வருவாய் ஆய்வாளர் குடியிருப்பாக மாறிய மாதானம் பசுபதீஸ்வரர் கோயில்: பாடல் பெற்ற பழமையான தலத்தின் பரிதாபம்

அப்பர், அருணகிரிநாதரால் பாடப்பெற்றுள்ள பழமையான சிவாலயம் தற்போது வருவாய் ஆய்வாளர் குடியிருப்பாக அரசின் குறிப்புகளில் பதிவில் உள்ளது. இதனால் அங்கு கோயில் கட்ட வேண்டும் என்ற முயற்சிக்குத் தடை ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ளது மாதானம் கிராமம். இங்கு தற்போது கோயில் என்கிறபேரில் ஒரு கீற்றுக் கொட்டகையில் மிக பழமை யான சிவலிங்கம், அம்பாள் விக்கி ரகம், நந்தி ஆகியவை வைக்கப் பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பழமையான ஒரு சிவாலயம் இருந்துள்ளது.

இந்தப் புராதன உண்மையை, திருநாவுக்கரசரின் பாடலான ‘உஞ்சேனை மாகாளம்…’ என்று தொடங்கும் தேவார பதிகத்தின் 8-வது பாடலில் மாதானை என இவ்வூரை குறிப் பிட்டு பாடியுள்ளதில் இருந்து தெரியவருகிறது. இது தேவார வைப்புத் தலமாக அந்தக் காலத்தில் விளங்கியுள்ளது.

திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரும் இத்தலத்தில் இருந்த முருகப் பெருமானை கோடான மேரு என்று தொடங்கும் வரிகளில் போற்றிப் பாடியுள்ளார். பழம்பெருமையுடன் திகழ்ந்த இந்தக் கோயில் பிற்காலத்தில் இடிந்துபோய், வழிபாடு, நின்று போயுள்ளது.

சாதாரண கொட்டகையாக இருக்கும் வரையில் அதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், ஊர் மக்களின் விருப்பப்படி அங்கு ஒரு சிவாலயம் கட்ட முயற்சி செய்தபோது, அரசு நிர்வாகம் மூலமாக தற்போது தடை ஏற்பட்டுள்ளது.

அரசு ஆவணங்களின்படி அந்த கொட்டகை உள்ள இடம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பாக உள்ளது. அதனால் வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோர் வந்து வருவாய் ஆய்வாளர் குடியிருப்பான அந்த இடத்தில் கோயில் கட்டக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். இது ஊர் மக்களை வெகுவாக வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

இங்குள்ள கோயிலுக்கு இதுநாள் வரையிலும் ஒருகால பூஜை நடப்பதற்கு அர்ச்சகர் ஊதியமாக ரூ.200 அருள்மிகு பசு பதீஸ்வரர் கோயில், மாதானம் என்ற பெயருக்கு அனுப்பப் பட்டு வருகிறது. மேலும், கும்ப கோணத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடமிருந்து இம்முக வரிக்கு கடிதப் போக்குவரத்தும் நடைபெறுகிறது.

நிலைமை இவ்வாறிருக்க வருவாய்த் துறையினர் போடும் முட்டுக்கட்டையால் பக்தர்களின் முயற்சி தடைபட்டுள்ளதை அறிந்து கும்பகோணம் ஜோதி மலை இறைபணி திருக்கூட்டத்தார் முதல்வரின் கவனத்துக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களுக்கும் கடிதம் மூலமாக தெரியப் படுத்தியுள்ளனர்.

பசுபதீஸ்வரர் கோயில் இருந்த அதே இடத்தில் மீண்டும் சிவாலயம் உருவாக அரசு நிர்வாகம் தடையாக இல்லாமல் ஒத்துழைக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.

கொட்டகையில் உள்ள சிவலிங்கம், அம்பாள் சிலைகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE