திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு

By ப.கோலப்பன்

திமுகவின் நிதி மற்றும் சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஒரு வார துக்கம் அனுசரிப்புக்கு முன்பே மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மகன் மு.க.அழகிரி திங்கள்கிழமை போர்க்கொடி உயர்த்தினார்.

தன் குடும்பத்தினருடன் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அழகிரி அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னுடைய ஆதங்கத்தை என் தந்தையிடம் தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். அது என்ன என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள விசுவாசிகள் என்னையே ஆதரிக்கின்றனர்.காலம் இதற்கான பதிலைச் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

மேலும், அவருடைய ஆதங்கம் கட்சிக்குள்தான் என்றும், குடும்பத்திற்குள் இல்லை என்றும் அழகிரி கூறினார். கட்சிக்குள் மீண்டும் தான் சேர்த்துக்கொள்ளப்படுவேனா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை கூடுவதற்கு ஒருநாள் முன்பு அவர் இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், ஒருவார துக்க அனுசரிப்பு முடிவடையும் முன்னரே கட்சி குறித்து இவ்வாறு அழகிரிபேசியுள்ளார்.

அதன்பின்பு, 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அழகிரி பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறுகையில் “திமுகவின் சொத்துகள் மற்றும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. கட்சி நிதியை வட்டிக்கு விடும் அளவுக்கு அவர்கள் வளைந்துள்ளனர். இதனால் வரும் லாபம் கட்சிக்குச் சென்று சேருவதில்லை. அதனால் யார் லாபம் அடைகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் இப்போது கட்சிக்குள் இருந்தால், இதனையெல்லாம் தடுத்திருப்பேன். அதனால் தான் என்னை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கத் தயங்குகின்றனர். கட்சியின் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறினார்.

மேலும், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தான் ஆசைப்படவில்லை எனவும், தொண்டனாக தன் தந்தையைப் போல் கட்சியை வலுப்படுத்துவதே தனது எண்ணம் எனவும் அழகிரி தெரிவித்தார்.

மு.க.அழகிரி 1980-களில் திமுகவின் அதிகாரபூர்வமான நாளிதழான முரசொலியை நிர்வகிப்பதற்காக மதுரைக்கு இடம்பெயர்ந்தார். அப்போதிலிருந்து அவர் தென் தமிழகத்தில் கட்சிக்குள் பெருத்த செல்வாக்கை அடைந்தார். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் அழகிரி.

இந்நிலையில், திமுகவில் அழகிரி - ஸ்டாலின் இடையே மோதல் வலுத்தது. இதையடுத்து 2014 மார்ச் 25-ம் தேதி கட்சியில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

கருணாநிதி உயிருடன் இருந்தபோதே திமுகவில் மீண்டும் இணைவதற்கு அழகிரி பல பிரயத்தனங்களை எடுத்தாலும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும் தனக்கு கட்சிக்குள் பதவியோ அல்லது உரிய இடமோ வழங்கப்படாது என அறிந்த அழகிரி, தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இப்போது, மதுரையில் உள்ள அழகிரியின் ஆதரவாளர்கள் அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அழகிரியின் தீவிர ஆதரவாளரான மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் இசக்கிமுத்து கூறுகையில், “அழகிரி மதுரைக்கு வரவேண்டும் என நாங்கள் காத்திருக்கின்றோம். நாங்கள் அவரிடம் பேசியிருக்கிறோம். அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்து தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். மறைந்த தலைவர் கருணாநிதிக்கு தென் தமிழகத்தில் ஒழுங்கான இரங்கல் கூட்டங்கள் கூட நடைபெறவில்லை” எனத் தெரிவித்தார்.

''அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு தென் தமிழகத்தில் திமுக வலுவிழந்து விட்டது. திமுக அழகிரியை ஒரு அநாதை போன்று ஆக்கிவிட்டது. மற்ற கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு அங்கே நல்ல பெயர் கிடைக்கிறது'' என்றும் இசக்கிமுத்து கூறினார்.

அழகிரியின் திடீர் கலகம் குறித்துப் பேசிய திமுக எம்எல்ஏவும், ஸ்டாலின் ஆதரவாளருமான ஜெ.அன்பழகன், “அழகிரியைக் கட்சியிலிருந்து நீக்கும் முடிவை எடுத்தது எங்கள் தலைவர் கருணாநிதி. அவருடைய முடிவு குறித்து நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது” எனக் கூறினார்.

அழகிரி பலம் பொருந்தியவர் எனவும், அவரால் தான் மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது எனவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், ‘‘அழகிரியால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தொகுதியான சங்கரன்கோவிலில் அதே வெற்றியைப் பெற முடியவில்லை?” என திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் கேள்வியெழுப்புகிறார்.

அழகிரி தனக்கு வழங்கப்பட்ட தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை தன்னை நிரூபித்துக்கொள்ளப் பயன்படுத்தாமல், வீணடித்து விட்டதாகவும், சில திமுக மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

“முன்னாள் அமைச்சரான தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட அழகிரி, தன்னுடைய அரசியல் வாழ்வில் கடினமான காலத்தை எதிர்கொண்டார். ஆனால், அதன்பிறகு அவர் பழிவாங்கும் எண்ணத்துடனேயே இருந்தார்” என மற்றொரு திமுக மாவட்டச் செயலாளர் கூறுகிறார்.

திமுக ஆட்சியில் இருக்கும் போது மட்டுமே அழகிரி பிரகாசிப்பார். “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படும்போது அழகிரி அதுகுறித்து கேள்வியெழுப்பியிருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் தென்தமிழகத்தில் உள்ள கட்சியினர் அவர் பின்னே இருந்திருப்பர்” எனவும் அந்த மாவட்ட செயலாளர் கூறினார்.

முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம், இசக்கிமுத்து, மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.கண்ணன், முன்னாள் எம்எல்ஏ கௌஸ் பாஷா, திமுக பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் முபாரக் மந்திரி, மதுரை மாநகராட்சி முன்னாள் தலைவர் எம்.எல்.ராஜ் உள்ளிட்டோர் அழகிரி ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்