பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கல்லூரி மாணவி பலி; பயிற்சியாளர் கைது: நோட்டீஸ் அனுப்பியது பாரதியார் பல்கலைக்கழகம்

By த.சத்தியசீலன்

பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, கல்லூரி மாணவி பலியான சம்பவத்தில், 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு, கல்லூரி முதல்வருக்கு பாரதியார் பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியது.

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரத்தில் கலைமகள் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 8 இளநிலைப் படிப்புகளும், 5 முதுநிலைப் படிப்புகளும், ஒரு முதுநிலை பட்டயப்படிப்பும் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் தலா இரு துறைகளில் எம்ஃபில்., பிஹெச்டி. படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடத்த நிர்வாகம் திட்டமிடப்பட்டது. இதையடுத்து வணிகவியல் துறை டீன் வி.விஜயலட்சுமி என்பவர் மூலமாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 3-ம் தேதி, பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி, இக்கல்லூரிக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், “தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில், ஆறுமுகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 12.07.2018 அன்று அவர் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்” என்று பதில் அனுப்பப்பட்டது.

இதன்படி வியாழக்கிழமை அக்கல்லூரி வளாகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. அப்போது இயற்கைச் சீற்றங்களால் பேரிடர் ஏற்படும் போது, அதில் சிக்கிக் கொண்டால் எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்வது என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன்படி கல்லூரி வளாகத்தில் இருந்த மூன்று மாடி கட்டிடத்தில், ஏறி இறங்குவதற்கு வசதியாக மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படும் கயிறு கட்டப்பட்டது. அதில் 3-வது மாடியில் இருந்து மாணவிகள் கயிற்றைப் பிடித்து கீழே இறங்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் தவறி விழுந்தால், அவர்களைத் தாங்கிப் பிடிப்பதற்கு நீளமான வலையைப் பிடித்தவாறு மாணவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இதற்காக 20 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இதில் பங்கேற்கும் போது அவர்கள் சற்று பதற்றத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதலில் இரண்டு மாணவிகள் கயிற்றைப் பிடித்து கீழே இறங்கினர். மூன்றாவதாக இறங்க மாணவி லோகேஸ்வரி தயார்படுத்தப்பட்டார்.

 

3-வது மாடியில் இருந்து கீழே இறங்க வேண்டும் என்பதால் அவர் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளார். அவரை கயிறைப் பிடித்து இறங்குமாறு பயிற்சியாளர் ஆறுமுகம் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு மாணவி லோகேஸ்வரி தயங்கியுள்ளார். கீழே மாணவர்கள் வலையைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த பயிற்சியாளர், மாணவி வலையில் விழுவார் என்று எண்ணி கீழே தள்ளியுள்ளார்.

3-வது மாடியில் இருந்து சுழன்றபடி மாணவி கீழே விழுந்தபோது, 2-வது மாடியில் இருந்த தடுப்பானில் பலமாக மோதி, அதில் நிலை குலைந்து கீழே விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.

மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு அழைத்துச் சென்ற போது, பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

 

மாணவியின் சொந்த ஊர் ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூர். அவரது தந்தை நல்லா கவுண்டர் (63). விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த அவர் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சென்னையைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை (வயது 31) கைது செய்தனர்.

தந்தை கண்ணீர்

இதுகுறித்து மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் கூறும்போது, “வியாழக்கிழமை மாலை, என் மகளுடன் படிக்கும் மற்றொரு மாணவி, லோகேஸ்வரி உடல்நிலை சரியில்லை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக போனில் கூறினார். நாங்கள் இங்கு வந்து பார்த்த போது இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து கல்லூரியில் இருந்து யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. உடன் படிக்கும் மாணவி கூறியிருக்காவிட்டால் எங்களுக்கு அதுவும் தெரிந்து இருக்காது. கூலி வேலை செய்து மகளைப் படிக்க வைத்தேன். அவளுடைய இறப்பு என மிகவும் மனவேதனையை அளித்துள்ளது” என்றார் கண்ணீருடன்.

 

உறவினர் கேள்வி

மாணவியின் உறவினர் சதீஷ் கூறும்போது, “லோகேஸ்வரியுடன் படிக்கும் மாணவிகளிடம் கேட்டேன். அந்த நிகழ்ச்சிக்காக எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யவில்லையாம். வலையைக்கூட மாணவர்கள் தான் பிடித்திருந்தனராம். ஒரே ஒருவர் மட்டுமே பயிற்சிக்கு வந்துள்ளார். அவருக்கு துணையாக யாரும் இல்லை. இது எப்படி பாதுகாப்பாக இருக்கும்” என்று கேள்வி எழுப்பினார்.

மாணவர் சங்கம் கண்டனம்

இது குறித்து இந்திய மாணவர் சங்க கோவை மாவட்ட தலைவர் எம்.தினேஷ்ராஜா கூறும்போது, “மாணவி லோகேஸ்வரி இறப்பு தொடர்பாக பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதற்கு ஏற்பாடு செய்தது கல்லூரி நிர்வாகம். கல்லூரி நிர்வாகம் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக அவரது குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும்” என்றார்.

பாரதியார் பல்கலைக்கழகம் நோட்டீசு

இது குறித்து பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ஆர்.சரவணசெல்வன் கூறும்போது, “பேரிடர் மேலாண்மை முகாமில் பங்கேற்ற மாணவி இறந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, கல்லூரி முதல்வருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி கூறும்போது, “மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்த பேரூர் காவல் ஆய்வாளர் மனோகரன், ஆலாந்துறை காவல் ஆய்வாளர் தங்கம் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பயிற்சியாளர் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்