதுபோல கவிஞரின் பெயரையே ‘மாயவ.. நாதன்.. மாயவ.. நாதன்’ என்று பாடிக் காட்டினார். டி.கே.ராமமூர்த்தி விளையாட்டாகதான் செய்தார். ஆனால், கவிஞர் மாயவநாதன், ‘‘என்ன கிண்டல் செய்கிறீர்களா’’ என்று கேட்டுவிட்டு கோபமாக எழுந்துபோய் விட்டார்.

பாடல் எழுதப்பட்டு காட்சி படமாக்கப் பட வேண்டும். அவசரம் தொலைபேசி யில் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அடுத்த அரைமணி நேரத்தில் தொலைபேசி வழியாகவே அவர் கொடுத்த பாடல்தான்.. ‘காகித ஓடம் கடல்அலை மீது’. பாட்டின் தொடக்கம் முதல் கடைசி வரை ‘மாயவ..நாதன்.. மாயவ..நாதன்’ என்பதுபோலவே எழுதியிப்பார் கருணாநிதி.

இந்தப் பாடல் ஒலிப்பதிவின் போதும் ஒரு சுவாரசியம். ‘புதிய பறவை’ படத்தில் சூப்பர் ஹிட்டான ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி 64 வயலின்களை அந்தப் பாடலுக்கு பயன்படுத்தியிருந்தனர். வயலின் கூட்டத்தின் இசை அந்தப் பாடலை ஆக்கிரமித்திருக்கும்.

பின்னர், விஸ்வநாதனும், ராமமூர்த்தி யும் பிரிந்துவிட்ட நிலையில், ‘மறக்க முடியுமா’ படத்துக்கு டி.கே.ராமமூர்த்தி மட்டும் இசையமைத்தார்.

‘எங்கே நிம்மதி’ பாடல் போல, ‘காகித ஓடம்’ பாடலும் சிறப்பாக வரவேண்டும் என்பதால், இந்தப் பாடல் ஒலிப்பதிவிலும் 64 வயலின்கள் வேண்டும் என்று கேட்டார் ராமமூர்த்தி. படத் தயாரிப்பாளர் கருணா நிதியின் மருமகன் முரசொலி மாறன். சிக்கனத்துக்கு பெயர்பெற்ற கருணாநிதி சிரித்துக்கொண்டே ராமமூர்த்தியிடம், ‘‘அப்போது விஸ்வநாதன் ராமமூர்த்தி இரண்டு பேரும் சேர்ந்து 64 வயலின் பயன்படுத்தினீர்கள். இப்போது ராமமூர்த்தி மட்டும்தானே. 32 வயலின் போதுமே’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்