‘தாத்தாவின் அடையாளம் பேனா’: கருணாநிதியின் சட்டைப்பையில் பேனாவை வைத்த கனிமொழியின் மகன் ஆதித்யா

 கருணாநிதியின் இறுதி நிகழ்வில் நெகிழ்ச்சியூட்டும் விஷயமாக அவரது அடையாளமான பேனாவை வைக்கவேண்டும் என கனிமொழியின் மகன் எங்கிருந்தோ அதனை வாங்கி தாத்தாவின் சட்டைப்பையில் வைத்த நிகழ்வு இணையதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

கருணாநிதி திருவாரூர் மாவட்ட குக்கிராமமான திருக்குவளையில் பிறந்து 12 வயதில் கையெழுத்து பிரதியை ஆரம்பித்து அதற்கு முரசொலி என பெயரிட்டு அதை ஆலமரமாக்கி 75 வது ஆண்டை நோக்கி திமுகவின் நாளேடாக அது விளங்குகிறது.

கருணாநிதின் பன்முகத்தன்மையில் முக்கியமானது அரசியல் தலைவர் என்றாலும் அவரை தூக்கி நிறுத்தியது அவரது எழுத்தாளுமை. பத்திரிகையாளர், வசனகர்த்தா, நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், உடன் பிறப்புக்கு கடிதம் எழுதிய தலைவர், பாடலாசிரியர், வரலாற்றாசிரியர், இலக்கியவாதி என அனைத்திலும் அவரது அடையாளம் எழுத்து.

எழுத்து எழுத்து என அவர் எழுதி தீர்த்த பக்கங்கள் பல ஆயிரம். பின்னர் தன்னால் இயலாதபோது அவர் உதவியாளரை வைத்துக்கொண்டார். இந்திய அரசியல் தலைவர்களில் அதிகம் எழுதியவர்களில் ஈ.எம்.எஸ் நம்பூத்ரிபாட்டை சொல்வார்கள். அவர் அரசியல், பொருளாதாரம் மட்டுமே எழுதினார். அதற்கு இணையாக இலக்கியம், அரசியல் என எழுதி குவித்தவர் கருணாநிதி.

அவரது அடையாளமே அவரது எழுத்துப்பணியும், பேனாவும் தான். கருணாநிதி இயற்கையின் ஒத்துழையாமை, முதுமை காரணமாக ஓய்வு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். மரணம் அவரை அணைத்தாலும் அவரது எழுத்துக்கள் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.

கருணாநிதியின் இறுதி நிகழ்வில் அவருக்கு பலரும் பல்வேறு வகையில் அஞ்சலி செலுத்தினர், அவருக்கு இஷ்டமான அண்ணா அளித்த மோதிரத்தை கழற்றக்கூடாது என குடும்பத்தார் அவர் விருப்பத்தை நிறைவேற்றினர். ஆனால் அவருக்கு மிக்வும் இஷ்டமான ஒன்றும், அவரை அடையாளப்படுத்தியதும் அவர் கையிலிருந்த பேனா எனும் எழுதுகோல் தான்.

‘எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்’ என்பதை வாழ்க்கையாக பார்த்தவர் கருணாநிதி. அவரது வாழ்க்கை வரலாறு என்கிற நெஞ்சுக்கு நீதியை பல பாகங்களாக எழுதியதன் மூலம் தமிழக திராவிட அரசியலையும், அக்கால அரசியல் அனைத்தையும் ஆவணபடுத்தியிருக்கிறார்.

பேனா என்னும் ஆயுதம் கொண்டு மிசா சர்வாதிகார போக்கை வெளிச்சம் போட்டு இருக்கிறார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் கருணாநிதியின் அறிக்கை வரட்டும், அதற்கு பிறகு கருத்து சொல்லாம் என்று காத்திருந்த அரசியல் தலைவர்களே அதிகம்.

அவரது இறுதிப்பயணத்தில் அவரது சவப்பெட்டியில் அவர் பெரிதும் நேசித்து அவரோடும், அரசியலோடும் வளர்ந்த முரசொலி பத்திரிகை வைக்கபட்டிருந்தது. ஆனால் அவரது ஆயுதமான பேனா சட்டைப் பையில் வைக்கபடவில்லை. இறுதி மரியாதை செலுத்தும் பரபரப்பில் யாரும் அதை கவனித்திடவும் இல்லை.

அந்த பரபரப்பிலும் ஜிப்பா, கண்ணாடி அணிந்து மொட்டை அடித்து சில நாள் வளர்ந்த முடியுடன் சிறுவன் அங்குமிங்கும் அனைவருக்கும் உதவியபடி பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தார். திடீரென ஒரு அதிகாரியிடம் சார் உங்கள் பேனாவை தர முடியுமா என்று கேட்க அவரும் உடனே எடுத்து தந்துள்ளார்.

‘‘சார் இன்னொரு விண்ணப்பம் இந்த பேனாவை என்னால் திருப்பி தர முடியாது என்று அந்த சிறுவன் கூற ஏன் தம்பி என்று அந்த அதிகாரி கேட்க, என் தாத்தா மிகவும் விரும்பிய பேனா, அவருடைய இறுதிப்பயணத்தில் எல்லாம் இருக்கிறது, பேனா இல்லை. இந்தப்பேனாவை அவர் சட்டைப்பையில் வைக்கப்போகிறேன், உங்கள் அனுமதி கிடைக்குமா’’ என்று கேட்டுள்ளார்.

அதிகாரி நெகிழ்ந்து போய், அது என் பாக்கியம், நான் உன்னிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன் நிறைவேற்றித்தருவாயா என்று கேட்க என்ன சார் சீக்கிரம் சொல்லுங்கள் என்று கூற யாருக்கும் கிடைக்காத பாக்கியம் பெற போகும் அந்த பேனாவை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன் என்று தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம்.

அந்தச்சிறுவன் கருணாநிதி, ராஜாத்தி அம்மாளின் பேரன், கனிமொழியின் மகன் ஆதித்யா. அவர் இரவல் பெற்ற பேனாவை கருணாநிதியின் சட்டைப்பையில் கொண்டுபோய் வைத்தார்.

தாத்தா உயிருடன் இருந்திருந்தால் வழக்கம்போல் பேரன் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்திருப்பார். மீளா துயிலில் ஆழ்ந்த தாத்தாவின் விருப்பம் பேரனுக்கு தெரியும். அது நிறைவேறிய மனநிலையில் அனைவரும் அகன்றனர்.

தற்போது பேரன் ஆதித்தியாவின் இந்த செயல் வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்