ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரும் வழக்கு; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்- தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையையும் அதனால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து அப்பகுதியை ஆய்வு செய்யவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்  ஆலைக்கு  எதிராக  கடந்த  மே மாதம்  22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட்  ஆலையை மூட  தமிழக அரசு மே 28-ம் தேதி உத்தரவிட்டது.  அன்றைய தினமே ஆலைக்கு அதிகாரிகள்  `சீல்’ வைத்தனர்.

ஸ்டெர்லைட் மனு

இந்நிலையில், ஸ்டெர்லைட்  ஆலையை மூட உத்தரவிட்டு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா குழுமம் சார்பில், டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், ஸ்டெர்லைட்  ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை  ஆராய தனியாக  குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

கடந்த  ஜூலை 5-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா குழுமத்தின் மனு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

விசாரணைக்கு ஏற்பு

தொடர்ந்து ஜூலை 30-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற வேதாந்தா குழுமத்தின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இம்மாதம் 9-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்ற தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்த  மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்படலாம் என்று அனுமதியளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்,  கண்டிப்பாக எந்த விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது என உத்தரவிட்டது.

மனு தள்ளுபடி

ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக பிரிவு அலுவலகம் செயல்படலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி தள்ளுபடி செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயமே இறுதி முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குழு அமைப்பு

இந்நிலையில் இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் ஏ.கே.கோயல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட்  ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அப்போது, வேதாந்தா  குழுமத்தின் சார்பில்  ஆஜரான வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட  உள்ள  குழுவின் தலைவராக கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி நியமிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு தமிழக அரசு வழக்கறிஞரும் மற்றும் மற்றொரு மனுதாரரான வைகோவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, உரிய பெயர்களை பரிசீலனை செய்து குழுவின் தலைவர் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது. மேலும், இந்த குழுவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். இந்த குழு 2 வாரங்களுக்குள் பணியை தொடங்க வேண்டும். அதன் பிறகு 6 வாரங்களுக்குள் ஆய்வு பணிகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்பட அனுமதித்த தங்களது முந்தைய உத்தரவை மீண்டும் உறுதிபடுத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பான பணிகளையும் இந்த குழு ஆய்வு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்